உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு தான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம் தான்.அதிலும் இப்போது பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்புவரை தமிழக மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் வரகு, கேழ்வரகு, கவுளி அரிசி, தினை, சாமை, குதிரைவாலி போன்ற புஞ்சை தானியங்களை சார்ந்து இருந்தது. பசுமைப்புரட்சிக்குப் பின்னர்தான் அனைவரும் நெல்லரிசியை முதன்மையாகக் கொண்டு தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டனர்.
அதுமட்டுமின்றி நெல்சோறு உண்பவர்கள் சமூகத்தில் மேலானவர்கள், சிறுதானியங்களை உண்போர் கீழானோர் என்ற கருத்து உருவானது. இதனால் சிறுதானியங்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.
இதற்கிடையில் நெல் அல்லது கோதுமை என்ற பசுமைப்புரட்சியின் ஒற்றைச் சிந்தனையிலிருந்து விடுபட்டு, வரகு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி மாறினால் தான் மண்ணின் வளத்தையும், சூழல் பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும்.
சமீபத்தில் இந்திய மருத்துவக்கழகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 42 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நோய் அறிகுறிகளுடன் 30 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உணவுப்பழக்க வழக்கம் மாறிவிட்டதால் சத்தான உணவு என்பது கேள்விக்குறியாகி விட்டது.
நெல், கோதுமை, வாழை, கரும்பு ஆகியவற்றை காட்டிலும் சிறுதானிய பயிர்களே பல் உயிர் பெருக்கத்திற்கு காரணமாக உள்ளன. வரகு, சாமை, கம்பு, பனிவரகு, கேழ்வரகு, தினை ஆகியவற்றை தேடி உண்ண துவங்க வேண்டும்.,
கம்பு, சோளம்: கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது.
உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகு, ராகி: வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
சம்பா அரிசி: நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும்.
இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.
சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.
ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா,கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.
கோதுமை, பார்லி: அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ்,இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன.இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
எண்ணைய், நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.
நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.