.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 9 October 2014

விஞ்ஞானிகளாக பிரத்யேக படிப்பு - திறன்மிக்கவரின் வாழ்வில் பூரிப்பு ...!!!




 விஞ்ஞானியாகும் லட்சியம் கொண்டவர்களுக்கான பிரத்யேக படிப்பாக பி.எஸ்-எம்.எஸ். ஐந்தாண்டு படிப்பு உள்ளது. டூயல் டிகிரி புரோகிராமான இப் படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக நுழைவுத் தேர்வு எழுதி சேரலாம். இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஐ.ஐ.எஸ்.இ.ஆர். (இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்) கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. போபால், கொல்கத்தா, மஹாலி, பூனே, திருவனந்தபுரம் ஆகிய ஐந்து பெரு நகரங்களில், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். இயங்கி வருகிறது.

இக் கல்வி நிறுவனத்தில் சாதாரணமாக சேர்ந்து விட முடியாது. அதி புத்திசாலித்தனம், படிப்பில் திறமை மிக்கவர்களை பல்வேறு கட்ட நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சோதித்து, சேர்த்துக் கொள்கின்றனர். பெரிய ஆராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும் கூடிய வாய்ப்பு கொண்ட படிப்பாக இது உள்ளது. அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளிலும், இவர்களுக்கு அமோக வரவேற்பு காத்திருக்கிறது. கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், நுணுக்கமான படிப்பு முறையை கற்பிக்கின்றனர்.

ஐந்தாண்டுகளில் முதல் இரண்டு ஆண்டுகள் பொறியியல் சார்ந்த அறிவியல் பாடத்தின் அடிப்படை விஷயங்களை ஆழமாக கற்பிக்கின்றனர். அடுத்த மூன்று, நான்காம் ஆண்டுகளில் அறிவியல் பாடத் திட்டத்தில் விரும்புகின்ற பிரிவை ஒவ்வொருவரும் தேர்வு செய்து படிக்க வேண்டும். இறுதி ஆண்டு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தை முழு அளவில் கற்பிக்கின்றனர்.

பேராசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் விஞ்ஞானியாகவும் ஆராய்ச்சியாளராகவும் அனைத்துவிதமான அறிவியல் துறை சார்ந்த தொழில்களில், இவர்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால், 100 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்யும் படிப்பாக அமைந்துள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பில் சேர துடிப்பவர்களின் எண்ணிக்கையும் மிகுதி. இப்படிப்பை பொருத்தவரை இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவியரிடையே பலத்த போட்டி நிலவுகிறது. கே.வி.பி.ஒய், ஜே.இ.இ. இன்ஸ்பியர் காலர்ஷிப் எக்ஸாம், ஆட்டிடியூட் தேர்வுகளில் வெளியிடும் தர வரிசை பட்டியலில்

முதலிடம் பிடிப்பவர்களுக்கு வாய்ப்பு ஒளிமயமாக உள்ளது. 5 கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் மொத்தம் 750 இடங்கள் உள்ளன. பி.எஸ்.எம்.எஸ். சேர விரும்புபவர்கள் இதற்கான தனி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். எந்தெந்த நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தால், இப் படிப்பில் சேர முடியும் என தெரிந்து கொள்ள வேண்டும். கே.வி.பி.ஒய் (கிஷோர் வைகியானிக் புரட்சான் யோஜ்னா) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தரவரிசை பட்டியலில் இருந்து 25 சதவீதத்தினரும், ஜே.இ.இ. (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) நுழைவுத் தேர்வின் தரவரிசை பட்டியலில் 50 சதவீதத்தினரும், மத்திய, மாநில பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மற்றும் இன்ஸ்பியர் காலர்ஷிப் தேர்விலும், ஆட்டிடியூட் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் 25 சதவீதத்தினர் என 100 சதவீத இடம் பூர்த்தி செய்யப்படுகிறது.

இவர்களுக்கு மாதம்தோறும் 5,000 ரூபாய் கல்வி உதவித்தொகை என ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாயும் ஆராய்ச்சி செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் முதல் இதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். http://www.iser.admission.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து மேலும் தகவல் தெரிந்து கொள்ளலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top