.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 1 December 2013

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்!


இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.

கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.

வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.

இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.

முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.

உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.

தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.

கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.


வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?

எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?


இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?

நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.

காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.

எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.


மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?

தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.


எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.

பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.

சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.

‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.

‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்

எது இன்பம்...?


நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.


புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!


நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?


சிறிது காலம் அழுகின்றோம்;


சிறிது காலம் சிரிக்கின்றோம்;


கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!


உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?


இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறது.

திருட்டு மொபைலை மோப்பம் பிடிக்கும் ஸ்மார்ட் சிம்!

 

மொபைல் திருட்டு போனால் ஒரே வழி அதை மறந்து விட வேண்டும் ஏன் என்றல் எடுத்தவன் டக்குனு ஆஃப் பண்ணி விடுவதுதான்.

 அப்புறம் ஆஃப்லைன்ல சிம்மை எடுத்திட்டு ரீஸெட் பண்ணி ஒன்று அவன் உபயோகிப்பான் அல்லது விற்று விடுகிறார்கள். அதனால் ஐ எம் ஐ வைத்தெல்லாம் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விடுகிறது.

அதனை போக்க ரஷியாவின் மாஸ்கோ மெட்ரோ போலீஸ் ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷ்னிலும் ஒரு மோப்பம் பிடிக்கும் சிம் போல நிறுவ உள்ளனர். இது எங்கே எங்கே நிறுவபட்டிருக்கிறது என்ற தகவல் போலீஸுக்கு மட்டும் தான் தெரியும்.

 இதனால் நீங்கள் தொலைத்த மொபைல் ஃபோனை உடனே போலீஸில் தெரிவித்தால் அவர்கள் திருட்டு ஃபோன் டேட்டாபேஸில் இந்த ஃபோனை லிஸ்ட் செய்து விடுவார்கள்.

பின்னர் இதை எடுத்த நல்லவன் வேறு சிம்மோ அல்லது சைலைன்ட்டாய் யூஸ் பண்ணினால் உடனே சங்கூதி போலீஸுக்கு அலெர்ட் செய்து விடும்.

அது போக அவர் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் இருக்கும் வரை அலெர்ட் செய்து அவரது தற்போதைய மூவென்ட்டை லைவாய் காட்டி விடுமாக்கும்.அப்புறம் என்ன காப்பு காப்புதான்.!

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்!

 

உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?


அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.


அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.


அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.


ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.


ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.


அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.


ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?


இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்


இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.


இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.


இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?


உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.


உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல.


உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?


பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி


கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.


வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.


குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்


பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.


காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.


தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.


நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.


அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.


ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.


அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.


அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.


மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.


அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.


குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.


எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.


என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?


கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?


எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?


கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?


பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?


சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?


வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.


தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.


தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.


பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.


உடையவன் பாராத வேலை உருப்படாது.


தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.


எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை


ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.


இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்


அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.


தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.


வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.


ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.


காற்றில்லாமல் தூசு பறக்காது.


காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.


எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.


சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.


பனி பெய்து குளம் நிரம்பாது.


பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.


நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.


பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.


இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?


மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.


    காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
 

  அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


    ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.


    சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.


    இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.


    வாய் நல்லதானால் ஊர் நல்லது.


    கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.


    காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.


    மயிர் சுட்டுக் கரியாகாது.


    ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.


    விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)


    திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)


    பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)


    ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.


    ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.


    ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.


    தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.


    அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.


    அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.


    தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.


    எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.


வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.


    சாமி காட்டுமே தவிர ஊட்டாது.


    அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.


    இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.


    உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.


    கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.


    தெய்வம் பாதி திறமை பாதி.


    தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.


    ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.


    சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.


    தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.


    அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.


    மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.


    கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.


    கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.


    பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.


    குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.


    பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.


    அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.


    எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.


    அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.


    முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.


    கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

    அக்காள் இருந்தால் மச்சான் உறவு.


முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.

காட்சியும் அதன் கவிதையும்!


 
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!



நீங்கள் உணவு தந்தால் கூட
நாங்கள் சாப்பிடும் சக்தியை
இழந்து விட்டோம் ....!!!

அப்படியென்றால்
எதற்காக கைநீட்டுகிறாய்...?
என்று கேட்கிறீர்களா ...?

நீட்டி நீட்டியே எங்கள்
கைகள் தானாக நீண்டு
விட்டன ....!!!



செல்கிறோம்
வருத்தி வருத்தி
உழைக்க செல்கிறோம்
எதிர் பார்க்கையுடன்
செல்கிறோம் ....!!!

செல்லவதை மட்டுமே
சொல்கிறோம்
வருவதை மனிதநேயம்
தான் சொல்ல வேண்டும் ....!!!

நாங்கள் விடும் கண்ணீர்
கடல் அன்னைக்கும்
புரியாது கண்ணீரின்
சுவையும் உவர்ப்புத்தானே ....!!!



இந்தா பெண்ணே ...
இப்போது என்றாலும்
இதய கதவை திறந்து
கொள் ....!!!


சகோதரியே ...!!!
இந்தவயதில் இருந்து
சுற்றியல் பிடித்திட்டோமே
சுற்றியலைவிட
வண்மையாகிவிடும்
நம் கைகள் -எம்மை
வேலைக்கு அழைத்த
முதலாளி எதையுமே
பிடிக்காமல் எப்படி
இதயம் இரும்பாகியது ..?
அவருக்கு...?





கட்டிட கலையின்
அற்புத கலை நாங்கள்...!!!

கட்டப்பட்ட கட்டிடத்தை
ரசிப்பவர்களே ....!!!!

கற்களை இப்படி
அடுக்குவதும்
ஒரு கலைதான் ...!!!

மாயக்கண்கள்
எம்மை கூலியாக தான்
பார்க்கும் ....!!!



அழகையும்
சிரிப்பையும்
பார்க்கும்
உள்ளங்களே
ஆபத்தும் உண்டு ....!!!
மறந்து விடாதே ....!!!




தனிமையில் இருந்தேன்
தானாக வந்தாய்
காதல் கொண்டாய்
இப்போ
தனிமைப்படுத்தி
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக
இருப்பதில் சுகம்
உண்டுதான் கண்ணே ....!!!




அன்புக்கு கட்டுப்பட்டால்
அது உனக்கொரு விலங்கு...!!!

ஆசைக்கு கட்டுப்பட்டால்
அதுவும் உனக்கு விலங்கு ....!!!

கோபப்பட்டால் தானாக வரும்
விலங்கு .....!!!

வாழ்க்கையில் ஒரு
விலங்கு வந்தே தீரும்
விலக்கிக்கொண்டவன்
ஞானி ....!!!




தயவு செய்து எம்
வீட்டை கலைக்காதீர்
அழகுக்காக எம் வீட்டை
அபகரிப்பவர்களே
உங்கள் செயலால்
அருகி வரும் இனத்தில்
நாங்களும்
ஒன்றாகி விட்டோம் ....!!!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top