.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 5 November 2013

பூசணிக்காயில் உலக சாதனை!


மிகப்பெரிய பூசணிக்காயை துடுப்பு படகாக்கி, 100 மீட்டர் தூரம் கடந்து சென்று, பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். 


270 கிலோ எடையுள்ள ராட்சத பூசணிக்காய்க்குள் அமர்ந்தபடி, இங்கிலாந்தின் போர்ட்ஸ்மோவுத் பகுதியில் உள்ள நீர் நிலையில் இந்த சாதனையை திமித்ரி என்ற இளைஞர் நிகழ்த்தியுள்ளார். 
 
100 மீட்டர் தூரத்தை 2 நிமிடத்தில் கடந்து, புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 
 
சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ராட்சத பூசணிக்காய் கண்காட்சியில் இந்த பூசணிக்காயை வாங்கியதாக தெரிவித்த திமித்ரி, இதன்மூலம் புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். 
 
இதனிடையே, இங்கிலாந்தின் மற்றொரு பகுதியில் விரைவில் தொடங்கவுள்ள ஹாலோவின் திருவிழாவுக்காக, பூசணி பழங்களால் ஆன குடில்கள் மட்டுமின்றி, பயமுறுத்தும் உருவங்களும், வேடிக்கை காட்டும் முகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு வியக்கின்றனர்.

அதுதான் அஜீத்: ஆர்யா பெருமிதம்!



அஜீத், என்னை சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அஜீத் எப்போதும் என் பேவரைட். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ஃபேன். அவருடன் நடித்தபோது, சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார். அதே சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னுடன் அடித்த அரட்டையெல்லாம் ஒரு நல்ல நண்பரை எனக்கு ஆரம்பம் பெற்றுத் தந்துள்ளது.


அஜீத்துக்கு காயம் ஏற்பட்ட போது முழு டீமும் கலங்கிப்போச்சு. டூப் போடாம அஜீத் நடிச்சாரு. எதிர்பாராதவிதமா அந்த விபத்து நடந்துருச்சு. ஆனா ஒண்ணு சொல்லணும் அஜீத்தோட தில் மெய்சிலிர்க்க வச்சுது. படத்தில் என்னுடைய நடிப்பை அஜீத் பாராட்டியது அவருடைய பெருந்தன்மையை காட்டுது.


படத்துல தனக்கு இணையா இன்னொரு ஹீரோ நடிக்கிறது எந்த சூப்பர் ஸ்டாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஆனா அதை ஏத்துக்கிட்டது மட்டுமில்ல. எனக்கு முழு சப்போர்ட்டும் பண்ணினாரு. பட விளம்பரத்துல தன்னோட பெயரோடு என் பெயரும் வர வச்சாரு. அதுதான் அஜீத் என இவ்வாறு ஆர்யா கூறினார்.

உலக செஸ் சாம்பியன் போட்டி: தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!



இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வே வீரர் கார்ல்ஸென் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.


முன்னதாக, செஸ் சாம்பியன் போட்டியை முதல்வர் ஜெயலலிதா வரும் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். போட்டி தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவை ஒட்டி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐந்து நட்சத்திர தனியார் ஹோட்டலான ஹயாத் ரெஜன்சியில் நடைபெறுகிறது. இதற்கென ஹோட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி அறையில் அவர்கள் இருவரும் விளையாடுவதை கண்ணாடித் தடுப்புகளின் வழியாக பார்ப்பதற்கென ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


சுமார் 400 பேர் வரை போட்டியை பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 12 சுற்றுகள் கொண்டதாக இருக்கும்.


மிகவும் இளம் வயதுக்காரர்: நார்வே நாட்டின் செஸ் வீரர் கார்ல்ஸெனின் வயது 22. அவர் தன்னை விட 21 வயது அதிகமுள்ள ஆனந்தை எதிர்த்து விளையாடுகிறார். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக கார்ல்ஸென், திங்கள்கிழமை மாலை சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


போட்டிக்கான பரிசுத் தொகையாக ரூ.14 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.29 கோடியை வழங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் ஆனந்த், தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை முதலே சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்தப் போட்டி சென்னை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்! வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா!

 


 சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடம் பற்றி ரகசிய தகவல் அளித்தேன். ஆனால் சொன்னபடி ரூ.150 கோடி வெகுமதி தர அமெரிக்கா மறுக்கிறது என அமெரிக்காவை சேர்ந்த ரத்தினக்கல் வியாபாரி டாம் லீ குறை கூறியுள்ளார்.


அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்த ரத்தினக்கல் வியாபாரி டாம் லீ(63). இவர் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து ரத்தினக்கல் வியாபாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளார்.


இதனால் அவரது குடும்பத்தினருடன் டாம் லீக்கு நெருக்கம். அப்போது பாகிஸ்தான் வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், டாம் லீயிடம் கடந்த 2003ம் ஆண்டு ஒரு ரகசிய தகவலை கூறியிருக்கிறார். ‘‘உங்க அமெரிக்கா வலை வீசி தேடும், ஒசாமா பின்லேடன், எங்கிருக்கிறார் தெரியுமா?’’ என கேட்டுள்ளார் அந்த நபர். ‘‘பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என கூறுகிறார்கள்.


ஆனால் அவரது மறைவிடத்தை அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ.யால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார் டாம் லீ.  ‘‘இங்குதான் பக்கத்தில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் வசிக்கிறார். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெஷாவரிலிருந்து அபோதாபாத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதே நான் தான். நான் உங்க எப்.பி.ஐ.,விட பெரிய உளவாளி’’ என பெருமையாக கூறியுள்ளார் அந்த நபர்.


இத்தகவலை டாம் லீ உடனடியாக அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், எப்.பி.ஐ.க்கும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் அபோதாபாத்தில் உள்ள பின்லேடன் வீட்டுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொன்றனர். இது டாம் லீக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 8 ஆண்டுக்கு முன் நாம் எப்.பி.ஐ.க்கு கூறிய ரகசிய தகவல் மிகச் சரியாக இருந்துள்ளதே. இதற்கு அரசிடம் இருந்து நிச்சயம் வெகுமதியும், பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தார். பின் லேடன் கொல்லப்பட்ட பிறகும் எப்.பி.ஐ.யிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.


எப்.பி.ஐ டைரக்டருக்கு இது தொடர்பாக பல முறை டாம் லீ கடிதம் எழுதினார். ‘‘நான்தான் பின்லேடன் இருப்பிடம் குறித்து 2003ம் ஆண்டு தகவல் தெரிவித்தேன். எனக்குத்தான் 25 மில்லியன் டாலர் (ரூ.154 கோடி) வெகுமதியை அளிக்க வேண்டும்’’ என டாம் லீ கோரியிருந்தார். எதுவும் பலனளிக்கவில்லை.


சட்டப்படி வெகுமதியை கேட்டுப் பெற டாம் லீ முடிவு செய்தார். இதற்காக சிகாகோவை சேர்ந்த ‘லோவி அண்ட் லோவி’ என்ற சட்ட நிறுவனத்தின் உதவியை நாடினார். அவர்கள் இது தொடர்பாக எப்.பி.ஐ டைரக்டர் ஜேம்ஸ் காமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கும் எப்.பி.ஐ பதில் அளிக்கவில்லை. இதனால் சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் எப்.பி.ஐ குறித்து டாம் லீ புகார் கூறியுள்ளார்.


பின்லேடன் மறைவிடம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘‘அபோதாபாத்தில் இருந்த பின்லேடன் வீடு 2005ம் ஆண்டு வரை கட்டப்படவில்லை. 2011ம் ஆண்டு ஏப்ரலில்  பின்லேடன் அங்கு குடியேறியிருக்கலாம் என பாகிஸ் தான் அதிகாரிகள் தெரிவித்தனர்’’ என்கின்றனர்.


எக்ஸ்ட்ரா தகவல்


கடிதம் கொண்டு சென்ற நபர் மூலமாகவும், பின்லேடன் குடும்பத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மூலமாகவும் பின்லேடன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாயின.

வடக்கு ஆஸ்திரேலியா கடலில் கூன்முதுகு கொண்ட புதிய வகை டால்பின் கண்டுபிடிப்பு!



வடக்கு ஆஸ்திரேலியா கடலில் புதிய வகையான கூன்முதுகு கொண்ட டால்பின் மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


இந்த டால்பின் மீன் இனத்துக்கு அதிகாரபூர்வமான பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை.


பசிபிக் மற்றும் இந்திய சமுத்திரங்களில் வாழும் நூற்றுக்கணக்கான கூன்முதுகு மீன் இனங்களையும் மீன்களின் மண்டையோடுகள் மற்றும் திசுக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.


இந்த ஆய்வுகளின் முடிவிலேயே இந்த டால்பின் மீன் இனத்துக்கு பெயர்வைக்க விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர்.


இந்த மீன் இனங்களுக்கு முதுகில் உள்ள துடுப்பு போன்ற சிறகுக்கு கீழே கூன் விழுந்திருக்கும்.


 இதுவரை கண்டறியப்பட்டுள்ள மூன்று டால்பின் இனங்களில் இரண்டு இனங்கள் மீன்பிடி நடவடிக்கைகளாலும் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களாலும் அழிவடையும் அபாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top