சோழரின் கலைப்பொக்கிஷங்கள் சொக்க வைக்கும் கட்டடக்கலைக்கு சொந்தக்காரர்களில் சோழமன்னர்கள் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை சோழரின் கலைப்பொக்கிஷங்களாக இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றுமே உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருப்பது உலகளாவிய பெருமை. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்: தஞ்சைப் பெரிய கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். கட்டிய புதிதில் ராஜ ராஜேஸ்வரம் என்றும், பின்னர் வந்த நாயக்கர்கள் காலத்தில் பெருவுடையார் கோவில் என்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பெரிய கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பரந்த விரிந்து கிடந்த சோழப்பேரரசுக்கு கிடைத்துக் கொண்டிருந்த தாரளமான வருவாய், ஆள்பலம், ராஜ ராஜனின் தீவிர சிவபக்தி போன்றவையே கோவில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதற்கு முக்கிய காரணங்களாகும். இதன் கட்டுமானப்பணி கி.பி.1003-ம் ஆண்டில் தொடங்கி கி.பி.1010-ம் ஆண்டில் ஏழு ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரதான கோவில் தவிர சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி, கருவூர்த்தேவர் கோவில்களும் இங்குள்ளன. கோபுரத்தின் மீதுள்ள மிகப்பெரிய விமானமும், 14மீட்டர் உயரம், 7மீட்டர் நீளம், 3மீட்டர் அகலம் கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தியும் இன்றளவும் நீடிக்கும் ஆச்சரியங்கள். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கோவிலைக் கட்டி முடித்த பிறகும் தனி அக்கறை செலுத்திய ராஜராஜன், கோவிலின் அன்றாடப் பணிகளுக்காக ஏராளமான பூசகர்கள், ஓதுவார்கள், பணியாளர்களை நியமித்துள்ளான். 50ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோவிலில் இருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில்: இது ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவிலாகும். தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இது கட்டப்பட்டதாம். தஞ்சைப் பெரிய கோவில் மிடுக்கு என்றால் இது நளினம். அழகும், ஆச்சரியமும் கலந்த புதினம். கோவில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் பின்னணியும் சுவாரஸ்யம் நிறைந்தது. கங்கை உள்பட இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி முழுவதையும் வென்ற ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழன் என அழைக்கப்பட்டான். அதன் நினைவாகவே கங்கைகொண்ட சோழபுரம் என இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனுக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்: கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் என்றாலும் அவனது முன்னோர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பின்பற்றிய மகேஸ்வர சிவம் (பெரும் கடவுள் சிவனே) என்ற தத்துவம் இங்கு காணப்பட-வில்லை.
மாறாக, பெண்ணின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைக்கப்-பட்டுள்ளது. இங்கு அம்மனுக்காக தனி சன்னதி உள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவிலின் மேற்கூரைகளிலும், சுவர்-களிலும் நடன மங்கைகளின் சிற்பங்கள் காணப்-படுகின்றன.
தஞ்சைப் பெரிய கோவில் 1987ம் ஆண்டிலும், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்கள் 2004ம் ஆண்டிலும் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, இன்றும் வாழும் பெருங்கோவில்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன. எப்படிப் போகலாம்? சென்னையில் இருந்து தஞ்சாவூர் சுமார் 350 கி.மீ தூரம். முக்கிய நகரங்களில் இருந்து தஞ்சாவூருக்கு நல்ல சாலை வசதி உண்டு. ரயில்நிலையம் அமைந்துள்ளது. திருச்சியில் |