.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 27 October 2013

இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!


கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக 'லைட்பீம்' (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது. 

லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. 

இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.
கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது. 

லைட்பீமை தரவிறக்கம் செய்ய https://addons.mozilla.org/en-US/firefox/addon/lightbeam/?src=search

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

facebook_laptop_generic_295 

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்.

மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் பேஸ்புக்கிலும் ,போனிலும் நேரத்தை வீணடித்து படிப்பை கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

மறுநாள் ஐஸ்வர்யா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பேஸ்புக்கை பயன்படுத்த முடியததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். “ பேஸ்புக் என்ன அத்தனை மோசமானதா? இது போன்ற கட்டுப்பாடு உள்ள வீட்டில் என்னால் இருக்க முடியாது.பேஸ்புக் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகளின் இந்த விபரீத முடிவால் ஐஸ்வர்யா பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’ இதை எங்களால நம்ப முடியவில்லை. இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவளை படிப்பில் கவனம் செலுத்த தான் சொன்னோம்.  இப்படி ஒரு விபரீத முடிவு எடுப்பாள் என நினைத்து கூட பார்க்கவில்லை’ என ஐஸ்வர்யா தந்தை சுனில் தஹிவால் வேதனையோடு கூறியுள்ளார்.

பேஸ்புக் பழக்கம் மோகமாக மாறுவதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இது பல விபரீதங்களுக்கு வித்திடலாம் என்பதற்கான வேதனையான உதாரணம் இந்த சம்பவம்.

பேஸ்புக் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாட்டைவிட சுயகட்டுப்பாடே சிறந்தது என்பதை பயனாளிகள் உணர்ந்து கொண்டால் நல்லது.

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


வீரம் படத்துக்குப் பிறகு, நடிகர் அஜித் நடிக்கும் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் படம், தீபாவளிக்கு வெளியாகிறது. தற்போது, வீரம் படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
வீரம் படத்திற்கு பிறகு, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தினையும் 'ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2014 முதல் துவங்கவிருக்கிறது. நகரத்தில் நடைபெறும் த்ரில்லர் வகை கதையாம். வித்தியாசமான கெட்டப்பில் அஜித் தோன்றுவார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

'ஆரம்பம்' படத்தின் வியாபாரத்தை மட்டும் வைத்து, ஏ.எம்.ரத்னம் பணச்சிக்கலில் இருந்து மீளமுடியாது என்பதால், கெளதம் மேனன் - ஏ.எம்.ரத்னம் இணையும் படத்தில் அஜித் நடித்து தரவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது உறுதியாம்!

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாநாட்டில் கலந்து கொண்டால்தான் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச முடியும் என கூறியுள்ளார். பிரதமர் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை, ஆனால் நான் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

27 - CHOGM-Sri-Lanka.

949–ம் ஆண்டு காமன் வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா, மியான்மர், ஏமன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், சூடான், குவைத், பக்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 53 நாடுகள் இடம் பெற்றுள்ளன.இதன் தலைமையகம் லண்டனில் செயல்படுகிறது. காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இங்கிலாந்து ராணி 2–ம் எலிசபெத்தும், பொது செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மாவும் செயல்பட்டு வருகிறார்கள்.
நைஜீரியாவில் 1995–ல் கென்சரோ – விவா என்பவர் தூக்கில் போடப்பட்டதால் அந்த நாடு 1995–ல் இருந்து 1999–ம் ஆண்டு வரை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கிவிட்டது.


இதேபோல் பாகிஸ்தானில் அதிபர் பர்வேஸ் முஷ்ரப்பின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1999–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பாகிஸ்தான் சஸ்பெண்டு செய்யப்பட்டது.

அதன்பிறகு பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை கண்டித்து அந்த நாடு மீண்டும் 2–வது முறையாக 2007–ம் ஆண்டு முதல் நீக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் அதிபர் முகாபே தேர்தல் மற்றும் நில சீர்திருத்தங்களில் மாற்றம் செய்ததால் அந்த நாடு 2003–ம் ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டது. காமன்வெல்த் நாடுகள் மீது இதுபோன்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததால் அந்த நாட்டையும் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.மேலும் இலங்கையில் வருகிற டிசம்பர் 15–ந்தேதி காமன்வெல்த் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.இதையடுத்து காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. என்றாலும் மாநாட்டை இந்தியா புறக்கணிக்காது, இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறுகையில், காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ள இருப்பதை உறுதி செய்தார்.அதிலும் தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கபடுவது தொடர்கதையாக இருந்துவருகிறது இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு கலந்துகொண்டால் தான் தமிழக மீனவர்கள் நலன் காக்கப்படும் என்று சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவில் இருந்து செல்லும் தூதுக் குழுவுக்கு தலைமை ஏற்பது யார்? என்பது அறிவிக்கப்படவில்லை. பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர்தான் தலைமை ஏற்கவேண்டும். அதுபற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சல்மான் குர்ஷித் பங்கேற்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Khurshid will attend CHOGM


******************************************


External Affairs Minister Salman Khurshid will represent India at the Commonwealth Heads of Government (CHOGM) summit, though the Tamil Nadu Assembly unanimously passed a resolution urging boycott of the meeting because of human rights abuses in Sri Lanka

எந்திரனை விஞ்சிய அஜீத்தின் ஆரம்பம் டீசர்!

27 - arrmbam-movie-
    
வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய அளவில் வியாபாரம் கிடையாது என்றாலும் சமீபகாலமாக அங்கும் மார்க்கெட் கொஞ்சம் எகிறிக் கொண்டுதான் வருகிறது.ஆனாலும் அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20 முதல் 30 ஆகத்தான் இருக்கும். அதுவும் டாப் ஹீரோகக்ளின் படம் மட்டுமே ரிலீஸாகும். மேலும் தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்துதான் ரிலீஸ் செய்வார்கள்.இந்நிலையில் தீபாவளியையொட்டி ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


வெளிநாட்டில் இதற்கு முந்தைய சாதனை எந்திரன் படம் தமிழ் – இந்தி இரண்டு மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 85 திரையரங்குகளில் ரிலீஸானாலும் தமிழில் மட்டும் 63 இடங்களில் ரிலீஸாகியிருந்தது. விஜய் நடித்த தலைவா படம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 54 இடங்களில் ரிலீஸானது.அதை எல்லாம் தாண்டி இப்போது ஆரம்பம் தமிழில் மடடும் 75 இடங்களில் ரிலீஸாகவிருக்கிறது என்பதை சிலாகித்து பேசுகிறார்கள்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top