.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 1 December 2013

மர்மத்தீவு ஒரு பார்வை!

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.

அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.

கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஒரு காலகட்டத்தில் நன்றாக, இயல்பாக இருந்த கிராமம் தான் அது. அங்கே இருந்த மக்கள் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை செய்து வந்தனர்.

அவர்கள் அடிக்கடி தீவை விட்டு வெளியே வந்து நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கும் மீன், விலங்குகள் போன்றவற்றை அளிப்பதும் வழக்கமாக இருந்தது.

திடீரென சில நாட்களாக தீவிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என நினைத்த மக்கள் அந்தத் தீவுக்குச் சென்று தகவல் அறிந்து வர விரும்பினார்கள்.

தீவுக்குள் சென்ற மக்கள் அதிர்ந்தனர். அங்கே குடிசைகள் எல்லாம் காலியாய் கிடந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளும், பிடிக்கப்பட்ட மீன்களும் அழுகிப் போய் கிடந்தன. ஆனால் மக்களின் சுவடுகள் கூட மிச்சமில்லை.

என்னவானார்கள் இவர்கள் ? எங்கே போனார்கள் ? எதுவும் தகவல் இல்லை ! பயந்து போன மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் தங்கள் இருப்பிடம் நோக்கி. அதன் பின் பறவைகளைத் தவிர யாரும் அந்த தீவில் தங்கள் நிழல்கள் விழ அனுமதிக்கவில்லை.

இப்போது அந்த இடம் சாபத்துக்குள்ளான, மர்மத் தீவாக இருக்கிறது.

அந்த தீவில் யாருமே தங்குவதில்லை, அங்கே தங்குபவர்கள் மாயமாகி விடுவார்கள் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம். சில கிலோமீட்டர் அகலமே உள்ள அந்த தீவு சபிக்கப்பட்ட தீவாக மக்களிடையே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அங்கே அப்படி என்ன மர்மம் தான் இருக்கிறது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

1935 களில் மார்டின் ஷெஃப்லிஸ் மற்றும் பில் டேசன் இருவரும் விவியன் என்பவருடைய தலைமையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

அந்த தீவில் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்த்து விடுவோமே என்று கங்கணம் கட்டிக் கொண்டு அந்தத் தீவில் இருவரும் சென்றனர்.

நாட்கள் நகர்ந்தன. போனவர்கள் திரும்பவில்லை. பதினைந்து நாட்கள் பொறுமையுடன் காத்திருந்தவர்களை பயம் பிடித்துக் கொண்டது. உடனே விவியன் பாதுகாவலர் குழுவை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.

பாதுகாவலர் படை காணாமல் போன இருவரையும் தேடி தீவுக்குள் நுழைந்தது. அக்கு வேறு ஆணி வேறாக தீவை சல்லடை போட்டுத் தேடியும் இருவரும் அகப்படவேயில்லை !

ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது.

திடுக்கிட்ட விவியன் அரசு உதவியுடனும், வாகனங்களுடனும் தீவை மீண்டும் ஒருமுறை தலைகீழாய் புரட்டித் தேடினார். ஊஹூம். ஒன்றும் கிடைக்கவில்லை.

தேடப் போனவர்கள் திரும்பி வந்ததே பெரிய விஷயம் என்று பேசிக் கொண்டனர் உள்ளூர் மக்கள்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

 

ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு தள்ளி, ஒரு வீட்டில் அவன் இருப்பதாக கூறினர். அங்கு சென்றோம்.

குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருக்க, நண்பனும் இன்னும் சிலரும், கையில் உருட்டுக் கட்டைகளோடு காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா விஷயம்?' என வினவினோம்...

"அது ஒண்ணுமில்லடா... இந்த வீட்டுல இருக்கிறவங்க, ஒரு வாரம் வெளியூர் போயிருக்காங்க. அவுங்க திரும்பி வர்ற வரைக்கும், வீட்டோட பாதுகாப்பை, எங்க பொறுப்புல ஏத்துக்கிட்டிருக்கோம். சும்மா,வெட்டியா ஊரை சுத்தி, வம்பு பேசிகிட்டுத் திரியுற நேரத்துல, இது மாதிரி ஏதாவது உருப்படியா செஞ்சா, "அட்லீஸ்ட்' நாம அப்ளிகேஷன் போடுற செலவுக்காவது ஆகுமே... அதுக்குத் தான்...' என்றான்.

ஆச்சரியமடைந்து, "இதுக்கு எவ்ளோடா சார்ஜ் பண்ணுவீங்க?' என்றோம்
"அது ஆளோட வசதியை பொறுத்தது. இது மிடில் கிளாஸ் பேமிலி. அதனால், இரண்டாயிரம் ரூபா சார்ஜ். இதே, ஹை கிளாஸ் வீடாக இருந்தால், ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை வாங்குவோம். மேலும், பாதுகாக்க வேண்டிய நாளுக்கு ஏத்த மாதிரி, சார்ஜ் பண்ணுவோம். உள்ளுர் பிள்ளைகளாதலால், நம்பிக்கையாக ஒப்படைக்கின்றனர்...' என்று சொன்னான்.

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'ன்னு சும்மாவா சொன்னாங்க... எங்கள் ஏரியாவில், நாங்களும் ஒரு காவல்படை துவங்க முடிவு செய்து விட்டோம்.

தாயன்பு!

தாய் இல்லாமல் நாம் இல்லை; தாய் இன்றி உலகில் எவரும் பிறப்பதில்லை. என்பது உலகறிந்த உண்மை. தாய் எனும் சொல் நாடு, மண் ஆறு, கடல், இயற்கை…… மேலும் பலவற்றிற்கு உவமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் தாய் மீது அன்பு செய்வது போல் நாட்டின் மேலும், மனிதர்கள், இயற்கை மற்றும் இதர உயிரினங்கள் மீதும் அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே. இவ்வலைப் பூ தாய் மடியின் இதத்தையும், தாய் நாட்டின் மடியை பங்கிடுவதில் சகோதர இனங்களுக்கிடையே வலுப்பெற்ற ஆயுதக் கலாச்சாரத்தையும், இதனால் தாய் நாட்டிற்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளையும், கடல் தாயின் கோர தாண்டவம், கலாச்சார சீரழிவுகள், பெண்ணுரிமை மற்றும்; சிறுவர் உரிமைகளையும் எடுத்துரைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

அ.. ன்.. பு.. எனும் இந்த மூன்று எழுத்துக்கள் இரத்தத்தில் கலந்து, நரம்புகளை மீட்டி, ஊணர்சிகளை மெருகூட்டி வார்தையாக வரும் பொழுது இந்த உலகையே கட்டி வைக்கும் வல்லமையைப் பெறுகிறது. இத்தகைய அன்பிற்காக ஏங்குவோர் எத்தனை பேர், கிடைக்காமல் இறந்தவர் எத்தனை பேர், கிடைத்ததை இழந்தவர் எத்தனை பேர் அனுபவித்தவர் எத்தனை பேர், ஆசை காட்டி மோசம் செய்வதை போல் அன்பை காட்டி துவம்சம் செய்பவர்கள் எத்தனை பேர் உண்மையான அன்புடன் ஒருவர் பழகினாலும், அதைனை உரசிப் பார்த்து உண்மை, பொய் அறிய வேண்டிய சூழல்.

நம் கண்ணாடி மனதில் கல் வீசி விளையாடும் சமூகத்திலிருந்து நம்மை பாதுகாப்பவள் தாய். சோற்றோடு அன்பையும் சேர்த்தே ஊட்டியவள். வைரத்தைப் போலவே தாயும் பன்முகம் கொண்டவள். கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும், குழந்தைக்காகவும், தன் தேவைகளை தியாகம் செய்தவள். இப்படித்தாங்க chemistry பாடத்தில் fail- ஆகி டீச்சரிடம் செமத்தியா, அழாம (ஏனெண்டா நான் படிச்சது coeducation School) அடி வாங்கிட்டு அப்படியே நேரா வீட்டுக்கு வந்து அப்பாட்ட நாலு குட்டு வாங்கிட்டு ஆள விட்டா போதும் சாமியோவ் எண்டு ஓடிப்போய் அம்மா மடியில தலைய வச்சு ஓன்னு அழுதா இருக்கிற சுகம் இருக்கே.

நான் அழ, அம்மா ஆறுதல் சொல்ல, அப்பாவுக்கு வீடே போர்க்களமாயிரும். திரும்பி வந்து என்னை தவணை முறையில் அடிச்சுப் போட்டு என்ட சத்தம் தாங்கமுடியாம புறமுதுகிடுவார் அப்பா. இப்படி அடிக்கடி அப்பாவை புறமுதுகிட வைத்துள்ளேன். அப்பொழுதெல்லாம் என்னை தலைகோதி, தன்னோடு அணைத்து, கண்ணீரைத் துடைத்து சிறந்த தளபதியாக இருந்தவர் தாய். அப்பாவின் அடிக்கு பயந்து எத்தனையோ குழந்தைகள் வீட்டை விட்டே ஓடுகிறார்கள். அவர்களை ஓடாமல் கட்டிப்போடும் அன்புச் சங்கிலி தாயிடமே உள்ளது.

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்..!



நடிகர் : விமல், பார்த்திபன்

நடிகை : மனிஷா, பூர்ணா

இயக்குனர் : கரு.பழனியப்பன்

இசை : வித்யாசாகர்

ஓளிப்பதிவு : அர்பிந்து சாரா



பழனி-பண்ணக்காடு வழித்தடத்தில் செல்லும் ஒரு அரசு பேருந்தை மையமாக வைத்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பஸ் பழனியில் இருந்து தினமும் மாலை பண்ணக்காடுக்கும், மறுநாள் காலை பண்ணக்காட்டில் இருந்து பழனிக்கும் செல்லும். இந்த பஸ்சின் டிரைவர் பார்த்திபன் சீனியர். கண்டக்டராக வரும் விமல் வேலைக்கு புதுசு.

இந்த பஸ் ஒரு தடவை மட்டும் செல்வதால், டிரைவர்-கண்டக்டர் இரவில் பண்ணக்காடு பகுதியில் தங்குவது வழக்கம். இதனால் அப்பகுதி மக்களுடன் நண்பர்களாக பழகி வருகின்றனர். இவர்களுக்கு பண்ணக்காட்டில் தங்குவதற்கு இடம், உணவு அனைத்தையும் பொதுமக்களே செய்து தருகிறார்கள்.

பார்த்திபன் சீனியர் டிரைவர் என்று சொல்லிக் கொண்டு எப்போதும் போதையில் வண்டி ஓட்டுகிறார். இந்த பஸ்சில் தான் பண்ணக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக பழனிக்கு செல்வார்கள். அதில் ஒரு பெண்ணாக மனிஷா வருகிறார். அவளை பார்த்தவுடன் மயங்குகிறார் விமல். அவருடைய காதலை அவளிடம் சொல்ல முயற்சிக்கிறார். மனிஷாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

அண்ணா சார் என்ற பள்ளி வாத்தியாராக வருகிறார் ராஜேஷ். இவர் தன் நண்பரின் மகளான பூர்ணாவை தன் மகள் போன்று வளத்து வருகிறார். ஆசிரியையான பூர்ணாவை தன் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார்.

அந்த ஊரில் வசிக்கும் ரமணா, தன் தாயுடன் ராஜேஷ் வீட்டிற்கு சென்று பூர்ணாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி கேட்கிறார். அதை மறுக்கும் ராஜேஷ், “என் மகனுக்கு பூர்ணாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். மகன் ஊர் திருவிழாவுக்கு வரும் பொழுது திருமண நடத்த போகிறேன்” என்று கூறுகிறார்.

இதற்கிடையே அந்த ஊரின் டேம் பொறுப்பாளரான விதார்த், அந்த வேலையை மட்டும் செய்யாமல் ஊரில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். ராஜேஷ் மகனுக்கு நண்பர் என்பதால், அவரது வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பழனியில் இருந்து பண்ணக்காடுக்கு பஸ் செல்லும் பொழுது வண்டி இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் நிற்கிறது. அதனை சரிசெய்யும் மெக்கானிக்கான சந்தான பாரதி, வண்டியை தன் உதவியாளரை சரி செய்ய சொல்லிவிட்டு பார்த்திபனுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.

இருவரும் நிலை தெரியாத அளவுக்கு மது அருந்திக்கொண்டிருக்கும் பொழுது வண்டி சரியாகி விடுகிறது. பார்த்திபனால் வண்டி ஓட்ட முடியாத சூழ்நிலையில் இருக்க, பஸ்சை விமல் ஓட்டிச் செல்கிறார். இருவரும் பாட்டுப் பாடிக்கொண்டி செல்கிறார்கள். அந்த நேரத்தில் ஒருவன் வண்டி முன்பு வந்து விழுந்து விடுகிறான். தலையில் பலத்த அடிபட்டு கிடக்கும் அவனை அந்த வழியில் வரும் ஒரு ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறுகிறார்கள்.

நான் தான் அவன்மீது ஏற்றி விட்டேன் என்று நினைக்கும் விமல், பயத்துடன் அடிப்பட்டவன் பையை எடுத்துக் கொண்டு பண்ணக்காடு செல்கிறார். அந்த பையை திறந்து பார்க்கும் விமல், அடிப்பட்டவன் ராஜேஷின் மகன் என்று தெரிந்து கொள்கிறான். அதை ஊர் மக்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பார்த்திபன் சொல்ல, சொல்ல முடியாமல் விமல் தவிக்கிறான்.

இறுதியில் அடிப்பட்டவன் நிலை என்ன? விமல் ஊர் மக்களிடம் உண்மையை சொன்னானா? உண்மையாக அவன் எப்படி அடிப்பட்டான் என்பதே மீதிக்கதை.

கருப்பு என்னும் பார்த்திபன், நக்கல், நையாண்டி என அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். சுப்பையாவாக வரும் விமல் நல்ல கண்டக்டராக நடித்திருக்கிறார். இவருக்கும் மனிஷாவிற்கும் இடையேயான காதல் காட்சிகளில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சாமி கதாபாத்திரத்தில் வரும் விதார்த்துக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது. அதை திறமையாக செய்திருக்கிறார்.

பாவாடை தாவணியில் வரும் மனிஷாவுக்கு கிராமத்து வேடம் பொருந்தவில்லை. டீச்சரான பூர்ணாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ரமணா, சிங்கம்புலி, மோனிகா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் சிலர் மட்டுமே மனதில் பதிகிறார்கள்.

யுகபாரதியின் பாடல் வரிகளில் வித்யாசாகரின் இசையில் ஒரு சில பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலைப்பகுதிகளை அழகாக நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இதுவரை நேரடி தமிழ் படங்களையே எடுத்து வந்த கரு.பழனியப்பன் முதல் முறையாக மலையாளத்தில் இருந்து இப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்து வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்.

பேருந்தில் நடக்கும் சம்பவங்களை அதிகப்படியாக வைத்திருந்தால் ரசிகர்கள் இன்னும் ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் 'ஜன்னல் ஓரம்'  மிதமான காற்று வருகிறது.

மருந்துக் கடையின் பொறுப்பான செயல்!

 
 நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். சமீபத்தில், உடல் நல குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, அவர் அளித்த மருந்து சீட்டுடன், அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றேன்.


மருந்து சீட்டை பெற்ற கடை ஊழியர், குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்து, ஒவ்வொரு மருந்து அட்டையின் பின்புறமும், ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினார். அதை கவனித்த எனக்கு ஆச்சரியம். அந்த ஸ்டிக்கரில், காலை, மதியம், இரவு என, தமிழில் எழுதி இருந்தது.


இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மருத்துவர்களின் கையெழுத்து புரியாத சிலர், காலையில் எடுக்க வேண்டிய மருந்தை இரவிலும், மதியம் எடுக்க வேண்டிய மருந்தை காலையிலும் உட்கொள்கின்றனர். வெறும் வாய் வார்த்தையால் நாங்கள் சொன்னால், அதை அவர்கள் மறந்து விடுவர். இதைத் தவிர்க்கவே, இந்த ஸ்டிக்கரை ஒட்டுகிறோம். என்னென்ன மாத்திரை எந்தந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என, இதில் குறிப்பிட்டு விட்டால், குழப்பம் இருக்காது...' என்றார்.


தெருவிற்கு தெரு மருந்து கடைகள் முளைத்து விட்ட இக்காலத்தில், வெறும் வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல், கடமை உணர்வோடு, மற்ற மருந்து கடைக்காரர்களும் இதை பின்பற்றலாமே!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top