.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 15 December 2013

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- பகுதி 2



இரண்டாம் பகுதி


கட்டுரையின் முதல் பகுதியில் முன்னுரை கொடுத்திருக்கிறேன். முதல் பகுதியையும் ஏனைய பழமொழிக் கட்டுரைகளையும் படிப்பது பயன் தரும்.


வாழுகிற பெண்ணும் வாழாத பெண்ணும்


மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி
மெலிந்தவளுக்கு மெத்தப் பலன், மேனி மினுக்கெட்டவளுக்கு மெத்தக் கசம்
மேலைக்குத் தாலி கட்டுகிறேன்,, கழுத்தே சுகமே இரு என்றார்போல
மேலைக்குத் வாழ்க்கைப்படுகிறேன்,, கழுத்தே சுகமே இரு
மேனி எல்லாம் சுட்டாலும் விபசாரம் செய்கிறவள் விடாள்
மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன்
வரப்பு ஏறித் தாண்ட மாட்டாள், அவள் பேர் தாண்டாய் (110)
வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்
வருகிற வரும்படி எல்லாம் பூசாரிக்கு, சந்தடியெல்லாம் கங்காளம்மைக்கு
வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்
வாய் மதத்தால் வழக்கு இழந்தாள்
வாலிபத்தில் இல்லாத மங்கையை வயது சென்றபின் என்ன செய்கிறது?
வாலிபத்தில் தேடாத தேவடியாள் வயது போனபின் தேடப்போகிறாளா?
வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
வாழாத பெண்ணைத் தாழ்வாய் உரைக்காதே
வாழாப் பெண் தாயோடெ
வாழுகிற பெண்ணை தாய் கெடுத்தது போல
வாழைப் பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள் (120)
வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்


கைம்பெண்சாதி, எருமையில் கறவை பழகினாற் போல
கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக்கையன் அறுத்தானாம்
கைம்பெண்டாட்டி பெற்ற கழிசடை
கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி
கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளையானாலும் செய்யுஞ் சடங்கு சீராய் செய்யவேண்டும்
எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக் கிழவியைக் கட்டிக் கொண்டார்கள்
எட்டும் இரண்டும் தெரியாத பேதை (நாத்தை)
ஒரு வீடடங்கலும் பிடாரி/ பஜாரி
ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போகிறது, பரியம்போட்ட பெண்ணைப் பார்த்து வளர்
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம் (130)
ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை
ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக்கோலம்
ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா?
ஆமுடையானைக் கொன்ற அறநீலி
ஆமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்
ஆமுடையான் அடித்ததது பெரிதல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
ஆமுடையான் செத்த பின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது
ஆமுடையான் செத்தபோதே அல்லலுற்ற கஞ்சி
ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவேன்?


சீதேவியும் மூதேவியும்



சீதை பிறக்க இலங்கை அழிய (140)
சீதேவியுடன் மூதேவி பிறந்தாற் போல
சீராளன் கல்யாணத்தில் முன்றுபேர் பெண்டுகள் மாரோடே மார் தள்ளுது
சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலெ பாரியைப் பறிகொடுத்தது போல
சீர்கேடனுக்குக் வாக்குப்பட்டு திரிச்சீலை துணிக்கு வாதைப் படாமல் இருந்தேன், சீராளனைப் பெற்ற பிறகு திரிச்சீலை துணிக்கு வருத்தமாச்சுது
சீலை இல்லை என்று சின்னாயி வீட்டுக்குப் போனாளாம், அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்
நாட்ட ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது
நாணம் இல்லாத சிறுக்கிக்கு நாலு திக்கும் வாசற்படி
நாணம் இல்லாத வாத்தி நாலு திக்குக்கும் கூத்தி
நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்
பூவுள்ள மங்கையாம் பொற்கொடியாம் , போன இடமெல்லாம் செருப்படியாம் (150)
பூ விற்றவளை பொன் விற்கப் பண்ணூவேன்


பெண்சாதி


பெண்சாதி இருந்தால் புது மாப்பிள்ளை
பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவியது போல
பெண்சாதி கால் விலங்கு, பிள்ளை சுள்ளாணி
பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு
பெண்சாதி சொந்தம், போகுவரத்துப் புறம்பே
பெண்சாதி பேச்சைக் கேட்டவன் பேய் போல அலைவான்
பெண்சாதி முகத்தைப் பார்க்காவிட்டாலும், பிள்ளை முகத்தைப் பார்க்க வேண்டும்
பெண்சாதியைக் குதிரை மேல் ஏற்றி, பெற்ற தாயின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலம்
பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு (160)
பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் விட்டது
பெண்டாட்டி குதிர் போல அகமுடையான் கதிர்போல
பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவாருண்டோ
பெண்டுகளுக்கு பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பில்லை
பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்திடும்
பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரையில்தான்
பெண்டுகள் சோற்றுக்குத் தண்டமில்லை
பெண்டுகள் வைத்தியம்
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு
பெண் அரம்பைக் கூத்து போய், பேய்க் கூத்து ஆச்சுதே (170)
பெண் ஆசை ஒரு பக்கம், மண் ஆசை ஒரு பக்கம்
பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது
பெண் ஆணையைத் தொடரும் பேரானையைப்போல
பெண்ணின் குணமும் அறிவேன், சம்பந்தி வாயும் அறிவேன்


தங்கமே தங்கம்

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
பெண்ணுக்கு ஒரு கும்பிடு வில்லுக்கு ஒரு கும்பிடு
பெண்ணின் குணம்தான் சீதனம்
பெண்ணின் பெண்தான் சீதனம்
பெண்ணுக்கு பொன்னிட்டுப் பார், சுவருக்கு மண்ணிட்டுப் பார்
பெண்ணுக்கு பொன்னாசை கொள்ளும் பேரணங்கு 180
பெண்ணுக்கு போட்டுப் பார், மண்ணுக்குப் பூசிப்பார்
பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
பெண்ணும் இல்லாமல் ஆணும் இல்லாமல் பெருமரம் போல் வளருகிறது
பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள், பிள்ளை பெறுவதற்குப் பிணைபடுவார்களா?
பெண்ணைக் கொண்டு பையன் போனான், பிள்ளை பெற்றுச் சிறுக்கி நாயானாள்
பெண்ணைத் திருத்தும் பொன் (190)
பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்ற தாய் வேண்டாமா?
பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு
பெண் என்று பிறந்தபோதே புருடன் பிறந்திருப்பான்
பெண்ணோடு ஆணோடு பிறக்காத பெரும்பாவி
பெண் படையும் பலமும் பெருக்கத் தவிக்கிறதோ?
பெண் புத்தி கேட்கிறவன் பேய்
பெண் மூப்பான வீடு பேரழிந்துபோம்
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி
பொன்னாலே மருமகளானாலும், மண்ணாலே ஒரு மாமியார் வேண்டும்
பொன்னையும் புடவையையும் நீக்கிடில் பெண் மலக்கூடு (200)
போக்கற்றாள் நீக்கற்றாள், பொழுது விடிந்து கந்தை அற்றாள்...............

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1





பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக் காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பல கலாசாரங்களிலும் பழங்காலத்தில் இப்படிதான் இருந்தது. வேற்று மொழிப் பழமொழிகள், பொன்மொழிகளைப் பயிலுவோருக்கு இது தெளிவாக விளங்கும்.


சில தமிழ்ப் பழமொழிகள் கடுமையான மொழியில் இருக்கும். வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருப்பதைத்தான் நான் மீண்டும் கொடுக்கிறேன். மிகவும் கடுமையான, பாலியல் தொடர்பான பழமொழிகளையும், படிப்பதற்கு நாராசமாக உள்ள பழமொழிகளையும் கூடுமான அளவுக்கு தவிர்த்துவிட்டேன்.


பெண் பல ரூபங்களில் இருப்பவள். தாயாகவும் மனைவியாகவும், மகளாகவும்,மருமகளாகவும், மாமியாரகவும், மாமியாகவும், அத்தை/சித்தியாகவும், மிக அபூர்வமாக வேசியாகவும் வருகிறாள். பெண்களைப் பற்றிய சுமார் 300 பழமொழிகளை மூன்று பகுதிகளாகத் தருகிறேன். இவைகளை ஆராய்ச்சிப் படிப்பாக எடுப்பவர்களுக்கு இது பயன் தரும். நேரம் கிடைக்கும்போது வேற்று மொழிப் பழமொழிகளுடன் ஒப்பிட்டும் காட்டுவேன்.


முதல் பகுதி


குடியில் பிறந்த பெண் வயிற்றெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும்
நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண்போகாது
தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்
மழை வருவதும், பிள்ளை பெறுவதும் மகாதேவனுக்கே தெரியாது
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் புத்தி பின் புத்தி
ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
பணம் படைத்த சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள்
ஆடத்தெரியாத பெண் தெருக்கோணல் என்றாளாம் (கூடம் போதாது என்றாளாம்) 10


அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்
அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்றானாம்
அரச மரத்தைச்சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்
ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்
ஒத்த கணவனும் ஒரு சிறு நெல்லும் இருந்தால் சித்திரம் போல் குடித்தனம் செய்வேன் என்றாளாம்
ஓடுகாலி வீடு மறந்தாளாம்
பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ என்பார்கள்
பெண் கொடுத்த மாமியோ கண் கொடுத்த சாமியோ !
ஒய்யாரக் கொண்டையாம் தலக்குள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்
தாயா ? பேயா ?
பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்
பேயானாலும் தாய் (20)


பெற்றவளுக்கு பிள்ளை பாரமா?
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை
தாய்க்குப் பின் தான் தாரம்
பொம்பளை (பெண்) சிரிச்சா போச்சு பருத்தி விரிச்சா போச்சு
குனிந்து சேவித்து நிமிர்ந்து வாழ்த்திக் கொண்டாளாம்
அத்தை பகையில்லை அம்மாள் உறவில்லை
குறத்தி பிள்ளை பெற்றாளாம் குறவன் மருந்து சாப்பிட்டானாம்
மகள் பிறக்கும் முன் பூட்டிக்கோ, மருமகள் வருவதற்கு முன் சாப்பிட்டுக்கோ
இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம்
கொடுக்காத மகராசி இருக்கவே இருக்கிறாள் கொடுக்கிற மூதேவி கொடுப்பதற்கு என்ன என்றாளாம்
மனம் காவலா மதி காவலா ?(பெண்ணுக்கு)
மருமகளுக்கு தீவளிக்கு தீவளி எண்ணை தேய்ப்பேன், மகளுக்கு வெள்ளியோடு வெள்ளிதான் தேய்ப்பேன் என்றாளாம்
ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும் வேண்டும் என்பார்கள்


மகளே உன் சமத்து


மகளுக்கு குடல் பாக்கியம் தவிர மற்ற பாக்கியம் எல்லாம் இருக்கின்றன
மகளுக்கு புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்
மகளே வல்லாண்மை
மகள் செத்தாள் தாய் திக்கற்றாள்
மகள் செத்தால் பிணம், மகன் செத்தால் சவம்
மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் கொட்டம் அடங்கினால் போதும்
மகாரசன் பெண்சாதி மர்மக்காரி,, யாருடன் சொன்னாலும் திறமைக்காரி
மகாலெட்சுமி பரதேசம் போனாற்போல
மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி
மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்
மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள், கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
மங்கை நல்லாள் பெண் பெருமாள், வாழ்ந்ததெல்லாம் எத்தனை நாள், திங்கள் ஒருபொழுது செவ்வாய் பகலறுதி
மச்சத்தின் குஞ்சுவுக்கு இப்படி என்றால் மாதாவுக்கு எப்படியோ?
மஞ்சள் குளித்து மணை மேலே இருக்கும்போது மட்டேன் என்றீரே, பிள்ளை பெற்று நொந்திருக்கச்சே வேண்ட வந்தீரே
மடிப் பிச்சை மாங்கலியப் பிச்சை
போனதினம் போகப் புதனன்றைக்கு வந்தாள்
அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் (50)
அட்டிகைக்கு ஆசைப்பட்டு எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம்
அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அயல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டது போல
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர் வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?
உதறுகாலி முண்டை உதறிப் போட்டாள்
உதறுகாலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள்
ஏண்டி பெண்ணே, இளைத்தாய் குதிர் போல
ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்
ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்
ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்கு முன் கட்டாச்சே
ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன், இல்லாவிடால் பரதேசம் போவேன்
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்
மயிற்கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவத்தை
மரியாள் குடித்தனம் சரியாய் போச்சு


மருமகள்-மாமியார் மோதல்


மருமகளுக்கு மாமியார் பிசாசு; மாமியாருக்கு மருமகள் பிசாசு
மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்
மலைபோல பிராமணன் போகிறான், பின்குடுமிக்கு அழுதாளாம்
மலை விழுங்கின மாணிக்கத்தாளுக்குக் கதவு சுண்டரங்கி
மறு மங்கையர்க்கும், மறு மன்னவர்க்கும், மார்பும் முதுகும் கொடாமலிரு
மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும்
மாதா செய்தது மக்களுக்கு (மக்களைக் காக்கும்) 70
மாதா மனம் எரிய வாழான் ஒரு நாளும்
மாதவுக்குச் சுகம் இருந்தால் கர்ப்பத்துக்கும் சுகம்
மாமி மெச்சிய மருமகள் இல்லை
மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது
மாமியாருக்கு கண் மண்டை பிதுங்கிப் போகிறது
மாமியாருக்கு சுவாமியார் இவள்
மாமியாருக்கும் மாமியார் வேண்டும்
மாமியாரும் ஒரு வீட்டு நாட்டுப் பெண்

மாமியாரும் சாகாளோ, மனக்கவலை தீராதோ
மாமியாரைக் கண்டு மருமகன் நாணுவதைப் போல
மாமியாரோடு போகாத மாபாதகன்
மாமியார் இல்லாத மருமகள் உத்தமி, மருமகள் இல்லாத மாமியார் குணவதி
மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகள் கைத்தவிடு தேவலை
மாமியார் செத்த ஆறாம் நாள் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
மாமியார் செத்து மருமகள் அழுகிறது போல
மாமியார் செய்த காரியங்களுக்கு நிந்தை கிடையாது
மாமியார் தலையில கையும் வேலிப் புறத்துல கண்ணும் (90)
மாமியார் தலையில கையும் மாப்பிள்ளை மேல் சிந்தையும்
மாமியார் நன்மையும் வேம்பு இனிப்பும் இல்லை
மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியார் இல்லை
மாமியார் வீடு மகா சவுக்கியம்
மாம்பழத்தில் இருக்கும் வண்டே ! மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை


மதனி/ மைத்துனி


மாலை இட்ட பெண்சாதி காலனை (எமனை)ப் போல வந்தாள்
மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது
மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பொண்ணாது (100)
மேய்த்தால் மதனியை மேய்ப்பேன்
மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன், இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.....

குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

 
 
1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.


*
2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.


*
3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.


*
4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.



பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.


*
5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.


*
6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.


*
7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.


*
8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.



*
9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

காய்கறி பழங்களில் உள்ள பார்கோடு!




இனி காய்கறி பழங்களில் உள்ள பார்கோடை வைத்து அது என்ன மாதிரி? எனபதை கண்டறிந்து வாங்க முடியும் அதனால் கடைக்காரரின் பேச்சை நம்பாமல் நீங்களே ஸ்பெஸலிஸ்ட் ஆக முடியும்…. இதோ அந்த பார்கோடின் விவரம்:


நான்கு எழுத்துக்கள் 3 அல்லது 4 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பழங்கள் காய்கறிகள் – பூச்சிமருந்து தெளீத்து வளர்க்கபட்டது…….உதாரணத்திற்க்கு – 3011/4011


8 என்ற எண்ணுடன் ஆரம்பிக்கும் சில லேபிள்கள் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அதை ஆர்கனிக் என கூறி அதிக விலையில் விற்பார்கள் ஆனால் உண்மையில் அது மரபணு மாற்றிய காய் மற்றும் பழங்கள்…….உதாரணத்திற்க்கு – 84011


9 என்ற எண்ணுடன் ஆரம்பித்து அதில் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அது தான் ஆர்கனிக் முறையில் பயிரடபட்ட காய் பழங்கள் ஆகும்……..உதாரணத்திற்க்கு – 94011


அனேக வாழை / ஆப்பிள் / கிவி / மாதுளை மற்றும் சில பழங்களில் இதை பார்த்து வாங்கவும்,3/ 4011 எண்ணுடைய பழங்களில் மெழுகும் இருக்கும் கவனம் தேவை


இப்படி ஒட்டிய ஸ்டிக்கரின் கோந்தும் கூட சாப்பிடும் ரகம்தான் அதனால் பாதகமில்லை ஆனால் ஸ்டிக்கரை அவாய்ட் செய்ய வேண்டும் குழந்தைகள் அதை கவனிக்காமல் சாப்பிட்டால் ’பின்’ விளைவுகள் உண்டு – அதே மாதிரி வாங்கும் போது ஸ்டிக்கரை எடுத்து பாருங்கள் நிறைய இடத்தில் ஸ்டிக்கரை எடுத்தால் நகம் கீறின மாதிரி தெரியும், அப்படி என்றால் -இது கடைக்காரன் ஸ்டிக்கரை மாற்றியிருக்கிறான் என்று பொருள்!

கஷ்டத்தை தூக்கி போடு - குட்டிக்கதைகள்!



ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன்.


அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.


இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது.பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்து விட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது.மீண்டும் அந்த இறகை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது.


நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன்.ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது, ஆனால் ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம்.


அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது.அந்த எறும்பின் வீட்டு நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது.அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வளவோ முயற்ச்சி செய்து பார்த்தது ஆனால் எறும்பால் முடியவில்லை.ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டது.


எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதை தூக்கி போட்டுவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டது.


நம்ம வாழ்க்கையும் இப்படித்தான்.பணம் சம்பாதிக்க கஷ்டப்படுறோம்,வேலை செய்ய கஷ்டப்படுறோம்,குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படுறோம்.அந்த இறகு மாதிரி தான் நம்ம கஷ்டமும்.கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டே போகணும்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top