.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 13 December 2013

மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து!




உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை.


சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.


இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப் பட்டியலில் சேர்கின்றன. ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம் கூட குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பயனற்ற கழிவாகிறது. இவ்வாறு சேரும் கழிவுகளை முறையாக அழிப்பதற்கென, சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளன.


ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள் பெரும்பாலான இடங்களில், முறையாக அகற்றப்படாமல் அப்படியே குப்பையில் கொட்டப்படுகின்றன. குப்பையில் சேரும் மருத்துவக்கழிவுகள் நோய் பரப்பும் கிருமிகளாக உருவெடுக்கின்றன. இதனால், ஒரு நோயாளியை குணமாக்கியதன் காரணமாக வெளியேற்றப்பட்ட மருத்துவக் கழிவுகள் பத்து நோயாளிகள் உருவாகக் காரணமாகின்றன.


இது குறித்து மருத்துவ கழிவுகள் அகற்றம் பற்றி மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மருத்துவமனைகளில் ஏற்படும் கழிவுகள் தரம் வாரியாக பிரிக்கப்படுகிறது. மனித உடற்கூறு கழிவுகள், நுண்ணுயிர் கழிவுகள், கூர்முனை கழிவுகள் (ஊசி) என 10 வகையான கழிவுகளை மருத்துவமனை ஊழியர்களே பிரித்து விடுவார்கள். இந்த கழிவுகள் மஞ்சள், சிகப்பு, கருப்பு மற்றும் புளூ அல்லது வெள்ளை கவரில் சேகரித்து வைக்கப்படும்.


பின்னர் தனியார் ஊழியர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று அனைத்து கழிவுகளையும் சேகரித்து பாதுகாப்பான இடங்களில் எரித்தும், புதைத்தும் அழித்து விடுவார்கள். மருத்துவ கழிவுகளை சேகரித்து எரிப்பதற்காக, செங்கல்பட்டு, காட்பாடி, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 12 இடங்களில் நிலையங்கள் உள்ளன.


தமிழகத்தில் தினமும் 26 டன் மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. சராசரியாக ஒரு படுக்கைக்கு 250 கிராம் மருத்துவ கழிவுகள் சேரும். அவற்றை 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும். இது ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்திய மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளில், பாதிக்கும் மேற்பட்டவை முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், அவை நகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.இந்தியாவில் மருத்துவமனை களிலிருந்து நாள்தோறும் பல லட்சம் கிலோ அளவுக்கு மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.”என்று சொன்னார்


மேலும் சில ஆண்டுகளுக்கு முன் புது தில்லியிலுள்ள குப்பைமேடு ஒன்றில் பழைய பொருள்களை சேகரித்த ஆறு பேருக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குப்பையிலிருந்த மருத்துவக் கதிரியக்கப் பொருளை கையில் எடுத்ததால் வந்த பாதிப்பு என்பது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கும் மேற்பட்ட மருத்துவக் கழிவுகள் இந்தியாவில் எங்கும் முறையாக அழிப்பதில்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அப்போது தெரிவித்தது.


குப்பைகளில் போடப்படும் ஊசி, சிரிஞ்ச் போன்வை,பள்ளிக் குழந்தைகளின் கண்களில் படும்போது ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அறியாமல் டாக்டர் விளையாட்டு என குப்பையில் போடப்பட்ட ஊசியை எடுத்து பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழலேரிக் கரையை ஒட்டி மருத்துவக் கழிவுகள் ஏராளமான அளவில் கொட்டப்பட்டு நீராதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால் அவற்றை முறையாகக் கையாளவும், அழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் பெரிய மருத்துவமனைகளில் வசதிகள் உள்ளன. ஆனால் சிறிய மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகள் குறைவாகவே உள்ளன. எனவே மருத்துவக்கழிவுகளை முழுமையாக அழிப்பதற்கான “ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.


“ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளில் “இன்சினரேட்டர்’, “மைக்ரோவேவ்ஸ்’ போன்ற எரிப்பான்கள் மூலம் உயர் வெப்பநிலையில் எரித்தல் போன்ற முறைகளைக் கையாண்டு மருத்துவக்கழிவுகள் அழிக்கப்படுகின்றன.


சிறிய மருத்துவமனைகளின் கழிவுகளை வாங்கி அழிக்க அரசும், தனியாரும் ட்ரீட்மெண்ட் பிளாண்ட்டுகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் அவ்வப்போது மருத்துவமனைகளுக்குச் சென்று, மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.


கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபடும் அமைச்சர்களும், அதிகாரிகளும் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்!



டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில்
 ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம்


 போன்ற சிறப்புகள் வாய்ந்தது ‘மணல் நகரம்’.இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவரும்,’ வைரஸ்’,’ கேரளோற்சவம் -2009′ ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவருமான ஒருதலைராகம் ஷங்கர். இவர் தமிழில் முதல்முறையாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ‘மணல் நகரம்’ .


சன் மியூசிக் புகழ் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். துபாயைச் சேர்ந்த வருணா ஷெட்டி புதுமுக நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ஜெய்ஸ், வினோத்குமார் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


”இதுவரை நிறைய படங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது.ஆனால் அங்கு ஒரு பாடலோ அல்லது ஒருசில காட்சிகளோ தான் படமாக்கி வந்திருப்பர். முதல் முறையாக இங்கிருந்து சென்ற படக்குழுவினர் ஐம்பது நாட்கள் துபாயில் தங்கி படமாக்கி வந்திருக்கும் படம் மணல் நகரம். துபாயின் சட்டதிட்டங்களுக்கு நடுவே ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு என்பது சாத்தியமான காரியமல்ல. அதே நேரம் மணல் நகரத்தின் கதைக்களம் துபாயில் நடப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தியாக வேண்டியது கட்டாயமாயிற்று என்றார்..” ஒருதலை ராகம் புகழ் ஷங்கர்.


”நீங்கள் தமிழில் நடித்து நாளாயிற்றே?” என்றால், ”மலையாளத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். சரியாக அமைந்தால் தமிழில் நடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மணல் நகரத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். துபாயில் வசிக்கும் எனது நண்பர் முரளிராமன் இலாயத்தின் கதைக்கு எனது சென்னை நண்பரும் படத்தின் தயாரிப்பாளருமான எம். ஐ. வசந்த் திரைக்கதை அமைத்துத் தந்தார். நான் இயக்கியுள்ளேன். ”


”வேலைக்காக, குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்லுபவர்கள் படும் பாடு மிகக்கொடியது. தவிர, கடுமையான சட்டதிட்டங்களுக்கு நடுவே அவர்கள் வாழும் வாழ்க்கை.. குடும்பத்தைப் பிரிந்து பாசத்தால் படும் அவதி பாதி, அங்கு வாழப்போராடும் அவர்களின் போராட்டம் மீதின்னு போகும்… திரைக்கதையில் அவர்களிடையே வரும் காதல், நட்பு இதையும் கலந்து சொல்லியிருக்கிறேன். ஐம்பது நாட்கள் துபாயில் படப்பிடிப்பு முடிந்தது.. இன்னும் பத்து நாட்கள் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மணல் நகரத்தை கமர்ஷியலாக, மிகப் பிரம்மாண்டமாக, மிகுந்த பொருட் செலவில் உருவாக்கியுள்ளோம்.


‘மணல் நகரம்’ – காதல் மற்றும் சில வலிகளையும் சுமந்து பேசும். அது நிறைய மனங்களுக்கு ஆறுதலையும் சொல்லும்,” என்றார் கவிதையாக!

நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்க டெல்லி ஹைகோர்ட் அனுமதி!




வரி ஏய்ப்பு செய்த சென்னை நோக்கியா தொழிற்சாலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தடை எதுவும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.


வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி வரியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களும் தங்கள் நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக இந்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இது குறித்து விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தனது உத்தரவில் வரி தொடர்பான விசாரணை தனியாக தொடர்ந்து நடைபெறுமென்றும் இடைக்கால முன்வைப்புத் தொகையாக ரூ.2,250 கோடியை அரசுக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? அப்ப இதை படிங்க..!




உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

அப்ப இதை படிங்க..!


கொசு ஒரு பிரச்சனையா?


இது 100% வேலை செய்யும்...!


உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!


ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும்.


ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!

பேஸ்புக்கில் புதிதாக “Unfollow” பட்டன்!





குறிப்பிட்ட நண்பர்களிடமிருந்து வரும் இடுகைகளையும், தகவல்களையும் தடை செய்வதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த “Hide All” என்ற பொத்தானுக்குப் பதிலாக இன்னும் வசதியாக “Unfollow” என்ற பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் வலைத்தளம்.


இந்த “Unfollow” பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது இடுகைகள் மற்றும் தகவல்களை தடை செய்யலாம்.


இதன் மூலம், எப்போதும் போல் அவர்களுடன் நட்பு வட்டத்தில் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்களின் இடுகைகள் உங்களது “News Feed” பக்கத்தில் வராத வண்ணம் தடுத்து வைக்கலாம். தங்களது ”News Feed” பக்கத்தில் தேவையில்லாத விஷயங்களை படிப்பதைத் தவிர்க்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த “Unfollow” என்ற பட்டன், பேஸ்புக் பக்கத்தில் மேற்புறத்தில், “Following”, “Like” ஆகிய பட்டன்களுக்கு அருகில் இருக்கும் என்றும், இதன் மூலம் குறிப்பிட்ட இடுகைகளை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top