ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு போட்டியாக 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாடல்கள் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியாகிறது. விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலையொட்டி ஜனவரி 14–ந்தேதி வருகிறது. தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2' படத்தை ஜனவரி 26–ல் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
'கோச்சடையான்' படம் 700 தியேட்டர்களில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் விஜய், அஜீத் படங்களுக்கு தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் ஒரு படத்தை சில தினங்கள் தள்ளி ரிலீஸ் செய்யலாமா என்று யோசிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கமல் படமும் போட்டிக்கு வருவது வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். பெரிய படங்கள் 20 நாட்கள் வரை தியேட்டர்களில் ஓடுகின்றன. படம் ஹிட்டானால் 50 நாட்கள் வரை ஓட்டுகிறார்கள். எனவே ரஜினி, விஜய், அஜீத் படங்கள் ரிலீஸ் ஆனால் பிப்ரவரி மாதம் வரை அந்த படங்களையே திரையிட தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்வார்கள்.
'விஸ்வரூபம் 2' படம் இடையில் ரிலீசாகும் போது 3 படங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தியேட்டர்களையே 'விஸ்வரூபம் 2' படத்துக்கும் பிரித்து கொடுக்க நேரும். இதனால் வசூல் பாதிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். நான்கு படங்களுக்கும் பாதிப்பு வராத வகையில் எவ்வாறு திரையிடுவது என்று ஆலோசனை நடக்கிறது.