.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 10 September 2013

'நன்மைக்கு நன்மையே நடக்கும்;.........குட்டிக்கதை



ஒரு நாள் கந்தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது...வலியால் 'ஆ'எனக் குரல் கொடுத்தான்..

'ஆ' என எதிரொலியும் கேட்டது...

கந்தனுக்கு ஒரே ஆச்சரியம்..

'யார் நீ 'என்றான்.

பதிலுக்கு 'யார் நீ' என்று கேட்டது...

'உன்னை பாராட்டுகிறேன்; என்றான்.

அதுவும் அப்படியே கூறிற்று.

அப்பாவிடம் கந்தன்..'அப்பா..என்னது இது;என்றான்.

அவன் அப்பா சொன்னார்..'கந்தா..இதன் பெயர் எதிரொலி' ஆகும். உண்மையில் நாம் என்ன சொல்கிறோமோ..அதையே இது திரும்பச்சொல்லும்.

நீ இப்போது..'நீ சொல்கிறபடி செய்கிறேன்' என்று சொல் என்றார்..

கந்தனும் ..அப்படியே சொல்ல..திரும்ப எதிரொலியும் 'நீ சொல்கிறபடி செய்கிறேன் 'என்றது.

கந்தா...இதிலிருந்து தெரிந்து கொள்..நல்லதோ..தீமையோ எது நாம் செய்தாலும் அதுவே நமக்குத் திரும்ப நடக்கும்.

இதைத்தான் இந்த எதிரொலி உணர்த்துகிறது.

ஆகவே எப்போதும் நாம் அனைவருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்றார்

பால்காரனும் ...பேராசையும்.........குட்டிக்கதை



பால்காரன்...தன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஒரு குடத்தில் இட்டு....அதை தலையில் சுமந்தபடியே அடுத்த ஊருக்கு ..விற்க புறப்பட்டான்.

பாலை விற்றதும் என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

இப்பாலை விற்று வரும் பணத்தில் நூறு கோழிகள் வாங்குவேன்...அவற்றை வளர்த்து சந்தையில் அதிக பணத்திற்கு விற்பேன்.

விற்று வந்த பணத்தில் மூன்று அல்லது நான்கு ஆட்டுக் குட்டிகளை வாங்குவேன்.வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் அவை மேயும்..அவை வளர்ந்தவுடன் அவற்றை விற்று ஒரு பசுமாட்டை வாங்குவேன்.

அப்போது என்னிடம் பசுமாட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதனால் ஒரு குடத்திற்கு பதில் இரு குடத்தளவு பால் விற்க கிடைக்கும்.

அது விற்ற பணம் ஏராளமாய் கிடைக்கும்...அதில் சந்தோஷமாக இருப்பேன்,,,ஆனந்தக் கூத்தாடுவேன் என...தலையில் இருந்த குடத்திலிருந்து கைகளை எடுத்துவிட்டுக் குதித்தான்.

தலையில் இருந்த குடம் கீழே விழுந்து பால் முழுவதும் தெருவில் ஆறாய் ஓடியது.

அவனது பேராசை எண்ணங்கள்...இருந்ததையும் அவனை விட்டு ஓடிப்போகச் செய்தது.

பேராசை பெரு நஷ்டம்.

'எல்லோரும் நல்லவரே'.........குட்டிக்கதை





ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.

'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.

'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.

'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...? அதே போன்று தானே..நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.

அது போலவே..அந்த வேடன் உன்னை விடுவித்தால்..நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அதுதானே நட்பின் இலக்கணம் என்றது.

புறா...புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.

நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது ..எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.

உலகில் எல்லோரும் நல்லவர்களே!.

புத்திசாலித்தனம்...........குட்டிக்கதை





படிக்காத ஒருவன்...மெத்தப் படித்த ஒருவனும் அடுத்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர்.படிக்காதவன் ஒரு பை நிறைய பணம் எடுத்துக்கொண்டான்.படித்தவனோ கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.

சிறிது தூரம் அவர்கள் நடந்ததும் இருண்ட காடு வந்தது,காட்டினுள் நடந்தனர்..பசிக்கு.. அங்கு மரங்களில் பழுத்திருந்த பழங்களை உண்டனர்.

திடீரென ..திருடர்கள் கூட்டம் ஒன்று அவர்களை வழிமறித்தது.

படிக்காதவனிடம் இருந்த பணமூட்டையைக் கேட்க படிக்காதவன் கொடுக்க மறுக்க..அவனை நைய்யப் புடைத்து பணப்பையினை பிடுங்கிக் கொண்டார்கள்.

படித்தவனைப் பார்த்து..'உன்னிடம் இருப்பதையும் கொடு' என்றனர்....

படித்தவன் தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறியதோடு திருடர் தலவனைப் புகழ்ந்து புத்திசாலித்தனமாக ஒரு இனிய பாடலைப் பாடினான்...பாடலைக் கேட்ட திருடர் தலைவன் மகிழ்ந்தான். படிக்காதவனிடமிருந்து பிடுங்கிய பணமூட்டையிலிருந்து சிறிது பணத்தை படித்தவனிடம் எடுத்துக் கொடுத்தான்.

ஒருவனது புத்திசாலித்தனம் அவனை ஆபத்துக் காலத்தில் காப்பாற்றும்.அதற்கு கல்வியறிவு அவசியம்.

'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை





ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.

ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...

ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது' என்றது.

'நீ எங்கே வாழ்கிறாய்?' என் கிணற்றுத்தவளை கேட்டது.

புதிய தவளை சிரித்தவாறே ....'நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்' என்றது.

'உன் கடல்..என் கிணறு போல இருக்குமா?' என்றது கிணற்றுத்தவளை...

அதற்கு புதிய தவளை ..'உன் கிணற்றை அளந்து விடலாம்...சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது'என்றது.

'நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது..நீ பொய்யன்.உன்னுடன் சேர்ந்தால் எனக்கு ஆபத்து'என்றது கிணற்றுத்தவளை. மேலும்..'பொய்யர்களுக்கு இங்கு இடமில்ல.நீ போகலாம்'என கடல் தவளையை விரட்டியடித்தது.

உண்மையில் இழப்பு கிணற்றுத்தவளைக்குத் தான்.

நாமும் நமக்கு எல்லாம் தெரியும்..நாம் இருக்கும் இடமே உலகம்,,,நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி...நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top