.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts
Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts

Sunday 24 November 2013

காதலுக்கு மன ஒற்றுமை போதும் - குட்டிக்கதைகள்!


ஒரு தவளைக்கு தன் குளத்தில் அடிக்கடி நீராடி செல்லும் தேவதை மீது காதல் ஏற்பட்டது ,

தன் காதலை அவளிடம் கூறியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை,

அவளிடம் காரணம் வினாவியது தவளை,
அதற்க்கு அவள் இன வேறுபாடு உள்ளது என்று சொல்லிட்டால்.

இதை கேட்ட தவளை அழுது தவித்தது, கோடை காலம் வந்தது ,
மழையின்றி அனைத்து குளங்களும் வற்றியது, ஆனால் தேவதை நீராடும் குளத்தில் மற்றும் நீர் வற்றவே இல்லை, ஆச்சரியத்தில் இருந்த தேவதை அந்த குளத்தில் உள்ள தாமரையிடம் கேட்டாள்,

அதற்க்கு தாமரை கூறியது, இக்குளத்தில் உள்ளது தண்ணிர் அல்ல
 உன்மேல் காதல் கொண்டதனால் தவளை வடித்த கண்ணீர் என்றது,

தேவதை அப்பொழுதுதான் தவளையின் உண்மை காதலை புரிந்து கொண்டு, காதலுக்கு மன ஒற்றுமை இருந்தால் போதும், இன வேற்றுமை தேவையல்ல என்று உணர்ந்து கொண்டாள்....!

காதலுக்கு மன ஒற்றுமை இருந்தால் போதும், மத வேற்றுமை தேவையல்ல என்பதற்கு இது ஒரு சான்று.

Saturday 23 November 2013

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும்
 மனைவியுடன்
 சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய்
 வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
 என்று புரியும் என்று அடிக்கடி சவால்
 விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
 இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
 குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
 சொல்லிக்கொடுத்து
 சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
 செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில்
 இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
 கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
 வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
 நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
 வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
 மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்
 ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
 கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
 உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
 வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
 என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
 கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
 கணவனுக்கும் என பைக்குள்
 பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
 இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
 குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
 படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
 கெடுத்து வச்சிருக்கே
 என்று பாய..

அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
 உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
 பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும்
 ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
 தொடங்கி நம் மூதாதையர்கள்
 சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும்
 பிள்ளைகளுக்கு வளமான
 வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
 ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
 அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
 இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
 குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
 இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில்
 ஒரு குடும்பம்
 மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
 கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
 செலுத்தாமல்
 அன்பால் சாதிக்கும்
 மனநிலையை கொண்டிருந்தால்தான்
 எல்லா வளமும்
 பெற்று பல்லாண்டு வாழ
 முடியும்...

Friday 22 November 2013

மனதின் அடிஆழத்தில் ஈரம்!

கடும் மழை. ஒருவர் மருத்துவமனை செல்ல வேண்டும். எல்லா ஆட்டோவும் நிற்காமல்செல்கின்றன. ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் இதுதான் தருணம் என்று முப்பது ரூபாய் தூரத்துக்கு 200 ரூ கேட்கிறார்.

வேறு வழியின்றி அந்த மனிதர் ஆட்டோவில் ஏறி வேறு ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு பாட்டியைக் கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை செல்கிறார்.

 Receptionist பாட்டியின் பெயரைக் கேட்க' இவர்.....இது  என் பாட்டி இல்லை. தெருவில் மயங்கிக்கிடந்தார். உதவும் எண்ணத்தில் அழைத்து வந்தேன் " என்றார்.

ஆட்டோ டிரைவர் மனதினுள் "இவ்வளவு நல்ல மனிதரிடம் அநியாயமாகப் பணம் பேசிவிட்டோமே என்று வேதனை அடைகிறார். வைத்தியம் முடிந்ததும் டிரைவரே பாட்டியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி உரியஇடத்தில் இறக்கி விட்டுப் பணம் வாங்க மறுத்து விடுகிறார்.

மனிதனிடம் மூன்று நிலைகள் உள்ளன.

1.சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கவேண்டும் என்று அற்பமாக நினைத்தல்

2.தானும் மனிதனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுதல் இரண்டாவது நிலை.

3.பிறரைவிட சற்றேனும் கூடுதலாக நல்ல குணத்தை வெளிப் படுத்த நினைத்தால் மூன்றாம் நிலை.

ஆட்டோ டிரைவரிடம் இந்த மூன்று நிலைகளும் படிப்படியாகக் காணப்படுகின்றன.ஒரு தெளிவான மனமாற்றம் ஏற்படுகிறது.

எல்லா மனிதரிலும் இப்படிப்பட்ட ஈர உள்ளம் இருக்கவே செய்கிறது.ஆனால் மனதின் அடிஆழத்தில்  உள்ளது.

ஆழ் துளை [borewell]  மூலம் ஈரத்தை வெளிக்  கொணர வேண்டியுள்ளது. இந்த borewell போடும் பணியினைச் செய்வது தான் நமது பெரியோரின் அறிவுரைகள், நன்னெறிப் பாட வகுப்புகள் முதலியன. குழந்தைகளின் உள்ளத்தில் ஈரத்தை வற்ற விடாமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! குட்டிக்கதைகள்!

 

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

 நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!

Wednesday 20 November 2013

புகழ் நம்மை தேடி வரும்.- குட்டிக்கதைகள்!

தன்னை தானே முடியாதென்று தாழ்த்த கூடாது :

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும்
 கலந்துரையாடலுக்கு அழைத்தார்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம்
 கொண்டு வந்தன.

ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.

 ""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்?
எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.

புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார்.

குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.

 ""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.

அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.

 ""இப்போது?''

 ""பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.

அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து, ""இப்போதுதெரிந்து கொண்டாயா உன்
 மதிப்பு? "ஒன்று' என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால்
 பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.

எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.

 ""ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான்.

நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக
 மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்,'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது.

இது போலதான் நாமுமம்..

நம்மிடம் ஏதாவது ஒரு திறமை இருக்கும்
 அதை சரியான நேரத்தில்.,சரியான இடத்தில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்

Tuesday 19 November 2013

ஒரு அப்பாவும், 4 வயது மகனும்!

 

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

 அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?

Monday 18 November 2013

அது என்ன பன்றி, பசு கதை!


ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன்.

அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள்.

அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான்.

துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்கு?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றி சொல்ல வேண்டும்" என்றார்.

அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான். பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும் தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன? என்று வருதத்தோடு கேட்டது.

அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், நீ இறந்து தருகிறாய், அதனால் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது." என்று கதையை கூறினார்.

பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல் தான், உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி மடத்தின் உள்ளே சென்றார்.

Tuesday 5 November 2013

பெற்றோரே முதல் தெய்வம்..(நீதிக்கதை)




சரவணன்...எப்போதும் காலை எழுந்ததும் தன் பெற்றோர்களுக்குத் தேவையான பணிவிடைகளை செய்த பின்னரே மற்ற வேலைகளைக் கவனிப்பான்.அதே நேரத்தில் அவனுக்கு கடவுள் பக்தியும் அதிகமாக இருந்தது.

ஒரு நாள் இறைவன் அவனுக்குக் காட்சியளித்தார்......

அப்போது அவன் தன் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தான்.அப்பணியை பாதியில் நிறுத்திவிட்டு இறைவனைக் காண விரும்பவில்லை..

' இறைவா....எனக்காக சற்றுநேரம் பொறுங்கள்..பெற்றோர்களுக்கான என் தினசரி கடமையை முடித்துவிட்டு வருகிறேன் என்றார்.

இறைவனும் வீட்டுத் திண்ணையில் அவனுக்காக அமர்ந்திருந்தார்.

பின்னர் அவன் இறைவனிடம் வந்து ' தங்களை தாமதப்படுத்தியதற்கு மன்னியுங்கள் ; என்றான்....

ஆனால் இறைவன் மன மகிழ்ச்சியோடு...'சரவணா...இறைவனே நேரில் வந்தும் ....பெற்றோர்கள் தான் முதல் கடவுள் என அவர்களுக்குப் பணிவிடை செய்த பின்னரே என்னைக் காணவந்த உன்னை பாராட்டுகிறேன்.அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை உணர்ந்தவன் நீ. வாழ்வில் எல்லா செல்வத்தையும் பெற்று வாழ்வாயாக...'என்று வாழ்த்திச் சென்றார்.

இதையே திருவள்ளுவரும் .....

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

              என்றுள்ளார்.
(எழுத்துக்கள் எல்லாவற்றிலும் முதலாக உள்ள எழுத்து ' அ'  அது போல ஒருவனுக்கு உலகில் முதல் முதலான தெய்வங்கள் 'தாய் தந்தையரே' )

Saturday 2 November 2013

நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)




கந்தனும், முருகனும் நண்பர்கள்.

கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான்.

ஒரு நாள் இருவரும் போகும் வழியில் கந்தன் ஒரு மூட்டையைப் பார்த்தான்.அதில் பொன்னும் ...மணியும் இருந்தது.

உடன் கந்தன்...' நான் புதையலைக் கண்டேன்' என்றான்.

அதற்கு முருகன் ...'இல்லை நண்பா..நான் என்று சொல்லாதே...நாம் புதையலைக் கண்டோம்..என்று சொல்' என்றான்.

தனக்கும் அதில் பங்கு உண்டு என்று மறைமுகமாக உணர்த்தினான்.

அவர்கள் சிறிது தூரம் சென்றதும்...அந்த மூட்டைக்கு உரியவன் ...கந்தனும்,முருகனும் தனக்கு சொந்தமான மூட்டையை எடுத்து செல்வதைப் பார்த்து அவர்களை நோக்கி
'திருடன்..திருடன்' என ஓடி வந்தான்.

உடன் கந்தன் முருகனிடம் ' நாம் ஒழிந்தோம்' என்றான்.

அதற்கு முருகன் 'இல்லை நண்பா...நீ முன்னால் சொல்லியபடியே சொல்..நீயே மூட்டையை கண்டெடுத்தாய். நாம்..இல்லை...என்று ஓடிவிட்டான்.

நமக்கு ஆதாயம் வரும்போது நம்முடனும்...ஆபத்து வரும்போது நம்மை விட்டு விலகி இருப்பவனையும் நாம் நண்பனாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
அவர்கள் நம் விரோதியை விட கொடியவர்கள்.

Friday 1 November 2013

' பெருக்கத்து வேண்டும் பணிவு ' (நீதிக்கதை)



மோகன் நன்கு படிக்கும் மாணவன்.

அவன் வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் First Rank வாங்கி வந்தான்.அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது.
சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.

அரையாண்டு தேர்வு வர இருந்தது...
மோகனின் பள்ளி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் 'எல்லோரும் நன்கு படித்து ......மோகனைப்போல முதல் மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

அதனால் மோகனுக்கு தலைக்கனம் அதிகமாகியது.

கர்வமும் ...தலைக்கனமும் சேர அவன் தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை.

தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது ....அவனது ரேங்க் 20 ஐ தாண்டியது.

ஆசிரியர் ...அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது.....இந்த தடவை முதல் ரேங்க் எடுத்த சீனு சொன்னான்.
'சார்...நீங்கள் எப்போதும் மோகனைப் புகழ்வதால் ...அவனைப்போல வரவேண்டும் என நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம்.ஆனால் அந்தப் புகழ்ச்சியால் கர்வம் அதிகமாக
மோகன் கவனம் படிப்பில் செல்லவில்லை' என்றான்.

சீனு கூறியதில் இருந்த உண்மையை உண்ர்ந்த ஆசிரியர் ...'மோகன் நாம் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளக்கூடாது...புகழ்ச்சி ஒருவனை மேலும் முன்னேறவிடாமல் தடுக்கும்...'என்றார் .மேலும் 'நான் உன்னை புகழ்ந்ததை உன்னை மேலும் ஊக்கிவிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்' ' என்றார்.

ஆசிரியர் கூறியதை மோகனும் உணர்ந்து கொண்டான்.

நாமும் எப்போதும் நமக்கு ஈடு யாருமில்லையென்று கர்வமோ அகம்பாவமோ கொள்ளக்கூடாது.நம்மை விட வல்லவர்கள் எல்லா துறையிலும் உண்டு என்று எண்ணவேண்டும்.

Wednesday 30 October 2013

'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான்.

தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்...அவற்றை அவன் ...தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் உணவாக போட்டு வந்தான்.

அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார்.

அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான் .ஊரார்..;ஏன் கவலையாக இருக்கிறாய்....? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?' என்றனர்.

;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன்.இப்போது எல்லா தக்காளிகளும் நன்றாக இருப்பதால்...நான் அவற்றிற்கு போட சொத்தை தக்காளிக்கு எங்கு போவேன்...?' அதுதான் என் கவலை என்றான்.

கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும் புத்தியை உபயோகிக்க தெரியாதவர்களுக்கு ...ஆண்டவன் அருள் கிடைத்தாலும் பயன் இல்லை...

Tuesday 29 October 2013

கேடு நினைக்கக்கூடாது (நீதிக்கதை)


ஒரு காட்டில் ...ஆடுகள் கூட்டம் கூட்டமாக போய் மேய்வது வழக்கம்.

அவ்வப்போது ...வழி தவறிப்போகும் ஆடுகளை ஓநாய் ஒன்று கொன்று உணவாக்கிக்கொள்வது வழக்கம்.

ஒரு நாள் அப்படி ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருந்த போது ...நரி ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓட்டம் பிடித்தது.

அதைப்பார்த்த ஆடுகள் ...'மீண்டும் திருட்டு  ஓநாய்  வந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதே!' எனக் கூச்சல் போட்டன.

ஆட்டுக்குட்டியை கவ்விக் கொண்டு ஓடிய நரி ஓநாயைப் பார்த்து 'ஓநாயே உன் மீது  இன்று எந்த தவறும் இல்லாதபோதும் அந்த ஆடுகள் உன் மேல் பழியை சுமத்துகின்றனவே' என்றது.

அதற்கு ஒநாய்.....'ஆடுகள் சொல்வதிலும் உண்மை உள்ளது.நான் பல முறை அவற்றின் மீது பாய்ந்து பல ஆடுகளைக் கவர்ந்து வந்திருக்கிறேன் .... ஆகவே எப்போது அவைகளுக்குக் கொடுமை நடந்தாலும் என் நினைவு வருகிறது' என்றது.

நாமும் யாருக்கும் எந்தக் காலத்திலும் சிறு கெடுதலும் செய்யக்கூடாது.அப்படி செய்தால் நாம் கெடுதல் செய்தவர்க்கு எந்த துன்பம் நேர்ந்தாலும் பழி நம்மை வந்துசேரும்.

கெட்டப் பழக்கங்களை விடவேண்டும்........(நீதிக்கதை)



ரமேஷ்...தன் நண்பர்களை கேலி செய்வது....அவர்களுடன் சண்டையிடுவது..சரியாக படிப்பதில்லை..பொய் சொல்வது என கெட்டப்பழக்கங்கள் அதிகம் கொண்டவனாகத் திகழ்ந்தான்.

அன்று அவனது தந்தை...ரமேஷின் பள்ளி ஆசிரியரைப் பார்த்து....'ரமேஷிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை போக்குவது எப்படி..' என்றார்.

அதற்கு ஆசிரியர்...'இன்று மாலை அவனை என்னை சந்திக்கச் சொல்லுங்கள்' என்றார்.

மாலை ரமேஷ் ஆசிரியரைப் பார்க்க வந்தான்.

ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டு மரங்கள் நிறைந்த தோப்பிற்குள் சென்றார்.

ரமேஷிடம் ஒரு சிறிய செடியைக் காட்டி அதைப் பிடுங்கச்சொன்னார். ரமேஷ் அதை வேருடன் பிடுங்கினான்.
பின்னர் சற்றே வளர்ந்த செடியை பிடுங்கச்சொன்னார்.ரமேஷும் சற்று கஷ்ட்டப்பட்டு அந்த செடியை வேருடன் பிடுங்கினான்.
பின் வளர்ந்த மரத்தை பிடுங்கச் சொன்னார்.ரமேஷ் எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை.

ஆசிரியர் சொன்னார். ';கெட்ட பழக்கங்களும் இப்படித்தான்..ஆரம்பத்திலேயே முயன்றால் திருத்திவிடலாம்.இல்லாவிட்டால் அவை மனதில் நன்கு வேரூன்றி விடும்.
பின்னர் அவற்றிலிருந்து விடுபடமுடியாமல் சமூகத்தில் அவன் கெட்டவன் என்ற பெயரிலேயே வாழ நேரிடும்' என்றார்.

புரிந்து கொண்ட ரமேஷ்...'அன்று முதல் நல்ல பையனாக நடந்து கொள்வதாக ஆசிரியருக்கு வாக்கு அளித்தான்.அதன்படியே நல்லவனாக மாறினான்.

கெட்ட பழக்கம் என்று தெரிந்தாலே அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.

Monday 28 October 2013

ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )



வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்திருந்தான்.அவன் எதிர்பார்த்தபடி பல பறவைகள் வலையில் சிக்கின.

அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.

வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய் வானத்தில் பறக்கும் பறவைகளை உன்னால் பிடிக்க முடியாது' என்றார்.

அதற்கு வேடன்..' ஆம்..ஒற்றுமையுடன் அவை பறக்கும் வரையில் அவற்றை என்னால் பிடிக்க முடியாது.ஆனால் அவை ஒற்றுமையுடன் எவ்வளவு தூரம் பறந்து செல்லும்...விரைவில் அவற்றின் ஒற்றுமை நீங்கிவிடும் ' என்றான்.

அதற்கேற்றாற்போல மாலை நேரம் வந்தது.வலையை தூக்கிக்கொண்டு பறந்த பறவைகள் ஒவ்வொன்றும் தன் கூடு இருக்கும் பக்கமே பிடிக்கவேண்டும் என அதனதன் திசையில் வலையை இழுத்தன....இதனால் வலை கிழிந்து வலையுடன் அவை கீழே விழுந்தன.

வேடனும் தான் நினைத்தது நடந்தது என மகிழ்ந்து பறவைகளை பிடித்து சென்றான்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்பதை பறவைகள் பின்னரே உணர்ந்தன..

Sunday 27 October 2013

' உணவை வீணாக்கக்கூடாது ' (நீதிக்கதை)


வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது என்றும் வாங்கி வரும்படியும் அம்மா சொன்னார்.

அப்பா அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது குட்டிக்கண்ணனும் சென்றான்.

அப்பா கடையிலிருந்து அரிசியை பையில் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க....அம்மா அதை அரிசி டப்பாவில் கொட்டினார்.

அப்போது சில அரிசி மணிகள் கீழே சிந்தின.அம்மா பையை மடித்து வைத்து..அதற்குரிய இடத்தில் வைக்கச்சென்றார்.

அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்த குட்டிக்கண்ணன் துடைப்பத்தை எடுத்து சிந்திய அரிசியை குப்பையில் தள்ள பெருக்கினான்.

வேகமாக ஓடி வந்த அம்மா...அவனிடமிருந்த துடைப்பத்தை வாங்கிப்போட்டுவிட்டு அரிசி மணிகளை பொறுக்கினாள்.

' அப்பா.. அவ்வளவு அரிசி வாங்கி வந்திருக்கிறார்....நீ சில அரிசிகள் சிந்தியதை பொறுக்குகிறாயே' என்றான் குட்டிக்கண்ணன்.

அதற்கு அம்மா ' கண்ணா ...இந்த அரிசியை கடவுள் பூமியில் நம்மை போன்றவர்கள் உயிர் வாழ படைத்திருக்கிறார்.
அதனால் அதை சிறிதளவும் வீணாக்கக்கூடாது....கீழே விழுந்த அரிசி நமக்கு வேண்டாமென்றால் அதை எடுத்து பறவைகளுக்கும்,எறும்புகளுக்கும் போடலாமே.
அவை அதை உண்ணும்.நாமும் எப்பொழுதும் எங்கும் உணவை வீணாக்ககூடாது என்றாள்.


குட்டிக்கண்ணனும் அது முதல் ஒழுங்காக வீணாக்காமல் உணவை உண்ணத்தொடங்கினான்.

Friday 25 October 2013

நரியின் புத்திசாலித்தனம் (நீதிக்கதை)

 
ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது.

அதனால் தனித்து அதற்கான உணவைத் தேடமுடியவில்லை.

அது தனக்கான உணவு தன்னை நாடி வர வேண்டும் என்பதற்காக ஒரு தந்திரம் செய்தது.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தியைப் பரப்பி..தன் குகையிலேயே இருந்தது.அதன் நலன் விசாரிக்க வரும் மிருகங்களை குகைக்குள்ளேயே அடித்துக் கொன்று உண்டு வந்தது.

ஒரு நாள் நரி ஒன்று சிங்கத்தின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க வந்தது.அது குகையின் வாயிலில் நின்று, 'சிங்க ராஜாவே! எப்படியிருக்கிறீர்கள்?" என வினவியது.

இந்த நரிதான் இன்றைய என் உணவு என்று தீர்மானித்த சிங்கம்,'நரியாரே!..என்னால் எழக் கூட முடியவில்லை..நீங்கள் குகைக்குள் வாருங்கள்' என்றது.

அதற்கு புத்திசாலியான நரி கூறியது,'சிங்க ராஜாவே! உங்கள் குகைக்குள் மிருகங்கள் வந்த தடயங்கள் தெரிகின்றது..ஆனால் அவை திரும்பிய தடயங்கள் இல்லை..அதனால் அம்மிருகங்களுக்கு என்ன ஆகியிருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.அதனால் நானும் உள்ளே வந்தால் திரும்ப முடியாது என உணர்கிறேன்'

இப்படிக் கூறிவிட்டு நரி அகன்றது.சிங்கம் தனது கெட்ட எண்ணம் நரியிடம் நடக்கவில்லையே என ஏமாந்தது.

இதற்கிடையே..நரியும் ,மற்ற மிருகங்களிடம் சென்று சிங்கத்தைப் பற்றி கூறி,'இனி யாரும் அதன் குகைக்குச் செல்ல வேண்டாம்' என்றது.

நம்மைச் சுற்றி நடைபெறுவதை உன்னிப்பாகக் கவனித்து...தீமைகளை உணர்ந்து, அதற்கேற்றார் போல புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டும்.

Thursday 24 October 2013

" கெடுவான் கேடு நினைப்பான்" (நீதிக்கதை)



ஒரு காட்டில் அரசன் ஒருவன் இருந்தான்.
அவன் நாட்டு மக்களிடம் கொடுமையாக நடந்து வந்தான்.
ஒரு நாள் அவன் வேட்டைக்கு காட்டிற்குப் போனான்.
அங்கு ஒரு நாய் நரி ஒன்றை துரத்தி ஒடியது.நரி அதனுடைய பொந்திற்குள் செல்வதற்குள் அதன் காலை நாய் கடித்து நரியை நொண்டியாக்கியது.

அதே நாய் ஊரில் ஒரு மனிதனைப் பார்த்து குரைக்க மனிதன் கல் எடுத்து அதன் மேல் எறிந்தான்,கல் நாயின் காலை தாக்கி அதை நொண்டியாக்கியது.
பின் அந்த மனிதன் ஒரு குதிரையில் ஏறி ஊருக்குச் சென்றான்.ஒரு பள்ளத்தில் குதிரை ஏறி இறங்கியபோது அந்த மனிதன் கீழே விழுந்து ...காலில் அடிபட்டு நொண்டியானான்.

இதையெல்லாம் பார்த்த அரசனுக்கு ...ஒருவருக்கு தீமை புரிந்தால் ..அவர்களுக்கு வேறொருவர் தீமை செய்வர் என்று புரிந்தது.

நாட்டிற்கு வந்த அவன் திருந்தி ....குடி மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

நாமும் ஒருவருக்கு கேடு இழைத்தால்...நாளை நமக்கு ஒருவர் கேடிழைப்பர்..என்பதை உணரவேண்டும்.

Wednesday 23 October 2013

'விட்டுக் கொடுக்கும் தன்மை' (நீதிக்கதை)



ஒரு காட்டின் நடுவில் ஒரு நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
 

ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்ல நதியின் மேல் ஒரு குறுகிய பாலம் மட்டுமே இருந்தது.ஒருவர் போனால் ஒருவர் எதிரே வரமுடியாது அந்த அளவு குறுகிய பாலம்.
 

காட்டில் இருந்த விலங்குகள் இந்த பாலத்தைக் கடந்தே நதியைக் கடந்தன.
 

ஒரு நாள் இரண்டு நரிகள்.ஒவ்வொன்றும் வேறு வேறு முனையில் இருந்து நதியைக் கடக்க வந்தன.
 

ஒரு கட்டத்தில் இரண்டும் எதிர் எதிரே நின்று மற்றதை வழி விடச் சொன்னது.
மற்ற நரிக்கு ஒரு நரி வழி விடவேண்டுமென்றால் திரும்பி கிளம்பிய முனைக்கேச் செல்லவேண்டும்.
 

ஆதலால்...இரண்டு நரிகளும் அதற்கு இணங்காமல் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் போட்டி இட்டு...சண்டை செய்து ...நதியில் விழுந்து மடிந்தன.
 

இவற்றை அடுத்தடுத்த முனைகளில் இருந்த ஆடுகள் பார்த்தன.
 

ஆதலால்....ஒரு ஆடு குரல் கொடுத்து மற்ற முனையிலிருந்த ஆட்டை முதலில் கடந்து வரச்செய்தது.பின்னர் குரல் கொடுத்த ஆடு அடுத்த முனைக்கு கடந்து சென்றது.
 

ஒற்றுமை,விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் நரிகள் உயிர்விட்டன....ஆனால் அந்த தன்மைகள் இருந்ததால் ஆடுகள் உயிர் பிழைத்தன.

Tuesday 22 October 2013

நரியும்..திராட்சையும்.. (நீதிக்கதை)




ஒரு காட்டில் ..நரி ஒன்று மிகவும் தாகத்துடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது.
அப்போது ஒரு கொடியில் திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்திருந்ததை அது பார்த்தது.
 

நம் தாகத்திற்கு ஏற்றது இந்த திராட்சைப் பழங்கள் என எண்ணியது.
ஆனால் பழங்கள் சற்று உயரத்தில் நரிக்கு எட்டாத இடத்தில் இருந்தது.
நரி சில அடிகள் பின்னுக்குச் சென்று வேகமாக ஓடி வந்து குதித்து பழங்களைப் பறிக்க எண்ணியது.ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.
 

அதுபோல சிலமுறை செய்தும்..அதனால் பழங்களை பறிக்க முடியவில்லை.
தன்னால் எட்ட முடியாத...தனக்குக் கிடைக்காத அந்த திராட்சைப் பழங்கள் புளிக்கும் என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.
 

நமக்குக் கிடைக்காத பொருள் ஒன்றின் மீது தவறு கண்டுபிடிக்கும் குணம் கூடாது.
 

மேலும் நரி தன் மூளையை உபயோகித்து..வேறு வழிகளிலும் முயன்றிருந்தால் பழம் அதற்குக் கிடைத்திருக்கும்.
 

ஒரு வழியில் நடக்காதது..வேறு வழியில் முயன்றால் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

Monday 21 October 2013

தெரியாததில் ஈடுபடக்கூடாது (நீதிக்கதை)

ஒரு அழகிய கிராமம்.அந்தக் கிராமத்திற்கு வெளியே பெரிய ஏரி ஒன்று இருந்தது.ஏரியின் கரைகளில் பழ மரங்கள்.அவற்றுள் குரங்குகள்..கிளைக்குக் கிளை தாவி பழங்களைப் பறித்துத் தின்று தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தன.
 
 
அக்குரங்குகளில் குட்டிக் குரங்கு ஒன்றும் இருந்தது.போவோர் வருவோர் ..என அனைத்து பேருடன் அதனுடைய சேட்டை அதிகமாக இருந்தது.


ஒருநாள் மீனவன் ஒருவன் ..அந்த ஏரிக்கு வந்து மீன் பிடிக்க வலையை வீசினான்.நிறைய மீன்கள் வலையில் சிக்கின.அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு, வலை ஈரமாய் இருந்ததால்...கரையில் அதைக் காயப்போட்டுவிட்டுச் சென்றான்

.
அந்தக் குட்டிக் குரங்கு அவன் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் சென்றதும்..அவன் உலர்த்திச் சென்ற அவ்வலையின் மையத்தில் அமர்ந்துக் கொண்டு..வலையை எடுத்து ஏரியில் வீசப் பார்த்தது.
 

ஆனால் வலை இறுகி..அதன் மையத்தில் அமர்ந்துக் கொண்டிருந்த குரங்குக் குட்டி வலையில் வசமாக சிக்கிக் கொண்டது.பயத்தால் அலற ஆரம்பித்தது.மற்ற குரங்குகள் வந்து அதைக் காப்பாற்றப் பார்த்தன.ஆனால் அது நைலான் வலையானதால் அவற்றால் அதைக் கடிப்பது கூட சிரமமாய் இருந்தது.
 

அப்போது வலையை எடுத்துப் போக மீனவன் வந்தான்.குரங்கு மாட்டிக் கொண்டு அவதிப்படுவதைக் கண்டு வருந்தி அதை விடுவித்தான்.பின் குட்டியிடமும், மற்ற குரங்குகளிடமும்  'தெரியாத காரியங்களில் ஈடுபட்டால் இப்படித்தான் அவதிப்பட நேரிடும்.எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும்..அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு ஈடுபட வேண்டும்.அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்' என்று அறிவுரைச் சொன்னான்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top