நாளுக்கொரு ஊழல் வெளி வருவதில் தற்போது ரயில்வேயில் ஏற்றுமதிக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய தணிக்கை துறை கணக்காயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசை எதிர்க்க இதுவும் ஒரு ஊழலாக கிடைத்துள்ளது.
சமீப காலமாக ஸ்பெக்ட்ரம், நிலக்கரி முதல் ஆணுறை விநியோகம் வரை மத்திய அரசு பல்வேறு ஊழல் முறைகேட்டில் சிக்கி பெரும் தலைக்குனிவை சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் ஒரு புதிய ஊழல் பூதம் கிளம்பியிருக்கிறது. ரயில்வேயில் ஏற்கனவே பணியாளர் தேர்வு மையத்தில் நடந்த ஊழல் காரணமாக இந்த தேர்வு முழு அளவில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே ஏற்றுமதி சரக்கு கட்டணத்தில் குறைத்து வசூலித்து மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு பயனீட்டுக்கு போக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இரட்டை முறையை பயன்டுத்தியது, இதன்படி இரும்பு உருக்கு ஏற்றுமதி செய்தவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்து இதில் பல அதிகாரிகள் ஆதாயம் அடைந்துள்ளனர்.
இந்த வகையில் ரூ. 17 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கணக்காயம் (சி.ஏ.ஜி ) தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த ஊழல் தற்போது மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 பேர் ரயில்வே அமைச்சர் :
ரயில்வே வாரியத்தில் உயர் பொறுப்புகள் பெற்று தருவதற்கு ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் மருமகன் பல லட்சம் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த மே 10ல் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்தார், கடந்த 2009 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் 7 பேர் ரயில்வே அமைச்சர் இருந்ததால் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் கோரியுள்ளனர்.