.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 1 December 2013

தினேஷ்கார்த்திக்- தீபிகாபல்லிகல் திருமண நிச்சயதார்த்தம்: சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்தது!

 

சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும், சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனையான சென்னையை சேர்ந்த தீபிகா பல்லிகலும் கடந்த ஒரு ஆண்டாக நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் உடல் தகுதிக்காக ஒரே பயிற்சியாளரிடம் பயிற்சி பெற சென்றபோது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவருக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டூவிட்டர் இணைய தளத்தில் வெளியிட்டனர்.

இருவரும் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த உள்ளனர். இதனால் திருமணம் 2015–ம் ஆண்டு நடக்கிறது. 28 வயதான தினேஷ் கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆனவர். 2007–ம் ஆண்டில் நிதிகா என்பவரை திருமணம் செய்திருந்தார். மனக்கசப்பு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர்.

விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் 2004–ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடியதால் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். ஐ.சிசி சாம்பியன்ஸ் டிராபி, ஜிம்பாப்வே பயணத்தில் சிறப்பாக ஆடினார். ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ் தொடரில் கழற்றிவிடப்பட்டார். தற்போதைய தென்ஆப்பிரிக்கா பயணத்திலும் இடம் பெறவில்லை. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சவுராஸ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபியில் சதம் அடித்தார்.

தீபிகா பல்லிகல் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பிடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

ஆருஷி கதை படமாக்க அனுமதி தந்தால் ரூ.5 கோடி!

 

ஆருஷி வாழக்கை கதையை படமாக்க அனுமதி தந்தால் அவரது பெற்றோருக்கு ரூ.5 கோடி தர தயாராக இருப்பதாக லண்டன் பட அதிபர் அறிவித்துள்ளார்.

நொய்டாவை சேர்ந்தவர்கள் பல்டாக்டர் தம்பதி ராஜேஷ் தல்வார், நுபுர்த்தல்வார். இவர்களது மகள் ஆருஷி. இவரும் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதுதொடர்பாக இந்த வழக்கில் ஆருஷி, ஹேம்ராஜூவை ஆருஷியின் பெற்றோரே கொலை செய்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 இந்த வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆருஷி கதையை புத்தகமாகவும் சினிமா படமாகவும் தயாரிக்க உள்ளதாக லண்டனை சேர்ந்த எழுத்தாளரும் படத்தயாரிப்பாளருமான கிளிப் ரன்யார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக தல்வார் குடும்பத்திற்கு ரூ.5 கோடி தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா வந்த தல்வார் தம்பதியினரை சிறையில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

சிறை விதிப்படி 15 நாட்களில் 3 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். தல்வாரின் உறவினர்கள் 3 பேர் ஏற்கனவே சந்தித்து உள்ளனர். எனவே 14 நாட்களுக்கு பிறகுதான் தல்வாரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்றார்.

தல்வார் தம்பதிகள் நலமுடன் இருக்கின்றனர். சிறையில் பல் மருத்துவ முகாம் நடத்தி கைதிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தனர் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடிவயிற்றில் இருதயத்துடன் உயிர் வாழும் இளைஞர்!

 

பிறக்கும்போதே அடிவயிற்றில் இருதயத்துடன் பிறந்து 24 வயது வரை உயிர்வாழ்ந்து கொண்டியிருக்கும் இளைஞர் அதிசயமாக கருதப்படுகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் இருதயத்தை பொருத்த சீன டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சீனாவின் கினாம் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூஜிலியாங் (வயது 24). இவர் முடிதிருத்தல் தொழில் செய்து வருகிறார். பிறக்கும்போதே இவருக்கு அடிவயிற்றில் இருதய துடிப்பின் சத்தம் கேட்டது. ஆனால் இவரது பெற்றோர்கள் இதை சாதாரணாகவே எடுத்துக்கொண்டனர்.

நாளடைவில் ஹூஜிலியாங்கின் இருதயம் அடிவயிற்றில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவர், பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. கடினமாக வேலை செய்தால் அல்லது ஓடினால் மூச்சிறைப்பு ஏற்பட்டது. அடிவயிற்றில் இருதயம் துடிப்பதை அவரால் உணர முடிந்தது.

இந்தநிலையில் பத்திரிகை செய்தி ஒன்றில் இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு வாலிபருக்கு கடந்த 2012_ல் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து இருதயத்தை இடமாற்றம் செய்து சாதனை படைத்தனர். இதனை படித்த ஹூஜிலியாங், தானும் இதேபோல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பி, அந்த மருத்தவமனையில் சேர்ந்துள்ளார்.

சீன டாக்டர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை அடிவயிற்றில் உள்ள இருதயத்தை இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் பொருத்த உள்ளனர். இதன் மூலம் தனக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹூஜிலியாங் உள்ளார்.

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம்: நாளை அனுப்புகிறது சீனா!

 

சீனா முதல் முறையாக சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தனித்துவமான இடத்தைப் பெற வேண்டும் என்ற சீனாவின் லட்சியத் திட்டம் நிறைவேறுகிறது.

சாங் இ-3 (கியான் வைபிங் -3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக விண்கல ஏவுதளத் தலைமை அலுவலகக் குழுவினர் தெரிவித்தனர்.

சீனா இதற்கு முன்பு சந்திரனுக்கு அனுப்பிய 2 விண்கலங்களும் சந்திரனின் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. தற்போது சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை சீனா முதல் முறையாக அனுப்புகிறது.

விண்கலத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஏவுதளமும் அதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாங் இ-3 விண்கலம் "யுது' என்று அழைக்கப்படும் சந்திரனை ஆராய்ச்சி செய்யும் கருவியையும், அதை தரையில் நிலைநிறுத்தக் கூடிய கருவியையும் தாங்கிச் செல்கிறது. ("யுது' என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மக்களால் சந்திரக் கடவுளாக வணங்கப்பட்டு வரும் வெள்ளை முயலைக் குறிப்பதாகும்.)

சந்திரனில் உள்ள இயற்கை வளங்கள், மேற்பரப்பில் உள்ள பொருள்கள், புவியியல் அமைப்பு போன்றவற்றை "யுது' ஆய்வு செய்யும்.

விண்வெளி மையத்தில் ரஷியா அமைத்துள்ள மீர் விண்வெளி நிலையத்தைப்போல, ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை தானும் அமைக்க வேண்டும் என்பதுதான் சீனா தொடர்ந்து விண்கலங்களை சந்திரனுக்கு செலுத்தி வருவதின் பின்னணியாகும்.

சந்திரனையும் தாண்டி, செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் எங்களது விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் செயல்படத் தொடங்குவோம் என்று சாங் இ-3 விண்கலத்தின் தலைமை விஞ்ஞானி யே பெய்ஜியான் தெரிவித்தார்.

செவ்வாய் கிரகம் நோக்கி “மங்கள்யான்” : சாதித்து காட்டிய இந்தியா!

 

நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான் செயற்கைக்கோள் நேற்று வரை பயணித்த புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கியது.இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை, 12:30 மணிக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது. அண்மையில் சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதை அடுத்து இந்தியாவின் மங்கல்யான் பயணத்தை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்த நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனை பெருமைக்குரியதுதானே?

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top