”கதைக்கு ஏற்ற தலைப்பு 'ஆரம்பம்'. இந்த தலைப்பு வைத்ததே படத்திற்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது” என்று அடக்கமாக பேசுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இறுதிகட்ட பணிகள், இசை வெளியீடு என மும்முரமாக பணியாற்றி கொண்டிருந்தவரிடம் பேசினோம்.
'ஆரம்பம்' ஏன் இவ்வளவு லேட்?
“படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் பெயர்களை கேட்டால் 'ஏன் இவ்வளவு தாமதம்' என்று கேட்க மாட்டீர்கள். அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா (கெஸ்ட் ரோல்), சுமன் ரங்கநாதன், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சுரேகர் மட்டுமன்றி, அக்ஷ்ரா கெளடா என்ற பெண்ணையும் இப்படத்தில் அறிமுகம் செய்கிறேன். இவ்வளவு நடிகர்களின் கால்ஷீட் வாங்கி, படப்பிடிப்பு போக வேண்டும். படம் தாமதம் என்று நீங்கள் கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அதுமட்டுமல்ல நான் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தவே இல்லை என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.”
படத்தலைப்பிலும் நிறைய குழப்பம் இருந்தது போல?
“படத்தலைப்பில் குழப்பம் இருக்கிறது நான் எப்போதாவது நான் கூறினேனா? நான் முதலில் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தேன். படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் படத்தலைப்பு பற்றி யோசிக்கவில்லை. 'ஆரம்பம்' என்ற டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றவுடன் வைத்தேன். அவவளவு தான். அந்த தலைப்பு வைத்தவுடன், இணையத்தில் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.”
விஷ்ணுவர்தன் படம் என்றாலே அஜித் அல்லது ஆர்யா இருப்பார் என்றாகிவிட்டதே... வேறு நடிகருடன் படம் பண்ணும் ஐடியா எதும் இல்லையா?
“விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கண்டிப்பாக எனது அடுத்த படத்தில் இதனை பிரேக் பண்ணுவேன். அதுமட்டுமன்றி எனக்கு அஜித், ஆர்யா இருவரிடம் நடிகர்கள் என்பதையும் கடந்து நட்பு இருக்கிறது அதனால் நான் அவர்கள் இருவருடன் பணியாற்றும் போது மிக நன்றாக செயல்பட முடிகிறது. நல்ல சூழல் கிடைக்கிறது.”
'பில்லா' நயன்தாரா - 'ஆரம்பம்' நயன்தாரா எப்படி இருக்காங்க?
“பில்லா' படத்தில் ரொம்ப கிளாமரா நடிச்சு இருப்பாங்க. ஆனால் இப்படத்தில் அப்படியில்லை. 'ஆரம்பம்' படத்தில் அஜித்திற்கு ஜோடி என்பதையும் தாண்டி ஒரு நல்ல பாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார்.”
'ஆரம்பம்' கதை என்ன? அஜித்திற்கு என்ன ரோல்?
“ஒரு வரிக்கதையினை கூறினால் படத்தின் கதை உங்களுக்கு தெரிந்துவிடும். ஒரு தனிமனிதப் போராட்டம் தான் 'ஆரம்பம். அஜித் சார் என்ன பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதினை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தில் இன்னும் ஒரு சில பணிகள் இருக்கின்றன். 19ம் தேதி இசை வெளியீடு இருக்கிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும். படத்தின் பைனல் எடிட் பார்த்தேன். 'ஆரம்பம்' மிகவும் ஸ்டைலீஸாகவும், பரபரப்பாகவும் வந்து இருக்கிறது. படம் பார்க்கும் ஒருவருக்கு கூட 'ஆரம்பம்' போர் அடிக்காது.