இளையராஜாவுடன் பணியாற்றுவதற்கு காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.
விஜய் டி.வியில் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் வைரமுத்து கலந்துக் கொண்டார். அப்போது அவரிடம் "மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அக்கேள்விக்கு, "காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு, யதார்த்தங்கள் வேறு. இப்போது கூட அவரது இசையை நேசிக்கிறேன். பழைய பாடல் கேட்கிறபோதெல்லாம் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பார்த்து பேசலாம் என்று கூட தோன்றுகிறது.
ஆனால், சில சின்னச் சின்ன தடைகள் பெரிய பெரிய சுவர்களை எழுப்புகின்றன. அந்தச் சுவர்கள் இல்லை என்று நான் தீர்மானிக்கிற போது, அது சாத்தியமாகலாம். ஒன்று, அந்த சுவர்கள் இடியலாம். அல்லது சிலர் இடிக்கலாம். அதன் பிறகு உறவுகள் எப்படி சாத்தியமாகிறது என்று பார்ப்போம்.
என்னோடு சேர்ந்து தான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை. அவரோடு சேர்ந்து தான் பணியாற்றி ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையிலும் நான் இல்லை. ஆனால், காலம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு கட்டுப்படுவதற்கு நான் காத்திருப்பது மாதிரியே அவரும் காத்திருந்தால், சாத்தியமாகலாம்.
நாங்கள் இனிமேல் இணைந்து பணியாற்றினால், எண்பதுகளில் நாங்கள் கொடுத்த பாடல்களைப் போல நாங்கள் எழுதிக் கொடுத்து இசையமைத்தால், அது பழைய பாடல் என்று சொல்லுவார்கள் தமிழர்கள். அதை விட்டு விட்டு நவீன பாணியில் அவர் இசையமைத்து, நவீன மொழியில் நான் பாட்டெழுதி, நவீனமான முறையில் படமாக்கப்பட்டால், எங்கே போயிற்று இவர்களின் பழைய ஜீவன் என்று கேட்பார்கள். இந்த இரண்டு பழிகளுக்கு மத்தியில், நாங்கள் தனித்திருப்பதே வெற்றி!’’ என்று கூறியுள்ளார்.