.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 December 2013

தமிழர்களின் வாழ்வியல் இலக்கணம்!




தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.


தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

வீரம்:

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.


காதல்:


தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.



மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
 நன்கலம் நன்மக்கட் பேறு





 என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.

நட்பு:

சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.




முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
 அகநக நட்பது நட்பு



 உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.


விருந்தோம்பல்:

‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
 நல்விருந்து வானத் தவர்க்கு



” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
 மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று



” என்று கூறுவதிலிருந்துவிருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.


இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.

2013ல் அதிகம் பேசப்பட்ட ஹீரோயின்கள்!




2013ல் புதுமுக நடிகைகள் அதிகம் கவர்ந்தனர். நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.


நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் நயனுக்கு அதே கிரேஸ் இருந்தது ஆச்சர்யம்.


ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது.


தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’ . இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் மூன்று படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.


காஜல் அகர்வாலை கடந்த வருடம் ரிலீசான ‘துப்பாக்கி’ படம் முன்னணி நடிகையாக்கியது. ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யுடன் மீண்டும் ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.


அனுஷ்கா நடித்து இந்த வருடம் ‘அலெக்ஸ் பாண்டியன்‘, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ படங்கள் வந்தன. இதில் ‘சிங்கம் 2’ அதிக வசூல் குவித்தது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’, பாஹுபலி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை.


ஹன்சிகாவுக்கு இந்த வருடம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’ படங்கள் கைகொடுத்தன. கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படம் டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆக உள்ளது. 'வாலு', 'அரண்மனை', 'வேட்டை மன்னன்', 'மான் கராத்தே', 'உயிரே உயிரே' என நிறைய படங்கள் ஹன்சிகாவின் கவைசம் உள்ளன.


'தலைவா'வில் விஜய் ஜோடியான அமலாபால், இப்போது ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் நடிக்கிறார்.


த்ரிஷாவுக்கு ‘சமர்’ படம் மட்டும் ரிலீஸ் ஆனது, ஜீவாவுடன் நடித்த 'என்றென்றும் புன்னகை' டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவியுடன் 'பூலோகம்' படத்திலும் நடித்து வருகிறார்.


'நேரம்' படத்தில் அறிமுகமான நஸ்ரியா, 'ராஜா ராணி' படத்திலும் கவனம் ஈர்த்தார். 'நையாண்டி' படம் சரியாகப் போகாவிட்டாலும் நஸ்ரியா முன்னணி நடிகையாக இருக்கிறார்.


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் ஊதா கலரு ரிப்பனால் பிரபலமாகிவிட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போது 'பென்சில்'. 'வீர தீர சூரன்', 'ஈட்டி' எனும் மூன்று படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.


தமன்னா, ஸ்ருதி, இலியானா, சமந்தா , அஞ்சலி போன்றோருக்கு தமிழில் இந்த வருடம் படங்கள் இல்லை.

அஜித்துடன் இணையும் சிம்பு!



கௌதம் மேனன் சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'சட்டென்று மாறுது வானிலை' என்று முதலில் டைட்டில் வைத்தார்கள்.


இப்போது அந்த டைட்டில் இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே டைட்டிலில் படம் இயக்கி முடித்து 'யு' சான்றிதழ் பெற்றுள்ளார்.


இதனால் வேறு டைட்டில் வைக்கலாம் என்று தீவிர யோசனையில் இருக்கிறார் இயக்குநர் கௌதம்.


இதற்கிடையில், பிப்ரவரியில் தொடங்க இருக்கும் புதிய படம் குறித்து அஜித்திடம் பேச கௌதம் சென்றிருக்கிறார்.


'சிம்புவும் இந்தப் படத்தில் நடிக்கட்டுமே' என்று அஜித்தே முன்வந்து கேட்டதோடு, உடனே சிம்புவுக்குப் போன் போட்டு பேசினாராம்.


சிம்பு, அஜித்துடன் நடிக்க உடனே ஓ.கே.சொல்லிவிட்டாராம். இப்போது சிம்புவுக்கான போர்ஷனை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்.


சிம்பு தல பேசிய உற்சாகத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் . ஆர்யா, விதார்த்தைத் தொடர்ந்து இப்போது சிம்புவும் அஜித் படத்தில் நடிக்கிறார்.

ரஜினி பிறந்தநாளில் ஹீரோவாகும் ஜூனியர் விஜயகாந்த்!



விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார்.


விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறார்.


பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தார். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.


இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார்.


சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விரும்பினார்கள்.


இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீஷுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.


நல்ல கதை கிடைத்திருக்கிறதாம். படத்துக்கு 'சகாப்தம்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் விஜயகாந்த் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இன்பம் எங்கே?


இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு "இனிக்கிறது".


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.


சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.


நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர் தான் காரணம் என்று கருதுகிறோம்.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றார் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குப் பிறர் காரணம் அல்லர். நாமே தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரதியார் "துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா" என்று எச்சரிக்கை செய்கிறார்.


பிரச்சினைகள் தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.


எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.


ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன், பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.


இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச்செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.


நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன. சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய்ப் பரிணமிக்கிறது. எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப் பட்ட வைரமாய் - பக்குவமாய் பதப்படுகிறான்.


உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.


இரண்டிலும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில் பொதுநல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம். எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top