.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 11 November 2013

மயில் தேசியப்பறவையானது எப்படி?

டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.



 அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில்  மட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.


 ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.

கூச்சத்தை விரட்ட....

நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள்.



1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள்.


2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?


3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
 
4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்
.

5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள்.


6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண்பன்' என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.


7.ஏதாவது தவறு செய்து விட்டால்,இன்று மிகப் பிரபலமாக இருக்கும் பலரும் தவறு செய்தவர்கள்தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.


8.உங்களைப் போல பலரும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.


9.மற்றவர்களிடம் அதிகமாகப் பழக சந்தர்ப்பம் வரும்போது,தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள்.

INDIA தேசிய கீதத்தின் பொருள்....

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாகே – உனது மங்களகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை ஹீனா சிந்துக்கு தங்கம்!

 

உலகின் டாப்-10 துப்பாக்கி சுடும் வீரார்கள் பங்கேற்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்ற இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டார். நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் மொத்தம் 384 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார்.

நடப்பு சாம்பியன் சோரனா அருணோவிக் (செர்பியா) 2 புள்ளிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கமும், 381 புள்ளிகள் பெற்றிருந்த விக்டோரியா சாய்கா (பெலாரஸ்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இதன்மூலம், உலகக் கோப்பை இறுதியில் தங்கம் வென்ற இந்திய வீரர்களில் அஞ்சலி பகவத் (2003), ககன் நரங் (2008) ஆகியோருடன் ஹீனா சிந்துவும் இணைந்துள்ளார்.

Indian shooter Heena Sidhu creates history by winning ISSF World Cup gold

****************************************


Woman shooter Heena Sidhu created history by becoming the first pistol exponent from India to win a gold medal at the ISSF World Cup finals in Munich, Germany.Heena won the gold medal yesterday by beating double Olympic Champion Guo Wenjun from China, world champion Arunovic Zorana from Serbia and multiple Olympic medallist Olena Kostevych of Ukraine in a stiff competition.

உடல் சூட்டை குறைக்க அல்லது கூட்ட உதவும் பிரேஸ்லெட் !

 

இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று வணிக ரீதியாக அதை தயாரிக்கும் முயற்சியிலும் மாணவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஆய்வு மாணவரில் ஒருவரான சாம் ஷேம்ஸ் ,”நாங்கள் உருவாக்கியுள்ள ரிஸ்ட்டிஃபை கருவி, வெப்ப மின்னோட்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்பியலில் பெல்டியர் விளைவு என்று ஒன்று உண்டு. வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது உலோகங்களின் ஒரு இணைப்புப் பகுதி வெப்பத்தை வெளியேற்றும், இன்னொரு பகுதி வெப்பத்தை உள்ளிழுக்கும் என்பதை பிரான்ஸ் விஞ்ஞானி பெல்டியர் கண்டறிந்தார். அந்த தத்துவம்தான் எங்கள் கண்டுபிடிப்புக்கு அடிப்படை. ரிஸ்ட்டிஃபை கருவி சற்று பெரிய வாட்ச் அளவில் இருக்கும். வாட்ச் போலவே மணிக்கட்டில் இதை அணிந்துகொள்ள வேண்டும். பெல்டியர் கூலர் எனப்படும் இரண்டு வெவ்வேறான வெப்பக் கடத்திகள் இதில் இருக்கின்றன. தோல் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும்போது பெல்டியர் கூலருக்கு வேலை இல்லை. தோல் வெப்பநிலை அதிகரித்தால், பெல்டியர் கூலர் வேலை செய்யத் தொடங்கும். தோலில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, தோலுக்குக் குளிர்ச்சியை வழங்கும்.

உடம்பின் ஏதாவது ஒரு பகுதியைக் குளிரச் செய்தாலே, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஒருசில வினாடிகளில் அந்த குளிர்ச்சி பரவிவிடும்.பனிப் பிரதேசங்களில் அதிக குளிரில் இருப்பவரின் உடல் வெப்பநிலையை அதிகரித்து, உடலுக்கு சூட்டைக் கொடுக்கவும் ரிஸ்டிஃபை கருவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய அளவு லித்தியம் பாலிமர் பேட்டரி உதவியுடன் இது செயல்படுகிறது” என்றார் அந்த மாணவர்.

எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் மெட்டீரியல் சயின்ஸ் டிசைன் போட்டி கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறது ரிஸ்டிஃபை. போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ரிஸ்டிஃபை பற்றிய அடுத்தகட்ட ஆய்வுக்கான நிதியுதவியும் அந்த மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது..

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top