"தேசிய கொடியில் காணப்படும் அசோக சின்னத்தின் கீழ், "வாய்மையே வெல்லும்' என்ற வார்த்தை பொறிக்கப்பட்டால் மட்டுமே, தேசிய சின்னம் முழுமை பெறும்' என, அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை பயன்படுத்தாமல், 61 ஆண்டுகளாக, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) சின்னம் பயன்பட்டு வந்ததை, தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவாதி சுட்டிக் காட்டியதால், விரைவில், திருத்தி வெளியிட, எல்லை பாதுகாப்பு படை ஒப்புக் கொண்டுள்ளது.
நாட்டின் தேசிய சின்னம், 1947ல், வடிவமைக்கப்பட்டது. அதே போல், 1952ல், எல்லை பாதுகாப்பு படையின் சின்னம் வடிவமைக்கப்பட்டது. மூன்று சிங்கங்கள் கொண்ட, அசோக சின்னத்தின் கீழ், "பி.எஸ்.எப்.,' என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கும். அதை சுற்றி இரண்டு சிறகுகளும், அதற்கு கீழே, "டூட்டி அன் டு டெத்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.அசோக சின்னத்தை பயன்படுத்தும் போது, சிங்கங்களுக்கு கீழே, "சத்ய மேவ ஜெயதே' அதாவது, "வாய்மையே வெல்லும்' என, எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் மட்டுமே, அச்சின்னம் முழுமை பெறும் என, அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், 61 ஆண்டுகளாக, "சத்ய மேவ ஜெயதே' என்ற வார்த்தை, எழுதப்படாமலேயே, பயன்படுத்தப்பட்டு வந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ் மருவத்தூரைச் சேர்ந்த காந்தியவாதி, கண்ணன் கோவிந்த ராஜு என்பவர், எல்லை பாதுகாப்பு படைக்கு, இத்தகவலை தெரிவித்து, சின்னத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் பற்றி, இரண்டு மாதங்களுக்கு முன் எழுதினார்.இதைத் தொடர்ந்து, சமீபத்தில், அவருக்கு பதில் எழுதியுள்ள, எல்லை பாதுகாப்பு படை நிர்வாகம், தொப்பி, அதிகாரிகளின் பெல்ட், கொடி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் சின்னத்தில், விரைவில் மாற்றம் செய்யும் என, பதில் அளித்துள்ளது.அது மட்டுமின்றி, எல்லை பாதுகாப்பு படையின், அனைத்து பிரிவுக்கும், மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து கடிதம் எழுதியுள்ளதோடு, விரைவில், மாற்றத்தை செய்து முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது