ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் – அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன.
ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் – அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்பட்சத்தில் அவை ரசிக்கப்படுகின்றன, விலைகொடுத்து வாங்கப்படுகின்றன, கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு வணங்கப்படுகின்றன.
ஒரு படைப்பாளி பெருங்கதை புனைபவனாக இருந்தால் – அவனது கதாபாத்திரங்கள் அறம் உரைப்பவையாக, மானுட வாழ்வியலை உணர்த்துபவையாக இருந்தால், அவை உயிருள்ள பாத்திரங்களாகவே உணரப்பட்டு உதாரணபுருஷர்களாக்கப்படுகின்றன. அவ்வகையில்தான் என்றைக்கோ எழுதப்பட்ட பல்வேறு வகையான இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் இன்றைக்கும் நம்முடன் உணர்வுபூர்வமாக உறவாடிக் கொண்டிருக்கின்றன.
நாவல் இலக்கிய உலகில் கதை மாந்தர்களாக வார்க்கப்பட்ட குறிஞ்சி மலர் “அரவிந்தன்’, பொன்னியின் செல்வன் “வந்தியத்தேவன்’, புத்துயிர்ப்பு “நெஹ்லூதவ்’ போன்ற பல உன்னத கதாபாத்திரங்களை நாம் பட்டியலிட முடியும். போற்றிப் பின்பற்ற மட்டுமல்ல, எவரும் பின்பற்றக் கூடாத எச்சரிக்கைகளாகவும் சில கதாபாத்திரங்கள் வார்க்கப்படுவது உண்டு.
அந்தவகையில் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திர வார்ப்புகளில் மிகப்பெரியதொரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய திரைப்படங்களின் கதாநாயகர்களாக படைக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் குதர்க்கவாதம் செய்கிறார்கள். கூச்சம் எதுவுமற்று குழுவாகச் சேர்ந்து மது குடிக்கிறார்கள். பேசிக்கொண்டே சிகரெட்டைப் பற்றவைத்து, புகைப்பது என்பது வாழ்வியலோடு இரண்டறக் கலந்திருக்க வேண்டிய இயல்பான நடைமுறையென்று மறைமுகமாக உணர்த்துகிறார்கள். பெற்றோருக்கும் குடும்ப உறவுகளுக்கும் எவ்வகையிலும் கட்டுப்பட மறுக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் படிப்பதாகக் காட்டப்பட்டால், அங்கு படிப்பது ஒன்றைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள். குறிப்பாக, பெண்களை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார்கள். தங்களது ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் கேலி செய்கிறார்கள்.
எதைச் செய்தேனும் “எடுபட்டு’ விடவேண்டும், “பெருவெற்றி’ பெற வேண்டும் என்கிற வணிக வலுக்கட்டாயமே தமிழ்த் திரையின் படைப்பாளிகளை இப்படியான கதாபாத்திரங்களை படைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இளவயது ஆண்களையும், பெண்களையும், மாணவ மாணவிகளையும் ஈர்த்து, திரையரங்கில் அவர்களைக் கைதட்டவைத்துப் பெருங்குரலில் சிரிக்கவும் வைத்துவிட்டால் நமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்கிற படைப்பாளிகளின் மனோ நிலையே இன்றைய “திரை’யின் கதாபாத்திர வார்ப்புகள் பெருவீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
நமது சமூகத்தில் பிள்ளைகள் பதின்மவயதை அடையும்வரை அவர்களால் பெற்றோர்களுக்கு எத்தகைய சமூக இடர்பாடுகளும் நேர்வதில்லை. அதற்குப்பிறகு அதாவது பதிமூன்று வயது தொடங்கி ஏறக்குறைய இருபத்தைந்து வயதுவரை பெற்றோர்களுக்கு ஒவ்வாதவர்களாக மாறுகின்றனர். இன்று மிக எளிதாக வசப்பட்டு விட்ட அலைபேசி, இணையம், முகநூல் போன்ற தகவல் தொடர்பு ஊடக வசதிகள் இன்றைய பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவுகளோடு பேச விருப்பமற்றவர்களாக மாற்றிவிட்டன. அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய வேண்டும் என்று கவலையுற்று கருத்து தெரிவிக்கிற, அல்லது கண்டிப்பு காட்டுகிற குடும்ப உறவுகளை, தங்கள் மகிழ்ச்சிக்கு எதிரானவர்களாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.
இன்றைய நமது பிள்ளைகள், பெற்றோர்களின் கருத்துகளுக்கும், கண்டிப்புகளுக்கும், அதற்கு முற்றிலும் எதிரான திரைக் கதாநாயகர்களின் தூண்டுதல்களுக்கும் இடையில் அகப்பட்டு அல்லற்படுகின்றனர்.
எதை எதை எடுத்துச் சொன்னால் இளையோரும் மாணவரும் உடனடியாக கேட்டுக்கொள்வார்களோ அதை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதிலும்,
எதை எதை எடுத்துக் காட்டினால் அவர்கள் பரவசப்பெருக்கடைந்து பார்ப்பார்களோ அதை மட்டுமே காட்ட வேண்டும் என்பதிலும், யார் யாரை தங்களுக்கு ஒவ்வாதவர்களாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறிவைத்துக் கேலி செய்கிற வேலையை மட்டுமே செய்யவேண்டும் என்பதிலும் இன்றைய நமது திரைப்படைப்பாளிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். போக்கிரித்தனங்கள் நிறைந்தவனாக, பொறுப்பற்றவனாக, குடிகாரனாக, உழைப்பதற்கு விருப்பமற்றவனாக, தனக்கு எவ்வகையிலும் பொருந்தாத தெருச்சண்டைகளில் பலரோடு மோதி வெல்பவனாக, வலிய வலியச் சென்று காதலிப்பவனாக சித்திரிக்கப்படுகிற ஒரு திரைப்பாத்திரம், அதுபோன்ற உணர்வுப் போக்குடைய இளைஞர்களுக்கான வலிமையான மறைமுக அங்கீகாரமின்றி, வேறு என்ன?
தங்களது பிள்ளைகள் நன்றாகப் படிக்கவேண்டும், படிப்புக்கேற்ற வேலைகளைப் பெற்று அவர்களின் வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதுதான் நமது சமூகத்தில் பிள்ளைகளைப் பெற்ற அனைவரும் காண்கின்ற பெருங்கனவாகும். ஆனால், அவர்களது கனவுகளுக்கு முற்றிலும் முரணான குணக்கூறுகளைக் கொண்டவர்களைத்தான் அவர்களது பிள்ளைகள் திரையரங்குகளில் கதாநாயகன்களின் வடிவில் பார்த்து ரசித்துப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசக்கின்ற ஒரு நிஜமாகும்.
குடும்பம் எனும் அமைப்பும் விதம் விதமான பணிப் பயிற்சி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து பெரும் பொருள்செலவில் ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்கிவரும் இளைய சமுதாயச் சக்திகளை, அவர்களுக்கு வெளியே இருக்கிற ஓர் ஊடகம் ஒரே நாளில் மாற்றிவிடுகிறது. மது அருந்தக் கூடாது என்பதை எழுத்துகளின் வாயிலாகவும், வார்த்தைகளின் வாயிலாகவும் வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும் சமூகவியலாளர்கள், மது அருந்தும் காட்சிகளை விதம்விதமான கோணங்களில் வண்ணமயமாக ஒளி ஒலி காட்சிகளாகக் காட்டுகிறவர்களிடம் பரிதாபமாகத் தோற்று விடுகின்றனர்.
மது, புகை, வெட்டுக்குத்து வன்முறை, போக்கிரிக் கலாசாரம், பொத்தாம் பொதுவான பொறுப்பற்ற பகடித்தனங்கள் போன்ற அனைத்துக் கூறுகளுக்குமான மறைமுகமான விளம்பரப் பொதுமேடையாகவும் அவற்றையெல்லாம் உரத்த குரலில் அங்கீகரிக்கும் நிறுவனமாகவும் இன்றைய நமது தமிழ்த்திரை மாற்றப்பட்டுவிட்டது. இந்தக் கூறுகளோடு காதல் கவர்ச்சி போதையையும் போதுமான அளவுக்குக் கலந்து தந்து அது தன் வணிகத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்துவிட்டு அவற்றில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சுயத்தோடு விளங்குகிறவர்களாக நமது பெரும்பான்மை மக்கள் இல்லை.
ஓர் இளைஞன் நல்ல தகுதிகள் ஏதுமற்றவனாக இருந்தாலும்கூட அவன் தான் சந்திக்கும் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கும் தகுதியை மட்டும் உடையவனாக இருக்கிறான் என்பதே கடந்த சில ஆண்டுகளாக நமது தமிழ்த்திரையுலகம் தமது கதாபாத்திரங்களின் வாயிலாக முன்வைக்கும் ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது.
உலகின் எந்த நாட்டுத் திரையுலகமும் காதலைப் பிடித்துக்கொண்டு இதுபோன்ற ஆட்டங்களை ஆடுவதில்லை. சில கோயில்களில் பம்பையும் உடுக்கையும் சேர்ந்து பரவசம் மிகுந்த இசையை வேகவேகமாக எழுப்பி சன்னதம் வந்து ஆடும் சாமியாடிகளை உருவாக்குவது போல, நமது தமிழ்த் திரைப்படங்கள் காதல் உடுக்கையை வேக வேகமாக அடித்து அடித்து காதல் சாமியாடிகளை உருவாக்கி அவர்களை வெறி நடனமாடி வீதி உலா வரச் செய்கின்றன. வேதனை மிகுந்த இத்தகைய போக்குகளின் விளைவுகளைத்தான் நம் சமூகம் அனுபவித்து வருகிறது. பெற்றோரும் அனுபவித்து வருகின்றனர். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்தால் நமது தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவுக் கருவிகள், ஒலிப்பதிவுக் கூடங்கள், பாடல் பதிவுக் கூடங்கள் என ஒவ்வொன்றும் காதல் உணர்வு ஊற்றெடுக்கப் பயன்படுத்தப்படும் உடுக்கைகளாகவே தெரிகின்றன.
சிந்திக்கிற – படிக்கிற, மக்கள் குறைவாகவும், பார்க்கிற – கேட்கிற மக்கள் பெருவாரியாகவும் இருக்கிற நமது சமூகத்தில், அதிலும் படிக்கிற மக்களே கூட பார்க்கிற – கேட்கிற கலாசாரத்திற்குத் தங்களைப் பழகிக்கொண்டுவிட்ட இன்றைய சூழலில் ஊடகங்களிலேயே பெரும் ஊடகமாக } குறிப்பாக அனைத்து ஊடகங்களுக்கும் தாய் ஊடகமாக } நிலைபெற்றுவிட்ட திரைப்படத்தின் சமூகப்பொறுப்பு எத்தகையது என்பது உள்ளார்ந்த அக்கறையோடும், தொலைநோக்கு பார்வைகளோடும் உணரப்படவில்லை. ஒரு அபத்தத்தை எழுதுவதும், பேசி நடிப்பதும், வடிவமைப்பதும் ஒரே ஒரு முறைதான் நடக்கிறது. ஆனால், அந்த அபத்தம் எத்தனை ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் வெளியாகி மக்கள் மனதில் திணிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பதை ஊடக உலகம் நினைத்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.
செய்ய வேண்டியவற்றைச் செய்வதைக் காட்டிலும், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல் இருப்பதுதான் மனிதகுலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு அடிகோலும். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நம் தமிழ்த் திரையுலகம் எதை எதைச் செய்து கொண்டிருக்கிறது, எதை எதைச் செய்யாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். படைப்பாளிகளுக்கு இருக்கும் படைப்புரிமை என்பது சமூகத்தைப் பாழ்படுத்தும் உரிமையாக மாறலாகாது!