சோர்வு என்பது இயற்கையான ஒன்றுதான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு உள்ளது போல் நல்ல புத்துணர்வு கிடைக்க சோர்வும் அவசியமாகும். அயராது உழைப்பவர்கள் சோர்வுற்று இருப்பார்கள். தூக்கமின்மையும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இருப்பவர்களுக்கும் சோர்வு தோன்றும். ஆனால் அந்த சோர்வே நிரந்தரமாக இருந்தால் அது ஒரு நோயாகத்தான் கருத வேண்டும்.
இத்தகைய சோர்வு இருவகைகளில் ஏற்படுகிறது. உடல் சோர்வாகவும், மனச் சோர்வாகவும் வெளிப்படும். உடல் சோர்வை உடற்பயிற்சி மூலமும் ஓய்வின் மூலமும் போக்கலாம். மனச் சோர்வை தியானம், யோகா மூலம் போக்கலாம்.
சோர்வடைய காரணங்கள்
சோர்வு என்பதே உடலின் சக்தியற்ற தன்மைதான். சத்து குறைந்த தன்மையின் வெளிப்பாடே சோர்வுதான். இந்த சோர்வுக்குக் காரணம் உடல் செல்கள், சுறுசுறுப்பாக இயங்குவதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெற இயலாமல் போவதேயாகும்.
இவை தவிர இரத்தச் சோகை, மந்தம் போன்றவை இருப்பின் அடிக்கடி உடல் களைப்பு மேலிடும். சிலருக்கு சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப்படி ஏறினாலோ உடல் சோர்ந்து அமர்ந்து விடுவார்கள்.
இரத்தச் சோகை காரணமாக மிகக் குறைந்த அளவே ஆக்ஸி-ஜன் திசுக்களுக்கு செல்கிறது. இதனால் திசுக்கள் போதுமான அளவு சக்தியை பெற இயலாமல் உடலும், மனமும் களைத்துவிடுகிறது.
குடற்புழுக்கள் இருந்தாலும் சோர்வு உண்டாகும். ஏனெனில் குடற்புழுக்கள் சத்துக்களை உறிஞ்சி விடுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். இதுபோல் குறைந்த இரத்த அழுத்தம், இரத்தத்தில் குறைந்த சர்க்கரை, நோய்த் தொற்று, கல்லீரல் பாதிப்பு போன்ற காரணங்களாலும் சோர்வு உண்டாகிறது.
மனச் சோர்வு
உடலை சோர்வுக்கு அழைத்துச் சென்று தீராத தொல்லையைக் கொடுப்பது மனம்தான். மனம் சோர்வுற்றால் உடலும் சோர்வுறும். ஆரோக்கிய மாக மனதை வைத்திருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடியும். மனச்சிக்கல், மன இறுக்கம், மனக் கிளர்ச்சி இவைகளால் உடலில் இரத்தத்தின் வேகம் அதிகரித்து இரத்தம் சூடேறுவதால், பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்குச் சென்றடைகிறது. இதனால் உடல் உறுப்புகள் அதிக சோர்வு பெறுகின்றன. இந்த சோர்வு, நாள் செல்லச் செல்ல நீடித்துக்கொண்டே போகும். பல நோய்களுக்கு இதுவே வழியாக மாறும்.
மேலும் சூழ்நிலைக்கேற்ப மனச் சோர்வு உண்டாகும்.
சில உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளுக்கும் சோர்வு முக்கிய காரணமாகிறது. உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதால் அதன் வெளிப்பாடு சோர்வாகத்தான் முதலில் அமையும். சோர்வு என்பது ஒரு நோயல்ல. அது நோயின் அறிகுறியாகும். இந்தச் சோர்வை நாம் எளிதில் விரட்டலாம். சோர்வை போக்கினாலே மனிதன் சாதனை படைக்க முடியும்.
சோர்வை நீக்க
சோர்வைப் போக்க நாம் சில நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சோர்வு வரும் போது சிறிது ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது. அல்லது எந்த செயலில் ஈடுபடும்போது சோர்வு வந்ததோ அந்த செயலை சற்று நிறுத்திவிட்டு வேறு சில வேலைகளில் நம் கவனத்தை திசை திருப்பினால் அந்த சோர்வு நீங்கும். மீண்டும் நிறுத்தி வைத்த வேலையை உற்சாகமாகத் தொடரலாம் .
சோர்வைப் போக்க ஓய்வு ஒரு மருந்தாகும். ஆனால் அந்த ஓய்வு நீடித்தால் அதுவே சோர்வை வளர்க்கும் விஷமாக மாறும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி அதிகம் பார்ப்பது, அல்லது தனிமையில் அமர்ந்து தேவையற்ற சிந்தனைகளில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்த்தால் சோர்வு ஏற்படாது.
உடல் சோர்வைப் போக்க எளிய வழி உணவு முறைதான். சிலர் மூன்று வேளை உணவு சாப்பிடுவதோடு வேறு எதையும் இடையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் இவர்களுக்கு உணவு உண்டபின்பும் சோர்வு ஏற்படும். சாப்பிடும் முன்பும், சோர்வு ஏற்படும். ஆனால் இடையிடையே சிறிது உண்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கும் வேலை சீராக கிடைக்கும். இதனால் இவர்கள் சோர்வின்றி எப்போதும் புத்துணர்வுடன் காணப்படுவார்கள்.
சோர்வைப் போக்க தினமும் உணவில் அதிக காய்கறிகள், கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கோதுமை ரொட்டி, முளைகட்டிய பயறு வகைகள், கீரை, சூப், காய்கறி சாலட் சாப்பிடலாம்.
வயிறு புடைக்க உண்பதை விட அரை வயிறு உணவே உற்சாகத்தை அளிக்க வல்லது.
வலி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், அதிக காஃபி, மது, போதை வஸ்துக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது.
சோர்வை நீக்க சரப்பயிற்சி சிறந்தது. சரப்பயிற்சி செய்தால் சோர்வு நீங்கும். அலுத்துப்போன உடம்பிற்கும் மனதிற்கும் சரசுவாசமே சிறந்த மருந்தாகும்.
சோர்வு ஏற்படும் நேரத்தில், அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து சரசுவாசம் செய்தால் உடல் புத்துணர்ச்சி அடைவதை கண்கூடாக நாம் காணலாம்.
உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்வு தரும் எண்ணங்களையே வளர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம், சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சோர்வைப் போக்க மருந்து மாத்திரைகள் தற்காலிக நிவாரணமாக இருக்குமே தவிர நிரந்தர நிவாரணம் ஆகாது. இயற்கை முறையிலும், உணவு முறை மாற்றத்தின் மூலமும் சோர்வை நீக்கி புத்துணர்வுடன் வாழ்வோமாக.