என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.
இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி , பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.
இரண்டில் "எது ஜெயிக்கும்?"
"நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்"
"எப்படி? உங்களுக்கு புரியவில்லையா?
"எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"
நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்....
சரி, நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் 'குட்டி[Goodie]'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா[Evil]?
யோசனை மனதைப் பிறாண்டத் துவங்கியது. செய்தித்தாள் படிக்கும் போது மற்ற சிந்தனை கூடாது என்று மனதிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் சிந்தனை என்பது காபி குடிப்பது, குளிப்பது போல ஒரு பழக்கத்தின் காரணமாக நேர்கிற செயலா?
காற்றுப் போல அது நினைத்த நேரத்திற்கு வந்து வருடிக் கொடுக்கும் அல்லது குப்பை சேர்க்கும்.
"சீ! சும்மாயிரு!" என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.அங்கே என் கண்ணில் பட்டது இந்த செய்தி.
"உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?"
என்று ஒரு பெரிய கேள்விக் குறியை வீசித் துவங்கியது செய்தி.
ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு, இந்தியாவில் தயாராகும் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்- துல்லியமாகச் சொல்வதானால் 76 விழுக்காடு- புகைபிடிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது. அதிலும் புகழ் பெற்ற, மக்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நடிக நடிகையர்கள், உதாரணமாக அமிதாப் பச்சன், ஷாரூக்க்கான், ரஜனிகாந்த் அந்தக் காட்சிகளில் நடிப்பதாகவும் அது கவலைப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் ஒன்றரைக் கோடி பேர் சினிமாப் பார்க்கிறார்கள், ஆண்டொன்றுக்கு 900 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று கணக்குச் சொல்லி, சினிமா இந்த அளவிற்குப் பிரபலமாக இருப்பதால் புகை பிடிக்கும் பழக்கமும் வலுவாக வேரூன்றியிருக்கிறது என்று அந்த ஆய்வு ஆதங்கப்படுகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் விடக் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் புகையிலைப் பழக்கம் உள்ள 28 கோடிப் பேரில் 50 லட்சம் பேர் குழந்தைகள்! நாளுக்கு நாள் பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்து வருகிறது, அதற்கு சினிமாக்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கறுப்பு -வெள்ளைக் காலத்தில், ஒரு பாத்திரத்தை வில்லனாகக் காட்ட சிகரெட் பயன்பட்டது. கழுத்தில் கர்சீப், கட்டம் போட்ட சட்டை, கலைந்த தலை, வாயில் புகையும் சிகரெட் இவை இருந்தால், அவர் வில்லன் என்று பார்த்தவுடனேயே ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நிஜ வாழக்கையில் புகை பிடித்த சில நல்லவர்கள் கூட, அதை பகிரங்கமாகச் செய்யத் தயங்கினார்கள். உதாரணம்: காமராஜர். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் புகை பிடிப்பது போல் புகைப்படம் எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர். தனது எந்தத் திரைப்படத்திலும் புகை பிடித்ததில்லை. இமேஜை பற்றிய கவனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். அவர் தனது பாத்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார் என்று கருத இடம் இருக்கிறது.
"தைரியமாக சொல் நீ மனிதன்தானா?
இல்லை நீதான் ஒரு மிருகம், அந்த மதுவில் விழும் நேரம்"
என்று அவர் திரையில் பாடியதைக் கேட்டுத் தற்காலிகமாகக் குடிப்பதை நிறுத்தியவர்கள் உண்டு.
இன்றைய தமிழ் சினிமாவிற்கு, மதுவிற்கு எதிராகவோ, புகைக்கு எதிராகவோ பேசும் தைரியம் கிடையாது. மாறாக அது இன்று புலம்பல் களஞ்சியம்.
திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
தம் அடிச்சா திட்றாங்க, தண்ணியடிச்சா திட்றாங்க,
சைட் அடிச்சா திட்றாங்க, ரைட் கொடுத்தா திட்றாங்க,
திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
டாடியும் மம்மியும் திட்றாங்க'
தீராத தம்மு வேணும்
திட்டாத அப்பு[அப்பா] வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்...
என்று அது அழுது புலம்புகிறது.பின் இதையெல்லாம் செய்தால் அப்பாவும் அம்மாவும் பூரித்து புளாகாங்கிதம் அடைந்து, உச்சி மோந்து, திருஷ்டி சுத்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பார்களா?
சரி, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், ஏன் புகை பிடிப்பதற்கு எதிராகத் திரைப்படத்தில் எந்த பிரசாரமும் செய்யவில்லை? சரித்திரத்தில் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்விகளில் இதுவும் ஒன்று. அவர் அதைப் பெரிய விஷயமாகக் கருதாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்தப் பிரசாரம் பலன் தராமல் போய் அது தனது செல்வாக்கிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதப்பட்டுவிடும், எதற்கு ரிஸ்க் என்று எண்ணியிருக்கலாம்.
ஆனால் தனது விளம்பர வருமானத்தைப் பெரிதாகக் கருதாமல், சிகரெட் விளம்பரங்களை வெளியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது ஆனந்த விகடன். அது புகைப்பதற்கு எதிராகக் கொஞ்சநாள் போராட்டமும் நடத்திப் பார்த்தது. ஆனால் பத்திரிகையாளர்களால்- விகடனில் பணியாற்றிய சில பத்திரிகையாளர்களையும் சேர்த்துத்தான் - கை விட முடியாத ஒரு வழக்கமாக இருந்தது புகை பிடிக்கும் பழக்கம்.
நான் குமுதம் ஆசிரியராகப் பணியாற்றியபோது, சென்னைக்கு வந்த அன்னை தெரசாவைப் பேட்டி கண்டு வருமாறு ஒரு நிருபரை அனுப்பியிருந்தேன். அந்த நிருபருக்குப் புகை பிடிக்கும் பழக்கமுண்டு.தெரசா பேட்டிக்கு வரச் சொல்லியிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே சென்று விட்ட அவர், காத்திருக்கும் போது போரடித்ததால், புகைபிடிக்க ஆரம்பித்தார்.மூடப்பட்ட ஒரு அறைக்கு முன்னால் வராந்தாவில் அவர்
நின்று புகைத்துக் கொண்டிருந்தார். தெரசா அந்த அறைக்குள்தான் இருக்கிறார், வேறு யாருடனோ பேசிக் கொண்டிருகிறார், நம்முடைய நேரம் வரும் போது நம்மை அழைப்பார்கள், அதற்கு முன்னதாக சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பாக்கை மென்றுவிட்டு உள்ளே போய் விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல் தெரசா அறைக்குள் இல்லை. பேட்டிக்கு சில நிமிடங்கள் முன் தெரசா விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி வரத் துவங்கினார். வரும் போது அறைவாசலில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நிருபரையும் பார்த்து விட்டார்.
நிருபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவர் தெரசாவிடம் கேள்விகள் கேட்கும் முன், தெரசா அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்." புகை பிடிப்பீர்களா?' என்பது முதல் கேள்வி. கையும் புகையுமாகப் பிடிபட்டபின் இல்லை என்றா சொல்ல முடியும். சரி, புகை பிடிப்பதைப் பற்றி ஏதாவது அறிவுரை சொல்லுவார், அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்ட நிருபர், " ஆமாம். பத்துப்பதினைந்து வருடமாகப் புகைக்கிறேன். பழகிப் போய் விட்டது" என்றார்.
தெரசா புகையின் தீமைகள் பற்றி உபதேசம் ஏதும் செய்யவில்லை. மாறாக, "ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்?" என்றார்.
"பத்து அல்லது பனிரெண்டு" என்றார் நிருபர்.
"அதற்கு என்ன செலவாகும்?"
"பத்து பதினைந்து ரூபாய் ஆகும்."
"நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மிச்சமாகும் அந்தத் தொகையை எனக்கு நன்கொடையாகத் தருவீர்களா?" என்றார் தெரசா
நிருபர் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"அது ஒன்றும் பெரிய தொகையாக இராது மதர்." என்று நழுவப் பார்த்தார் நிருபர்.
"மாதம் முன்னூறு, நானூறு ரூபாய். அதை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் முழுக்க இரண்டு வேளை பசியாற்றலாம் தெரியுமா?" என்றார். நிருபர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார்.
" நான் என்னுடைய பணியைத் துவக்கியபோது என் கையில் இருந்த பணம் வெறும் பத்து ரூபாய். அது ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உதவியது.அங்கு அவரது ரணங்களைக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். அது அவரது வாழ்வில் மிகப்பெரிய ஒரு திருப்பம். எல்லோராலும் அருவருப்பாக உணரப்பட்டுக் கவனிப்பாரின்றி தெருவோரமாகக் கிடந்த நம்மையும் கவனிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை பிறந்தது. அதற்குத் தேவைப்பட்டது வெறும் பத்து ரூபாய்.
சேவை செய்ய அதிகப் பணம் தேவையில்லை. ஆனால் சேவை செய்பவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் பெரிய உதவி" என்று சொல்லிய தெரசா, நிருபரிடம், இனிப் புகை பிடிப்பதில்லை, அதற்கு செலவிட்டு வந்த பணத்தை தர்மத்திற்குக் கொடுக்கிறேன் என்று உறுதி வாங்கிக் கொண்டுதான் பேட்டிக்கு சம்மதித்தார்.
தமிழ் சினிமாக்கள் மதர் தெரசா இல்லை.புகை பிடிப்பவர்கள் மனதில் தர்ம சிந்தனையை விதைக்க அவை முன் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் செலுத்தும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கை சமூக நலன்களைப் பேணுவதில் காட்டக் கூடாதா?
திருட்டு விசிடியை எதிர்த்து ஊர்வலம் போகப் போவதாக, முதல்வரை சந்தித்து மனுக் கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முயற்சி.
சரி, திருட்டு வி.சி.டி.கள் எங்கிருந்து முளைக்கின்றன? அவை விதை போட்டு விளைவதில்லை. வானத்திலிருந்து குதிப்பதில்லை.சினிமா உலகத்தில் இருந்து சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களால்தான் உருவாகின்றன. அதற்கு ஏன் வீதியில் இறங்கி ஊர்வலம் போகவேண்டும்? அறைக்குள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டிய விஷயமல்லவா இது? தங்களது பேராசைக்குக் கடிவாளம் போட வேண்டிய விஷயத்திற்கு, ஊராரை ஏன் உசுப்பி விட வேண்டும்?
இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில். பத்தில் ஒரு பங்கை
•இனி தமிழ்த் திரைப்படங்களில் புகைப் ப்டிக்கும் காட்சிகளைக் காண்பிப்பதில்லை,
•பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்பதில்லை,
•இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை,
•ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை
என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்டலாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?
'குட்டி'யைத் தூக்கி வைத்துக் கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?