கணனிகள் இன்றைய கால கட்டத்தில் மனிதனின் மூன்றாவது கையாகவே மாறிவிட்டது எனலாம்.
இருப்பினும் நாம் அந்த கணனியின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில் அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படி நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.
சி.பி.யு (CPU)
உங்கள் கணனியை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? கணனியை சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கணனி சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும்.
உள்ளே மின்விசிறியிலும், வெளியே வெப்பம் வெளியேறும் துவாரங்களிலும் நிச்சயம் அதிகமாகத் தூசு தென்படும்.
இவற்றை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் வேகமாக காற்று அடிக்கும் கருவியைப் பயன்படுத்தி, சிபியு மின்விசிறி, மதர்போர்ட் மற்றும் கிராபிக்ஸ் போர்ட் ஆகியவற்றில் படிந்துள்ள தூசியை நீக்கவேண்டும். வேறு இடங்களில் படிந்துள்ள தூசியையும் நீக்கவும்.
கீ போர்ட் (Keyboard)
இதனைக் கழட்டி, தலைகீழாகக் கவிழ்த்து, சிறியதாகத் தட்டினால், நம்மை அறியாமல் கீகளுக்கிடையே உள்ள இடைவெளியில் சென்ற சிறிய தூசுகள் எல்லாம் வெளியேறும்.
இங்கும் காற்றடிக்கும் சிறிய கருவியின் மூலம் தூசியை வெளியேற்றவும். சிறிய பேப்பர் டவலில் தண்ணீர் நனைத்து கீகளின் மேலாகவும், பக்கவாட்டிலும் சுத்தம் செய்திடவும். குறிப்பாக நம் விரல்கள் கீகளின் எந்த இடத்தில் தொடுகிறதோ, அந்த இடங்களில் அழுக்கு சேர்ந்திருக்கும். இதனைக் கட்டாயம் நீக்க வேண்டும்.
மவுஸ் (Mouse)
இதே போல மவுஸ் சாதனத்தையும் சுத்தப்படுத்தவும். இறுதியாகக் கவனிக்க வேண்டியது மானிட்டர். மைக்ரோ பைபர் துணி கொண்டு இதனைச் சுத்தம் செய்திடலாம். இதனை நீர் அல்லது வினீகரில் நனைத்து திரையையும் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தம் செய்திட வேண்டும்.
டேட்டா பேக் அப் (Data Backup)
கணனி உள்ளே நாம் சேர்த்து வைத்த முக்கிய கோப்புகளை நம் பயன்பாட்டிற்கு எடுக்க இயலாமல் போய்விடும். வெள்ளம், தீ, பூகம்பம், திருட்டு மற்றும் பிற விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பது போல, உங்கள் கணனியின் ஹார்ட் டிஸ்க்கும் சுழலாமல் நின்று விடும்.
என்ன செய்தாலும் அதில் உள்ள கோப்புகள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே கோப்புகளை உருவாக்கி உடனேயே அதற்கு பேக் அப் எடுக்க வேண்டும்.
மால்வேர் பாதுகாப்பு (Malware Protection)
நான் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் கையாள்கிறேன். சந்தேகத்திற்கிடமான இமெயில்களைத் திறப்பதில்லை, தேவையற்ற தளங்களைப் பார்ப்பதில்லை, எனக்கு இதுவரை மால்வேர் புரோகிராம்களே வந்ததில்லை என்று நீங்கள் உறுதியாக இருந்தாலும், உங்கள் கணனி இந்த வகையில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் என்னதான் கவனமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு சிறிய செயல்பாடு, உங்கள் கணனிக்கு வைரஸைக் கொண்டுவரலாம். எனவே ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
இதற்கென இலவச புரோகிராம்கள் மட்டுமின்றி கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம்களும் கிடைக்கின்றன. இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து இயக்கி வந்தாலும், அவற்றை அவ்வப்போது இணைய இணைப்பு கொடுத்து அப்டேட் செய்திட வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.
சாப்ட்வேர் அப்டேட் (Software Update)
நீங்கள் எப்போதுமே சாப்ட்வேர் புரோகிராமினையும், அப்டேட் செய்திட வேண்டும். நீங்கள் என்ன செய்திட வேண்டும் என அந்த சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி, அப்டேட் தரும் நிறுவனம் கற்றுக் கொடுக்கும். எனக்குப் பழையதே போதும் என ஒருநாளும் இருக்க வேண்டாம்.