வரி ஏய்ப்பு செய்த சென்னை நோக்கியா தொழிற்சாலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தடை எதுவும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி வரியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களும் தங்கள் நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக இந்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இது குறித்து விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தனது உத்தரவில் வரி தொடர்பான விசாரணை தனியாக தொடர்ந்து நடைபெறுமென்றும் இடைக்கால முன்வைப்புத் தொகையாக ரூ.2,250 கோடியை அரசுக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.