.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 18 December 2013

புதுமை படைத்தல்?


                                                                                                                                

புதுமை என்றாலே புது விஷயங்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு! புதுமை என்றால் முதலில் ஓர் அவா, தாகம். அடுத்தது மனிதர்கள். மூன்றாவது புதிய சிந்தனை. உலகத்தின் மிகச் சிறந்த புதிய சிந்தனைகள் தோற்றுப் போயிருக்கின்றன. ஏனென்றால் மனிதர்கள் அவற்றை முழுமனதாக ஏற்கவில்லை; அவர்கள் மனதில் ஆவல் பொங்கவில்லை.


புதுமைகள் புரட்சிகளாக மாறுவதற்கு, நம்மை முற்றிலும் புதிய தளத்துக்கு அழைத்துச் செல்வதற்கு, பேரவா கொண்ட மனிதர்கள் அவசியம் தேவை. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதிய சிந்தனையை வைத்துக் கொண்டு மக்கின்டாஷ் கணிப்பொறியை உருவாக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டு, ஒரு ‘வெறித்தனமான, மகத்தான கணிப்பொறியை’ உருவாக்கச் சொன்னார். கணிப்பொறி உலகத்தையே கவிழ்க்கப் போகிற ஒரு கணிப்பொறியை உருவாக்குவது அவர் நோக்கம்.


டேவிட் ஆகில்வி, வரலாறு படைத்த விளம்பரங்களைத் தயாரித்தவர்.  அவரும் புதிய சிந்தனையை பிடித்துக் கொண்டு வந்து யார் கையிலும் கொடுக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டார். ‘அழிவில்லாத சிரஞ்சீவியான படைப்புகள் எவற்றையாவது உருவாக்குங்கள்’ என்று மட்டுமே சொன்னார்.


புதுமை படைப்பதற்கான வழிகள்:


·         மனிதர்களை ஊக்கப்டுத்துவது, சக்தியை வெளியே கொண்டுவருவது, அதிகாரம் கொடுப்பது என்றெல்லாம் பேசுகிறோம். இதற்கு நிறைய நேரமும் சக்தியும் செலவிடுகிறோம். ஆனால் ‘ஊக்கம் கொடுப்பது’ என்பதை வெளியிலிருந்து செய்ய முடியாது. மனிதர்களுக்குள் ஏற்கனவே உறைந்து கிடக்கும் ஆர்வத்தில் நெருப்பு பற்ற வைப்பதே ஒரே வழி.

·         அதிகார அமைப்புகள், ஒரு நிறுவனம் நிலைபெற உதவும். ஆனால் அதே அமைப்புகள் நாம் போகும் பாதையையே கூடக்கட்டுப்டுத்தலாம். இந்த அமைப்புகளை மாற்றுவது என்றால் நிறுவனம் ஏன் அந்தத் தொழில்துறையே – இயங்கும் விதத்தை மாற்றவேண்டியிருக்கும்.

·         மனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து கனவு காணும்போது தொழில்துறைகளே மாற்றம் அடைகின்றன. நீங்கள் உங்கள் அணியுடன் சேர்ந்து கனவு காண்கிறீர்களா, அல்லது உங்கள் தனிப்பட்ட கனவுகளை கீழே இருப்பவர்களிடம் தெரிவித்து அவற்றை நிறைவேற்றச் சொல்கிறீர்களா?


புதுமையாளர்கள் கனவுக் கூட்டங்களை நடத்தி, அணியில் உள்ளவர்களையும் பயணத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். செய்யமுடியாத சாதனைகளைச் செய்யத் தூண்டுதல் தருகிறார்கள்.

 புதுமையாளர்கள் புதுமைகளைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே புதுமையாக்குகிறார்கள்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top