.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 1 December 2013

மருந்துக் கடையின் பொறுப்பான செயல்!

 
 நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். சமீபத்தில், உடல் நல குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, அவர் அளித்த மருந்து சீட்டுடன், அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றேன்.


மருந்து சீட்டை பெற்ற கடை ஊழியர், குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்து, ஒவ்வொரு மருந்து அட்டையின் பின்புறமும், ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினார். அதை கவனித்த எனக்கு ஆச்சரியம். அந்த ஸ்டிக்கரில், காலை, மதியம், இரவு என, தமிழில் எழுதி இருந்தது.


இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மருத்துவர்களின் கையெழுத்து புரியாத சிலர், காலையில் எடுக்க வேண்டிய மருந்தை இரவிலும், மதியம் எடுக்க வேண்டிய மருந்தை காலையிலும் உட்கொள்கின்றனர். வெறும் வாய் வார்த்தையால் நாங்கள் சொன்னால், அதை அவர்கள் மறந்து விடுவர். இதைத் தவிர்க்கவே, இந்த ஸ்டிக்கரை ஒட்டுகிறோம். என்னென்ன மாத்திரை எந்தந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என, இதில் குறிப்பிட்டு விட்டால், குழப்பம் இருக்காது...' என்றார்.


தெருவிற்கு தெரு மருந்து கடைகள் முளைத்து விட்ட இக்காலத்தில், வெறும் வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல், கடமை உணர்வோடு, மற்ற மருந்து கடைக்காரர்களும் இதை பின்பற்றலாமே!

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்!



1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:


1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

சளிதொல்லையிலிருந்து விடுபட!


பாதுகாப்பு முறை:

சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும்.


வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.


சில தீர்வுகள் :

 * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.

 * எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

 * கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

 * கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

 * அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
 தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

 * அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.

 * ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.

 * ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

சைகோடிரியா எலாட்டாக்கு முத்தம் கொடுக்க வாரீகளா!

 

பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன.


இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.


பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷயம்.

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்!


இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.

கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.

வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.

இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.

முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.

உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.

தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.

கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.


வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?

எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?


இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?

நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.

காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.

எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.


மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?

தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.


எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.

பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.

சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.

‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.

‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top