வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது.
பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை முடிகளில் இருந்து நீக்குவதன் மூலம் முடியின் இயற்கை வண்ணத்தை அதற்கு மீண்டும் அளிக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருதி, அந்த வேதிப்பொருளை நீக்கும் மருந்தை உருவாக்கினார்கள். அதை பரிசோதனை முயற்சியாக சிலரிடம் கொடுத்தபோது அவர்களின் உடல் முடி தனது பழைய நிறத்திற்கு மாறியதாக இவர்கள் கூறுகிறார்கள்.
அதேசமயம் இந்த மருந்து நிரந்தரமாக ஒருவரின் உடல்முடிகள் நரையாவதை தடுக்க முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வாளர்களால் உறுதியான விடையை கொடுக்கமுடியவில்லை.
இந்த குறிப்பிட்ட மருந்தை இவர்கள் கண்டுபிடித்த விதமே சுவாரஸ்யமானது.
விடிலிகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தோலில் வெண்புள்ளிகள் தோன்றும் நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பின் ஒரு பகுதியாக இந்த ஆய்வாளர்கள் இந்த மருந்தை வடிவமைத்தார்கள். இயற்கையில் மனிதர்களின் தோலில் காணப்படும் மெலானின் என்கிற நிறத்துகள்கள் தோலின் சில இடங்களில் இல்லாமல் போவதால் இந்த வெள்ளைத்தழும்புகள் உருவாகின்றன.
இந்த தோல் மற்றும் கண்ணின் இமைகள், புருவங்களில் காணப்படும் வெள்ளைத்தழும்புகளை குணப்படுத்துவதற்காக இவர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்தனர். இது குறிப்பிட்ட நோயாளிகளிடம் நல்ல பலனை தந்ததை கண்ட ஆய்வாளர்கள், இந்த மருந்தை கொஞ்சம் மாற்றி அதை பயன்படுத்தி மனிதர்களின் முடியில் உருவாகும் நரையை குணப்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தபோது அதுவும் சாத்தியம் என்பதை தாங்கள் கண்டறிந்ததாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுநாள்வரை நரைமுடியை மறைப்பதற்கான வழிகள் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதாக தெரிவிக்கும் மருத்துவ சஞ்சிகையான பேசப் ஜர்னலின் தலைமை ஆசிரியர் ஜெரால்ட் வீஸ்மென், முதல்முறையாக, வெள்ளைமுடியை அதன் வேரிலிருந்து குணப்படுத்தக்கூடிய ஒரு சிகிச்சை முறைக்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கிறார்.
இந்த மருந்து நரைமுடியையும் தோலில் ஏற்படும் வெண்புள்ளி நோயையும் ஒருசேர குணப்படுத்துவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கிறார் இவர்.