அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக நிறைய கற்பிதங்கள் உள்ளன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கற்பிதங்கள் எந்த அளவுக்கு உண்மை?
பால் கலக்காத சாக்லெட்டைவிட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்பது ஒரு கற்பிதம். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன.
சாக்லெட் சாப்பிட்டால் மைகிரேன் தலைவலி வரும் என்பது மற்றொரு கற்பிதம். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால் மைகிரேன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், சாக்லெட் சாப்பிடுவதால் மட்டும் ஒருவருக்கு மைகிரேன் வரும் என்று சொல்வதற்கில்லை.
சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர். சாப்பாட்டை வெளுத்துக் கட்டிவிட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும்.
சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது, அதனால் உடல்நலனுக்கு சில நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேதிப்பொருள் சாக்லெட்டில் உள்ளது.