உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.
மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.
பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம் :-அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற
தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.
மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.
ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.
ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.
அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்,மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.
உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.
மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.
சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.
மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.