.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 17 December 2013

இதுதான் உண்மையான நட்பு..!




கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.

நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.

நான் போனது தான் சார் சரி என்றான்.என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.

நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

இதுதான் உண்மையான நட்பு.

வித்தியாசமான பிறந்தநாள் விழா!




எங்கள் பேத்தியின் பிறந்தநாள் விழாவை, வித்தியாசமாக கொண்டாட விரும்பினோம். வழக்கமாக, அனாதை ஆசிரமங்களுக்கு உணவு அளிப்போம். இம்முறை, அவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணி, சென்னை அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தை அணுகினோம். அவர்களும் அனுப்ப சம்மதித்தனர். இல்லத்தில் இருப்போர், 51 பேர் அதில்: 40 பேர் வருவர் என்று கூறினர். தனியார் பேருந்தை ஏற்பாடு செய்து, பேத்தியின் பிறந்த நாளன்று, அவர்கள் இல்லத்தை அடைந்து, பிறந்த நாள் கேக் வெட்டி, எல்லாருக்கும் வழங்கி, சுற்றுலா கிளம்பினோம்.

சுற்றுலா வராமல், இல்லத்தில் இருந்தோருக்கு, வெளியில் இருந்து அவர்கள் விரும்பியதை சாப்பிட, ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். மொத்தத்தில், அவர்கள் இல்ல கிச்சனுக்கு, அன்று முழுவதும் விடுமுறை.

காலை உணவு, விரும்பியதை விரும்பியவாறு சாப்பிட வைத்து, சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றோம். பிறகு முட்டுக்காடு போட்டிங். விருப்பபட்டவர்கள், 16 பேர் மட்டும் போட்டிங் சென்றனர். பின், மகாபலிபுரத்தில் மதிய சாப்பாடு; சைவம், அசைவம் என, விரும்பியதை சாப்பிட வைத்தோம். பின், 6:00 மணிக்கு கடற்கரை, 7:00 மணிக்கு திருவிடந்தை நித்ய பெருமாள் கோவில் தரிசனம்.

இரவு டின்னரை முடித்து, இல்லம் வந்து, நினைவு பரிசாக அனைவருக்கும் கோ.ஆப்டெக்ஸ் பெட்ஷீட்டை வழங்கினோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதை விட, நாங்கள் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது. செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும், வசதி படைத்தோர், ஆதரவு அற்ற முதியோர்களை, அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அசத்தலாமே!

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?



1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!



முதன் முதலாகத் தேர்தலைச் சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிராத்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, அபிரஹாம் லிங்கன் மட்டும்  பேசாமல் நின்றார். “அபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.



1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.



சோர்ந்து போயிருந்த லிங்களை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!



இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.



இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.



அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியினரால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.



மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.



“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது அபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

நம்பிக்கை...?



உங்களுக்கு  நான் கூற விரும்புவது பல முறை நாம்  எந்த  விஷயதிட்காகவது தாகம் அடைகிறோம் ஏங்குகிறோம். ஆனால் நாம் நம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பதில்லை.தாகமும் ஏக்கமும் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் பொது நிராசை அடைகின்றது.நிராசையுடன் ஒருவனது முதல் அடி எடுத்து வைக்கும் போது நிராசையுடனே கடைசி அடியும் நிறைவு பெறும். கடைசி அடி வெற்றியிலும் அர்த்தமுள்ளதாகவும் அமைய வேண்டுமெனில் முதல் அடி மிகுந்த நம்பிக்கையுடன் எழ வேண்டும்.

வாழ்க்கை முழுவதற்குமே நம்பிக்கையுடன் கூடிய திருஷ்டிக் கோணம் தேவை என்று உங்களுக்கு வலியுறுத்துகின்றேன். உங்கள் சித்தம் நம்பிக்கையால் நிறைந்து ஒரு வேலையைச் செய்கிறதா அல்லது நிராசையுடனா என்பதைச் சார்ந்தே அனைத்தும் இருக்கின்றன.நம்பிக்கையை இழந்து விட்டால், உங்கள் கைகளினாலேயே நீங்கள் அமர்ந்து இருக்கும் கிளையை வெட்டுகிறீர்கள்.

சாதனை விசயத்தில் நம்பிக்கை நிறைந்து இருப்பது மிகவும் முக்கியம். நம்பிக்கையினால் நிறைந்து இருப்பது என்பதன் பொருள், உலகில் எந்த மனிதனாலாவது   சத்திய நிலையை அடைந்து இருந்தாலோ அல்லது எப்பொழுதாவது ஒரு மனிதன் எல்லையற்ற ஆனந்தத்தையும் அமைதியையும்  அடைந்து இருந்தான் என்றால் நாம் அடைய முடியாததற்கு எந்த காரணமும் இல்லை என்றே நாம்  எண்ண வேண்டும்.

இருள் சூழ்ந்த இலட்சணக்கான மனிதர்களை பார்க்காதீர்கள். எந்த வித நம்பிக்கையும் எந்த  ஒளிக்கிரகணமோ  இல்லாத பிரகாசம் அளிக்காத கோடிக்கணக்கான மனிதர்களை பார்க்காதீர்கள் .
சத்யப்ப்ராப்தி அடைந்த சில மனிதர்களைச் சரித்திரத்தில் நோக்குங்கள். மலர்ச்சி அடைந்து பரமாத்மா வரை சென்ற சொற்ப மனிதர்களை நோக்குங்கள். அந்த விதைகளுக்கு சாத்தியமானது ஒவ்வொரு விதைக்கும் சாத்தியமே. ஒரு மனிதனுக்கு சாத்தியமானது மற்ற மனிதனுக்கும் சாத்தியமே.
விதை உருவில் உங்களிடம் உள்ள சக்தி புத்தர் மகாவீரர் ஜேசு இவர்களுடைய சக்தியின் அளவேதான் என்று உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

இறைவனின் உலகில் குறைந்த சாத்தியக் கூறு சிலருக்கு அதிக வல்லமை சிலருக்கு என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் இயற்கை நடப்புக்கள் அனைவருக்கும் சமமானதாக இல்லை.ஏனெனில் நம்மில்  அனேகமாக அனைவரும் தமது சாத்தியங்களை இயற்கை நடப்பாகப் பரிணமிக்கும் பிரயாசையை ஒரு பொழுதும் செய்வதில்லை.

வாழ் நாள் முழுவதும் நிராசையில் சென்று பார்த்தாயிற்று  இப்பொழுது நம்பிக்கையில் சென்று பாருங்கள். நீங்கள் முழு நம்பிக்கை வைக்கும் போது உங்களது ஒவ்வொரு மூச்சும் நம்பிக்கையினால் நிறைகிறது. உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை ஒளிர்கிறது. உங்களது தனித்தன்மை முழுவதும் நம்பிக்கையுடன் நிறைந்து விடும்பொழுது நீங்கள் ஒன்றைச் செய்ய முடியும் என்ற துவக்கம் ஆரம்பம் ஆகி விடுகின்றது.

இன்று இரவே உறங்கப் போகும் போது மிகுந்த நம்பிக்கையுடன் உறங்குங்கள். நாளைக் காலையில் எதுவும் நேரும், நேர முடியும், எதையாவது செய்து விட முடியும் என்ற பூரண நம்பிக்கையுடன் உறங்குங்கள்.

ஓஷோவின் படிப்படியாக தியானம் என்ற நூலில் இருந்து.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top