எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் உள்ள வான்பயண மின்னணுவியல் (Avionics) ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ‘தக்ஷா‘ என்ற குழுவினர் ஆட்கள் இல்லாமலேயே பறக்கும் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
பெயரிடப்படாத இந்த ஆளில்லாத குட்டி விமானம், நிலஅளவீடுகள், விண்வெளி, புவியியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது, பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.8 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தை எளிதாக எந்தப் பகுதிக்கும் தூக்கிச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பு. விமானத்தின் அடிப்பாகத்தில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளன.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த விமானம், வானத்தில் பறந்தபடி எடுக்கும் படங்கள், வீடியோக்களை லேப் டாப்பில் நாம் நேரடியாகப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இது, ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குப் பறந்து படம் பிடிக்கும் திறன் கொண்டது. பார்ப்பதற்கு மெகா சைஸ் பட்டாம் பூச்சி போல் உள்ளது.
2006-ஆம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்குகிற முயற்சியில் எங்களுடைய தக்ஷா குழு ஈடுபட ஆரம்பித்தது. விமானத்தை போர்க்காலங்களில் ராணுவத்திற்கு உதவும் வகையில்தான் முதலில் வடிவமைத்தோம். ஆனால், அதன்பிறகு மக்களுக்குப் பயன்படுகிற வகையில் மாற்றி வடிவமைத்தோம். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆளில்லா குட்டி விமானங்கள் அதிகளவு எடை கொண்டவையாக இருக்கும். ஆனால், நாங்கள் கண்டுபிடித்துள்ள விமானத்தின் எடை மிகவும் குறைவு.
மும்பை தாஜ் ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது, உள்ளே தீவிரவாதிகள் எங்கிருந்து தாக்குதல் நடத்துகின்றனர் என்று தெரியாமல், உள்ளே நுழைந்த நமது காவலர்கள் பலர் தீவிரவாதிகள் சுட்டதில் இறந்து போனார்கள். அதுபோன்ற நெருக்கடியான சமயங்களில் இந்தக் குட்டி விமானம் அபாரமாகக் கைகொடுக்கும். இதன் மூலம் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கலாம்" என்கிறார் இணைப் பேராசிரியர் செந்தில்குமார்.
தக்ஷா குழுவினர் கண்டுபிடித்துள்ள இந்த விமானம் Low Intensity Confict என்ற அப்ளிகேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த விமானத்தை எல்லைப்பகுதி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் சிறிய பாகங்களாக எடுத்துச் சென்று, அரைமணி நேரத்தில் பொருத்தி குட்டி விமானத்தை உருவாக்கிட முடியும்.
ஆறு வருட கடின உழைப்பில் தக்ஷா குழுவினர் குட்டி விமானத்தை உருவாக்கியிருந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் அங்கமான ‘டார்பா‘ (DARPA – Defense Advanced Research Projects Agency) ஆளில்லாத விமானங்களுக்கான சர்வதேசப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. முதல் சுற்றில் 150 நாடுகளுடன் தக்ஷா குழுவினரும் போட்டியில் பங்குபெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவில் நடந்த போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்த தக்ஷா குழுவினரில் இரண்டு பேருக்கு மட்டுமே அமெரிக்காவிற்குச் செல்லும் விசா கிடைத்தது. ஐந்து பேர் இருந்த குழுவில் இரண்டு பேர் மட்டுமே, ஐந்து பேர் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டிய நிலையில், தன்னம்பிக்கையை இழக்காமல் செந்தில்குமார் தன் குழு ஆராய்ச்சி மாணவர் ஒருவருடன் அமெரிக்கா பறந்தார்.
இறுதிப் போட்டி அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்வார்ட் மிலிட்டரி பேஸில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கப்பற்படைக் குழு உட்பட மொத்தம் ஆறு நாடுகள் போட்டியில் பங்கு பெற்றன. மற்ற குழுவினர்களிடம் மூன்று முதல் ஐந்து குட்டி ஆளில்லா விமானங்கள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒரே ஒரு குட்டி விமானத்தைதான் கொண்டு சென்றோம். முதல் சுற்று அடர்ந்த காட்டுக்குள் நடந்தது. 150 அடிக்கு மேலே உயரம் உள்ள மரங்களுக்கு மேல் பறந்து, ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் நடக்கும் நிகழ்வுகளை எங்களுடன் இணைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் காண்பிக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்துக் குழுவினரின் விமானங்களும் தொழில்நுட்பக் கோளாறினால் அடர்ந்த காட்டுக்குள் விழுந்து நொறுங்கியது. எங்களுடைய விமானம் காட்டுக்குள் நான்கு கிலோ மீட்டர் சென்ற பிறகு, தொடர்பில்லாமல் போனது. எங்களுடைய விமானமும் காட்டுக்குள் விழுந்து நொறுங்கி விட்டது என்று அங்குள்ள ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துவிட்டனர்.
ஆனால், தொடர்பு இல்லாமல் போனாலும் வானத்தில் மிதக்கும்படி செய்து வைத்திருந்த எங்களுடைய தொழில்நுட்பத்தை, அதிகாரிகளுக்கு விளக்கினோம். சொன்னது போலவே காட்டின் நான்காவது கிலோ மீட்டரில் மிதந்து கொண்டிருந்தது. அதுவே அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சார்ஜ் இல்லாமல் போனதால் விமானம் கீழே இறங்கும்போது, தரையில் வீழ்ந்து நொறுங்கியது. மறுநாள் எங்களுடைய விமானத்தை ஓட்டிக் காட்ட இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கையில் நொறுங்கிப் போன விமானத்தின் பாகங்கள் மட்டுமே இருந்தன. மனம் தளராமல் இரவோடு இரவாக 100 மைல் பயணம் செய்து விமானம் சரி செய்யத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரித்து, இரவு முழுக்க உழைத்து சேதமாகியிருந்த விமானத்தை சரி செய்தோம். மறுநாள் காலையில் ராணுவ அதிகாரிகள் சொன்ன இடத்தில் எங்களுடைய விமானம் எந்தத் தடையும் இல்லாமல் சென்று, அங்கு நடக்கின்ற நிகழ்வுகளை போட்டிக் குழுவினருக்குப் படம் பிடித்துக் காட்டியது. அப்போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை" என்று சிலிர்ப்புடன் நினைவு கூர்கிறார் செந்தில்குமார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் ராணுவ நிறுவனமான ‘டார்பா‘விடம் இருந்து உலகின் மிகச்சிறந்த ஆளில்லாத குட்டி உளவு விமானம் என்று சான்றளித்து தக்ஷா குழுவினருக்கு கடிதம் வந்திருக்கிறது. மேலும் தக்ஷா குழுவினரின் விமானத்தை அமெரிக்காவிற்குத் தரும்படி கோரிக்கையும் விடப்பட்டது. ஆனால், இது என் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று சொல்லி அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் செந்தில்குமார்.
எம்.ஐ.டி. கல்லூரியின் முன்னாள் மாணவரான அப்துல் கலாம், இந்த விமானத்தை இயக்கிப் பார்த்து பாராட்டியுள்ளார், மேலும் நாட்டின் பயன்பாட்டிற்கு விரைவில் இதனை அர்ப்பணிக்கும்படி தக்ஷா குழுவினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வளர்ந்த நாடான அமெரிக்காவில் UAV-(Unnamed ariel Vechicle ) ஆளில்லாத குட்டி விமானங்களின் பயன்பாடு அதிகமான அளவில் உள்ளது. ஆனால், நம்மூரில் இது போன்ற விமானங்களை உருவாக்குகின்ற முயற்சியில்தான் இருக்கிறோம். அதற்குத் தேவையான ஆய்வுக்கூடங்கள், வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் சிறந்த கண்டுபிடிப்புகளை நம்மால் உருவாக்க முடியும்" என்கிறார் இணைப் பேராசிரியர் செந்தில்குமார்.
கிரானைட் முறைகேட்டைக் கண்டறிய உதவியது
மதுரை மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக கிரானைட் கற்களை அளவிடும் பணி நடந்தது. குவாரியில் உள்ள ஸ்டாக் யார்டு பகுதியில் ஆயிரக்கணக்கில் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மாவட்ட நிர்வாகத்தினால் இந்தக் குட்டி விமானம் வரவழைக்கப்பட்டு, கிரானைட் குவாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த விமானம் குவாரியில் உள்ள கிரானைட் கற்களால் ஆன ரகசிய அறைகள், பதுங்கு குழிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை துல்லியமாகப் படம் பிடித்து அதிகாரிகளின் ஆய்விற்கு மிகவும் உதவியிருக்கிறது.
மேலும் திருவண்ணாமலையில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில் மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவில் வானில் பறந்து பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை வரலாற்றிலேயே காவல்துறைக் கண்காணிப்பில் ஆளில்லா விமானம் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
குறிப்பிட்ட அளவு பூச்சிக்கொல்லி மருந்தை விமானத்தில் வைத்து பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிர்கள் மீது பத்து நிமிடங்களில் தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசன முறையில் எந்தப் பகுதியில் தண்ணீர் செல்லவில்லை என்று விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் அறிந்து அதன் மூலம் துல்லியமாக சொட்டுநீர்ப் பாய்ச்சலாம். தீ விபத்து ஏற்படும்போது, ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு, விமானத்தை சற்று உயரமாக பறக்கச் செய்து தீயை அணைக்கும் ரசாயனப் பொடியை விமானத்திலிருந்து தூவி தீயை முழுமையாக அணைக்க முடியும்.