தமிழ் சினிமாவில் இது விஜயசேதுபதி நேரம் போல… சமீபத்திய அவர் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை பிடித்துக் கொள்கிறது.
படத்தில் கதையிருக்கிறதா… லாஜிக் இருக்கிறதா… நடிப்பு இருக்கிறதா… அது இருக்கிறதா… இது இருக்கிறதா… என்றெல்லாம் கேட்காமல் காசு கொடுத்து பார்க்கிறவன் ரசித்து விட்டு போகிறானா… பணம் போட்டு படம் எடுத்தவன் வசூலை வாரிக் கொள்கிறானா என்று மட்டும் பார்த்தால் இப்போதைய தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த ஓட்டும் விஜயசேதுபதிக்குத்தான் விழும்போல…
‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தின் பெயர் என்னவோ தூய தமிழில் இருந்தாலும் படம் முழுக்க வசனங்கள் மெட்ராஸ் மொழி பேசுகிறது.
காலையில் தொடங்கி ராத்திரி வரைக்கும் குடித்து விட்டு சும்மா ஊதாரியாக திரிந்து கொண்டு அதே கேப்பில் எதிர்வீட்டில் இருக்கிற சுவாதியை விரட்டி விரட்டி ஒருதலையாக காதலிக்கும் சுமாரான மூஞ்சு கொண்டவன் கதையின் ஹீரோவான விஜயசேதுபதி.
படத்தில் ஹீரோவுக்கு குமரவேல் என பேர் வைத்திருந்தாலும் அந்த கேரக்டரை சுமார் மூஞ்சி குமாரு என்றே அழைக்கிறார்கள்.
சுமார் மூஞ்சி குமாருவின் ஒருதலைகாதல் தொல்லையால் ஹீரோயின் சுவாதியின் அப்பா பட்டிமன்ற ராஜா தாதாவான அண்ணாச்சி பசுபதியின் உதவியை நாடுகிறார்.
ஒரு ஒயின்ஷாப் மாடியில் ஆரம்பிக்கிற கதையின் பயணம் சில நேரங்களைத்தவிர மற்ற பெரும்பாலான நேரங்களில் ஒயின்ஷாப்பிலேயே தங்கி விடுகிறது.
பசுபதியின் ஆட்களால் சு.மூ.குமாரான ஹீரோ அடித்து துவைக்கப்படுகிறார்… அடி வாங்கிய வேதனையை மறக்க நள்ளிரவில் சரக்கு தேடி அலைகிறார்.
இது மெயின் கதை…
சு.மூ.குமாரு சரக்கு தேடி அலையும் அந்த ராத்திரியில்… ஒரு ஒயின்ஷாப்பில் சரக்கு அடிக்கும் ஒருவரை சத்தமில்லாமல் கொலை செய்கிறார்கள்.
அது தெரியாமலேயே அந்த ஒயின்ஷாப்பில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து விட்டு பைக்கில் திரும்புகிற அஸ்வின் போதையில் எதிரே வந்த ஒரு பெண் மீது மோதுகிறார்.
அந்த பெண் சுயநினைவை இழக்கிறார். அஸ்வினை தேடி அவனது காதலி வருகிறார். காயமடைந்த பெண்ணுக்கு உனடியாக ரத்தம் தேவைப்படுகிறது. அந்த ரத்தப்பிரிவு சிலருக்கு மட்டுமே இருக்கும் அரிதானது.
அந்த சிலரில் நமது ஹீரோ சு.மூ.குமாரும் ஒருவர். அவரைத்தேடி அஸ்வினும் அவனது நண்பர்களும் புறப்படுகிறார்கள்….
சு.மூ.குமாரோ சரக்கு தேடி அலைகிறான்…
ஒயின்ஷாப்பில் கொலை செய்த நான்கடவுள் ராஜேந்திரனும் அவனது நண்பனும் கள்ளக்காதலியை பார்க்க போகிறார்கள்… போகும்வழியில் சரக்கு தேடி அலையும் சு.மூ.குமாருவின் செல்போனை திருடிக் கொள்கிறார்கள்…
ஒயின்ஷாப்பில் அண்ணன் கொலையானதை டிவியில் பார்த்து அதிரும் பரோட்டா சூரி அண்ணன் வீட்டு வருகிறான்… அங்கே அண்ணிதான் ஆள்வைத்து கொலை செய்ததை கண்டுபிடிக்கிறான்…
சு.மூ.குமாரு சரக்கு அடிக்காமல் இருந்தால் தான் ரத்தம் கொடுக்க முடியும் என தேடி அலையும் நண்பர்கள் கையில் ஹீரோ சிக்கினானா…
புருஷனை போட்டுத்தள்ளிய அண்ணியை பரோட்டா சூரி என்ன செய்தான்…
சு.மூ.குமாருவின் ஒருதலைகாதல் ஜெயித்ததா…
கொலையாளிகள் பிடிபட்டார்களா…
இதற்கெல்லாம் கிளைமாக்சில் விடை சொல்கிறார் இயக்குனர் கோகுல்.
படம் வேகமாக போகிறது… போகிற போக்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதையை வைத்து அதை மெயின் கதையோடு கோர்த்து ஒரு சினிமாவாக்கியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.
மகேஷ்முத்துசாமியின் காமிராவுக்கு பெருசாக வேலை எதுவும் தராத படம் இது. காரணம் ஒயின்ஷாப் விட்டால் ஒயின்ஷாப் இங்கே புதுசாக சொல்ல எதுவும் இல்லை…
சித்தார்த் விபின் இசையில் கானாபாலாவின் பாடலைத்தவிர மற்றது ஹீரோ பேருக்கு முன்னால் இருப்பதுபோலத்தான்.
ரொம்ப நாளைக்கு பிறகு ராஜூசுந்தரம் டான்ஸ் ஆடி நடனம் அமைத்திருக்கிறார். லியோ விஷன் ராஜ்குமார் தயாரிப்பில் ஜேஎஸ்கே சதீஷ்குமார் வெளியிட்டிருக்கிற ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் ஹீரோவின் பேரான ‘சுமார் மூஞ்சி குமார்’ போலவே சுமார் ரகம்தான்..!