
1965ம் ஆண்டு சோமாலியாவில் உள்ள ஒரு பாலைவன கிராமத்தில் பிறந்தவர் வாரிஸ் டைரி. கொளுத்தும் வெயிலில் ஆடுகளை மேய்ப்பது, உணவு தயாரிப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று ஓர் ஆப்பிரிக்க பெண்ணின் கடின உழைப்பு வாரிஸிடமும் இருந்தது. துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பறந்து திரிந்த பட்டாம் பூச்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைச் சந்தித்த போது வயது 5.ஆரம்பத்தில் நல்ல உணவு கொடுக்கப்பட்டு, அன்பாகப் பேசி அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ். அதிகாலை மருத்துவச்சியின் பிளேடால் அவரது பிறப்புறுப்பு வெட்டி எடுக்கப்பட்டு, முள்களால் தைக்கப்பட்டது. உடல் முழுவதும் ரத்தம்… வலியின் உச்சம்… அந்தச் சின்னஞ்சிறிய பாலைவன மலர் வதங்கிப் போனது. ...