.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 20 September 2013

தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க தீர்வு சொல்லும் மாணவர்கள்!


நிலத்தடி நீரை சேமித்து தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க வழி சொல்கிறார்கள் சென்னைக் கல்லூரி மாணவர்கள்.

வீணாக சாக்கடையில் கலக்கும் மழைநீரை, பாதுகாத்து பத்திரப்படுத்தி பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை யார் எடுப்பது?

சென்னை ஸ்ரீ சாராம் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். (சிவில்) படிப்பை சமீபத்தில் முடித்த மாணவர்கள் விக்னேஷ் சந்திரமௌலி, வி.வினோத், எஸ்.நவீன் குமார், ஜி.பிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து இதற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.

சென்னை நகர மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புராஜக்ட்டை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியால், மாநிலம் முழுவதுமே நிலத்தடி நீர் வரத்து குறைந்தது. சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த ஆண்டு பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்தபோதிலும், மழை நீர் சாலைகளில் வீணாக வழிந்தோடியதையும் பார்க்க முடிந்தது. அவ்வாறு வீணாகும் மழை நீர்  இறுதியில் கடலில் கலக்கிறது. தூய்மையான மழை நீரில், 70 சதவீதம் நீர் சாக்கடைகளிலும், சாலைகளிலும் வீணாகிறது. இவ்வாறு வீணாகும் நீரை சேமிக்க வழியுண்டா என்பது பற்றி யோசித்ததன் விளைவே, எங்கள் புராஜக்ட்டுக்கு அடித்தளமாக அமைந்தது" என்று விவரிக்கிறார் வினோத்.

மழை நீரை வீணாக்காமல், பயனுள்ள முறையில் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் புராஜக்ட்டை உருவாக்கத் திட்டமிட்டோம். ரெய்ன் சென்டர் அமைப்பின் சேகர் ராகவனைச் சந்தித்தோம். அவரது ஆலோசனைப்படி, சென்னையில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவை ஆராய்ந்தோம். இதற்காக பல்வேறு இடங்களைத் தேர்வு செய்தோம். வீடுகளில் மழை நீர் சேமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு  முன்பு, நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு என்று இரண்டு கோணங்களில் எங்கள் ஆராய்ச்சியைத் துவக்கினோம். பெசன்ட் நகர், வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் மழை அளவையும், வடிகால் வசதிகளையும் ஆராய்ந்தோம். அப்போது எங்களுக்கு சில முடிவுகள் தெரியவந்தன..." என்று விவரிக்கின்றனர் வினோத்தும், பிரபுவும்.

எங்கள் ஆராய்ச்சியின்படி, கடுமையான பாறைகள் உள்ள பகுதி, களிமண் பகுதி, மணற்பாங்கான பகுதி என்று மூன்று வித்தியாசமான பிரிவுகள் இருப்பதை அறிந்தோம். பெசன்ட் நகர் பகுதி, மணல் அதிகமுள்ள பகுதியாகும், வேளச்சேரி, கடினமான பாறைகளாலான பகுதி. தி.நகர், களிமண் அதிகமுள்ள பகுதி. இப்படி, ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதி மண்ணின் தன்மைக்கேற்ப, நிலத்தடியை சீரமைத்து தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதிகள் செய்யவேண்டும். எங்கள் புராஜக்ட்டின்போது வேளச்சேரியில் ஒரு தெப்பக்குளத்தைப் பார்த்தோம். 10 லட்சம் லிட்டர் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்ட அந்தக் குளத்தில் தேவையற்ற செடி, கொடிகள் பரவியிருந்தன. குளமே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக் கிடந்தது. இதுபோன்ற குளங்களையும், தண்ணீர் அமைப்புகளையும் கண்டறிந்து தூர் வாரும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள் நவீன்குமாரும், விக்னேஷ் சந்திரமௌலியும்.

களிமண் பகுதியான தி.நகர் போன்ற பகுதியில், விளையாட்டு மைதானம் போன்ற ஒரு பொது இடத்தில் சுமார் 6 அடி ஆழத்திற்கு ஒரு சிறிய கிணற்றைத் தோண்டி, அதில் ஒரு பைப்பை நிலத்தடியைத் தொடும்படி இணைக்க வேண்டும். வீணாகும் மழை நீரை இந்த கிணற்றை நோக்கித் திருப்பிவிடவேண்டும். மழை நீருடன் குப்பைகள், கண்ணுக்குத் தெரியாத துகள்கள் கலந்துவிடாமல் இருப்பதற்காக இந்த கிணற்றை, துளைகள் நிறைந்த ஒரு கான்கிரீட் ஸ்லாப்பால் மூடி விடவேண்டும். சாலைகளில் வீணாகும் மழை நீர் இந்த கிணற்றில் விழுவதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். பெசன்ட் நகர் போன்ற மணற்பாங்கான பகுதிகளில், சாலையின் ஒரு ஓரத்தில் சிறிய அளவில் தண்ணீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்து, வீணாகும் நீரைச் சேமிக்கலாம். வேளச்சேரி போன்ற பாறைகள் நிறைந்த நிலத்தடியைக் கொண்ட பகுதியில், கோயில் குளம், தெப்பக்குளம் போன்ற குளங்களை தூர்வாரி, மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்" என்கிறார்கள் வினோத்தும் அவரது நண்பர்களும்.

 

குலைகுலையாய்க் காய்க்கும் குட்டைத் தென்னை!


தென்னையில், நெட்டை ரகம் தேங்காய்களுக்காகவும், குட்டை ரகம் இளநீருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. சமீப காலமாக, குட்டை தென்னை ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். குறுகிய காலத்திலேயே மகசூல், எளிய பராமரிப்பு, இளநீருக்கு ஏற்பட்டுள்ள மவுசு, நிலையான கொள்முதல் விலை போன்ற காரணங்களால், தமிழகத்தில் குட்டை தென்னந்தோப்புகள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த அந்தோணிச்சாமி, 4 ஹெக்டேர் பரப்பளவில், குட்டை தென்னை மரங்களைப் பயிரிட்டு, நல்ல லாபமடைந்து வருகிறார். அவரது வழிகாட்டல்கள் இங்கே...

சமீப காலமாக, கார்பானிக் அமில குளிர்பானங்களை விட, இளநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் விரும்பி அருந்தத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் காலத்தில் இளநீர் பானத்திற்கு உள்ள கிராக்கி மேலும் அதிகரிக்கும் என்பதால், வணிக ரீதியாக குட்டை ரக தென்னை மரங்களைப் பயிரிடத் தொடங்கினேன். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் சுமார் 800 தென்னை மரங்களை இயற்கை விவசாய முறையில் வளர்த்து வருகிறேன்.

நடவு முறை

நல்ல வடிகால் வசதியுடைய வண்டல் மற்றும் செம்பொறை மண் வகைகள் தென்னை சாகுபடிக்கு ஏற்றவை. சவ்காட் ஆரஞ்சு, சவ்காட் பச்சை, மலேசிய மஞ்சள் போன்ற குட்டை தென்னை ரகங்கள் தமிழக தட்பவெப்பநிலைக்கு உகந்தவை. சதுரம் அல்லது முக்கோண நடவு முறையைப் பின்பற்றலாம். நடவு வயலில் 3 அங்குலம் நீள ஆழ அகல அளவில் குழிகள் தோண்டி, ஏக்கருக்கு 70 கன்றுகள் நட வேண்டும். கன்றினை சுற்றியுள்ள மண்ணை நன்கு அழுத்திவிட்டு, தென்னங்கீற்றுகளைப் பயன்படுத்தி நிழல் ஏற்படுத்த வேண்டும். காற்று பலமாக வீசினால் குச்சியை ஊன்றி கன்றினை சேர்த்துக் கட்ட வேண்டும்.

நீர் மற்றும் உர நிர்வாகம்

தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனமே உகந்தது. களைக் கட்டுப்பாட்டுக்கும், நீர் சிக்கனத்திற்கும் இது உதவும். நடவு செய்த ஓராண்டு வரை, வாரத்திற்கு 3 முறையும், இரண்டாவது ஆண்டு முதல், வாரத்திற்கு 2 முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். கோடைக்காலங்களில் ஒரு கன்றுக்கு 45  லிட்டர் வீதம், 4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். தென்னை ஓலைகள், நார்க்கழிவுகளை மரத்தின் அடியில் பரப்புவதன் மூலம் நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

மக்கும் குப்பை, களைச்செடிகள், கரம்பை மண் ஆகியவற்றை கலந்து, 60 நாட்கள் ஊற வைத்து, பின்பு ஒவ்வொரு கன்றுக்கும் அக்கலவையை தேவையான அளவு இட வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட ரசாயன உரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

தென்னை சாகுபடியைப் பொருத்தவரையில், காண்டாமிருக வண்டுகள் பெரும் இடையூறாக இருக்கின்றன. இவ்வண்டுகள் விரிவடையாத குருத்துப்பாகம் மற்றும் மொட்டுப்பகுதியை மென்று விடுகின்றன. இதனால் 10-லிருந்து 12 சதவிகித மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இனக்கவர்ச்சிப் பொறி அமைத்தும், முட்டைகளைப் பொறுக்கியும் காண்டாமிருக வண்டுகளை அழித்திடலாம். பென்சில் முனை குறைபாடு காரணமாக, மரம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும். வேர் அழுகல் நோயைத் தவிர்க்க, தோப்பில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  குரும்பைகள் மற்றும் பூக்கள் உதிர்வதைத் தடுக்க, மரத்திற்கு 2 கிலோ வீதம்,  உப்பை பூ நுனியிலும், வேர்ப்பகுதியிலும் போட்டு, நீர் பாய்ச்ச வேண்டும். மரத்தண்டை கரையான் தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்த, மரத்தின் 2 அடி உயரத்திற்கு சுண்ணாம்பு அடிக்கலாம்.

தோப்புப் பராமரிப்பு

பருவமழை துவங்கும் போதும், முடியும் போதும் தோப்பை உழ வேண்டும். இதன் மூலம் வேர்களுக்கு ஈரத்தன்மை கிடைப்பதுடன், களைகளும் நீக்கப்படுகின்றன. பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள் தாக்கப்பட்டு இறந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விடவேண்டும். அடிமரங்களில் அரிவாள் கொண்டு கொத்தி காயம் ஏற்படுத்தக்கூடாது. ஒவ்வொரு தென்னைமரத்தைச் சுற்றியும் 2 மீட்டர் சுற்றளவில், 11 அங்குல ஆழத்திற்கு உரிமட்டைகளை நார்ப்பகுதி மேலே இருக்கும்படி மண்ணில் புதைத்து வைத்தால் மழை நீரும், பாய்ச்சப்படும் நீரும் தக்க வைக்கப்பட்டு மரத்திற்கு கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுக்க, தோப்பின் 4 ஓரங்களிலும் தடுப்பு வரப்பு அமைக்கலாம்.

மகசூல்

நடவு செய்த 3 வருடத்திலிருந்தே காய்ப்பிடிப்பு தொடங்கிவிடும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 200 இளநீர் கிடைக்கும். ஒரு குலையில் குறைந்தது 20 காய்கள் விளையும். 25 நாட்களுக்கு ஒரு முறை காய் பறிக்கலாம்.  4 ஹெக்டேரையும் சேர்த்து ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் காய்கள் கிடைக்கின்றன. ஓர் இளநீர் தற்போது 12 ரூபாய்க்கு விலை போகிறது. கோடைக்காலங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கும். குட்டை தென்னை மரங்களை 30 முதல் 40 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம்" என்கிறார் அந்தோணிச்சாமி.

கிணற்று நீரை இறைக்கும் சோலார்!


நான் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கத்திரி, வெண்டை, கீரை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை, மின்சாரத்தை நம்பியும் பயிர் செய்ய முடியாத சூழல். மின்சாரம் விட்டு விட்டு வருவதனால் தொடர்ச்சியாக நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி அழிந்தன. டீசல் மூலமாக என்ஜினை இயக்கினால் டீசல் விலை உயர்வால் முதலுக்கே மோசம் வரும் நிலை உருவானது.

 

விவசாயத்தை மட்டுமே நம்பி நான் குடும்பத்தை நகர்த்தி வருகிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. எனவே நித்தம் காவிரியையும், கரண்ட்டையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது போதும், வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எனது கவனம் சோலார் மின்சாரத்தை நோக்கித் திரும்பியது.



கருகிக்கொண்டிருந்த பயிர்களைக் கண்டு வருந்தினேன். கடன் வாங்கியாவது சோலார் மின்சாரம் அமைப்பது என முடிவு செய்தேன். 2 கே.வி. அளவுள்ள சோலார் தகடுகளைப் பொருத்தி 2 ஹெச்.பி. அளவுள்ள மோட்டார் பொருத்தினேன். இந்த அளவுள்ள சோலார் தகடுகளை வைத்து 5 ஏக்கர் வரை விவசாயம் செய்யலாம். மேலும் தண்ணீர் வீணாவதைத் தடுக்க தெளிப்புநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தேன். இதன் மூலமாக தண்ணீர் மிகவும் சிக்கனமாக செலவானது.



இப்போது நான் கத்திரி பயிரிட்டுள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிப் போயிருந்த எனது செடிகளின் முகத்தில் இப்போதுதான் சிரிப்பைப் பார்க்க முடிகிறது. பகல் நேரங்களில் நமது ஊரில் நல்ல வெயில் அடிப்பதால் கரண்ட்டுக்கு சமமான அளவு வேகத்துடன் சோலார் மோட்டார் இயங்குகிறது. இந்த மோட்டார் அமைக்க இரண்டரை லட்ச ரூபாய் செலவானது. என்றாலும் தொடர்ச்சியாக எந்தப் பராமரிப்புச் செலவும் கிடையாது. மேலும் இந்த வகையான சோலார் மோட்டார்களை ஒருமுறை அமைக்கும்போது பின்னர்  வேறு எந்த செலவீனமோ, சிக்கலான பயன்பாட்டு முறையோ கிடையாது. என்னைப் போன்ற விவசாயிகளும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.



இந்த ஆண்டு சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தி, விவசாயம்செய்ததால் கத்திரி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மேலும் கீரை, வெண்டை போன்ற பயிர்களையும் நடவு செய்துள்ளேன்.



அரசாங்கத்தின் சார்பில் சோலார் மின்சாரத்தை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் மட்டுமே வெளிவருகிறதே ஒழிய, எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 80% மானியம் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. சோலார் மின்சாரத்திற்கு செலவிட்ட இரண்டரை லட்ச ரூபாயும் வட்டிக்குதான் கடன் வாங்கி உள்ளேன்.



நமது ஊரில் ஆண்டு முழுவதுமே சூரிய வெளிச்சம் கிடைப்பதால் அதைப் பயன்படுத்தி  விவசாயம்செய்யும்போது, விவசாயமும்  செழிப்படையும். நாட்டின் மின்சாரத் தேவையும் குறையும். அதற்கு அரசின் ஒத்துழைப்பு தேவை. சோலார் மின்சாரத்தைப் பொருத்தவரை முதன் முறையாகப் பொருத்தும் செலவு அதிகமாக உள்ளது. இது எல்லா விவசாயிகளாலும் செய்ய இயலாது. எனவே அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து இதனை ஊக்குவிக்கும்போது கண்டிப்பாக இங்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி நடக்கும்" என்கிறார் செந்தில்.



தொடர்புக்கு:99442 98638

புழுக்களை அழிக்கும் ஒட்டுண்ணி!


தென்னை சாகுபடியில் ஏற்படும் மகசூல் குறைவிற்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, தென்னை மரங்களை கருந்தலைப்புழு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, மரப்பட்டைத் துளைப்பான் என 14-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் தாக்குகின்றன. இவற்றில் கருந்தலைப் புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் இந்தப் புழுக்கள் தாக்குகின்றன. வருடம் முழுக்க இதன் தாக்குதல் இருந்தாலும், கோடைக்கலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.



தென்னைமரக் கொண்டையின் கீழ்ப்புற இலைப்பரப்பில், காய்ந்த திட்டுக்கள் காணப்படுவது கருந்தலைப்புழு தாக்குதலின் அறிகுறிகளாகும். கருந்தலைப் புழுக்கள், தென்னை ஓலைகளின் அடிப்பரப்பில் நூலாம்படையினை உருவாக்கி, அதனுள் இருந்துகொண்டே, பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். மரத்தின் கொண்டை மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர, மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும்.  அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள், எரிந்து தீய்ந்து போனது போன்று காட்சியளிக்கும். இதனால், தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு, மகசூல் குறைந்து விடுகிறது. தகுந்த நேரத்தில் கவனிக்காமல் விட்டால்,  நாளடைவில் மரம் பட்டுப்போய் விடும்.




பொதுவாக, கருந்தலைப் புழுக்களை அழிக்க, ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கம். இதனால், மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், மண்புழு, நத்தை, ஊசித்தட்டான் போன்ற நன்மை தரும் பூச்சியினங்களும் அழிந்து விடுகின்றன.




கருந்தலைப் புழுக்களை அழிக்க, பிரிக்கானிட் எனும் ஒட்டுண்ணிகளைக் கண்டுபிடித்துள்ளது, கோவை மாவட்டம் ஆழியார் நகரில் உள்ள, தென்னை ஆராய்ச்சி நிலையம். இது குறித்து, தென்னை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முனைவர். ந.ஷோபா கூறியதாவது:




சேமிப்புக் கிடங்குகளில் உள்ள அரிசி, நெல் மணிகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் புழுக்களைச் சேகரித்து, அதைப் பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி, அதிலிருந்து பிரிக்கானிட் ஒட்டுண்ணிகளை உருவாக்கி, தென்னை விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த ஒட்டுண்ணிகள், மனிதனை துன்புறுத்தாது. பிரிக்கானிட் ஒட்டுண்ணிகளை, 21 நாட்களுக்கு ஒருமுறை, ஏக்கருக்கு 2,100 ஒட்டுண்ணிகள் வீதம் (ஒரு மரத்திற்கு 30 ஒட்டுண்ணிகள்) தென்னந்தோப்புகளில் புழக்கத்தில் விட்டு, கருந்தலைப்புழுவின் தாக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.




மேலும், பிரிக்கானிட் ஒட்டுண்ணிகள், கருந்தழைப் புழுக்களைக் கொன்று, அதன் மீது 15-20 முட்டையிடுகின்றன. அதிலிருந்து வெளியேறும் புழுக்கள், 7-11 நாட்களில் ஒட்டுண்ணியாக மாறிவிடுகின்றன. நாளடைவில் தோப்பில் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, கருந்தலைப் புழுக்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விடும்.




100 பிரிக்கானிக் ஒட்டுண்ணிகள் கொண்ட ஒரு பாக்கெட்,  50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுண்ணிகள் தேவைப்படும் விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்கிறார்.



தொடர்புக்கு: 04253 288722


குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள்! - கலக்கும் சுரேஷ் எம்.பி.!


ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ளன.



ஏ.டி.எம்மில் பணம் கிடைக்கும், தண்ணீர் கிடைக்குமா? கிடைக்கிறது. பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்மில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு பத்து லிட்டர் குடிநீர் இந்த ஏ.டி.எம்மில் வழங்கப்படுகின்றது.



பெங்களூரு அருகே உள்ள கனகபுரா பகுதியில்தான் இந்த வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரணமாக சந்தையில் 20 லிட்டர் குடிநீர் 40 ரூபாய் முதல் 50 ருபாய் விற்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள மெஷினில் ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால்  அடுத்த ஒரு நிமிஷத்தில் 10 லிட்டர் குடிநீர் கேனில் நிரம்பியிருக்கும்.



இங்கு ஒருவருக்கு தண்ணீர் கிடைத்தது, இன்னொருவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்னும் பிரச்சினைக்கே இடம் இல்லை. குடிநீருக்காக வரும் அனைத்து மக்களுக்கும் நிச்சயம் இங்கு தண்ணீர் உண்டு.



பாதுகாக்கப்பட்ட பத்து லிட்டர் குடிநீர் ஒரு ரூபாய்க்கும், இருபது லிட்டர் குடிநீர் இரண்டு ரூபாய்க்கும் வாட்டர் ஏ.டி.எம்களில் வழங்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் தற்போது 33 வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா 13 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.



கனகபுரா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியாளராக நின்றுள்ளார் சுரேஷ். தன்னை வெற்றிபெறச் செய்தால் வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதியை அளித்தார். மக்களும் அவரை நம்பி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.



சுரேஷ் எம்.பி.யான பிறகு கொடுத்த வாக்குறுதியை தற்போது மக்களுக்காக நிறைவேற்றியுள்ளார். மக்களும் தற்போது நிம்மதியாக குறைந்த விலையில் வாட்டர் ஏ.டி.எம்களில் குடிதண்ணீர் பிடித்துக்கொண்டு சந்தோஷமாக வீடு திரும்புகின்றனர்.



தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்படும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றி அனைத்து அரசியல்வாதிகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறார் சுரேஷ்.


 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top