குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது நமக்கு வேண்டுமானால் பிறரிடம் பெருமை அடித்துக்கொள்ளப் பயன் படலாம் ஆனால் குழந்தைகளுக்கு அது தேவை இல்லை.அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ரிமோட் கண்ட்ரோல் காரை விட ஒரு சிறிய பந்து அதைப் பொறுத்தவரை மதிப்பு மிக்கது.
கைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண் விரித்து இதைப் பார்த்து ரசிக்கும் அழகே அழகு. அல்லது இருக்கவே இருக்கிறது கிலுகிலுப்பைகள். குழந்தையின் உறவினர் இதைக் கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஒலியெழுப்ப, குழந்தை சத்தம் வரும் திசையில் எல்லாம் தலையைத் திருப்புவது தனி அழகுதான்.
சுமார் நான்கு மாதமாகும்போது குழந்தையால் தன் கையில் சிறு பொருள்களைப் பிடித்துக்கொள்ள முடிகிறது. அதற்காகப் பாசம்பொங்க பலவித பொம்மைகளை வீட்டில் வாங்கிக் குவிக்க வேண்டாம். ஏனென்றால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டு உணரும் சக்தி குழந்தைக்கு முழுவதுமாக ஏற்படுவதில்லை. எனவே மிருதுவான பந்து போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.
ஆறு மாதத்தைத் தாண்டிவிட்டால் கையில் கிடைக்கும் பொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் வேண்டாத பழக்கம் வந்து தொலைக்கிறது. எனவே கூர்மையான பொம்மையோ, சாயம் போகும் பொம்மையோ கொடுக்க வேண்டாம். அதன் கைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஒரு கூடையில் நிறையப் பொருள்களை (அவை பாதுகாப்பானவையாகவும், எடை குறைந்தவையாகவும் இருக்கட்டும்) நிரப்பிக் குழந்தையிடம் கொடுத்துவிடுங்கள். அதுபாட்டுக்கு அவற்றைக் கீழே கொட்டும். பின் அவற்றைக் கூடையில் எடுத்துப் போடும். அப்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் உற்சாகம் சுற்றியிருப்பவர்களிடம் வேகமாகப் பரவும்.
பந்தைக் கீழே தட்டி விளையாடுவது என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? கைகளையும் கண்களையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான பயிற்சி இது.
ஒரு வயதாகும்போது பொம்மைக்கார்கள் அளிப்பதில் தவறில்லை. டெடி பியர் போன்ற பொம்மைகளை இன்னும் வளர்ந்தபிறகு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுபோன்ற புசுபுசு பொம்மைகளில் அழுக்கு சேர சான்ஸ் அதிகம். அந்த அழுக்கு குழந்தையின் உடலுக்குள் சென்று ‘‘வீசிங்’’ எனப்படும் இழுப்பில் கொண்டு சென்றுவிட்டால்? ஐயோ வேண்டாமே.
பொம்மைத் துப்பாக்கியால் சுடுவது, பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் ஆகியவை இயந்திரத்தனமானவை. அதாவது அவற்றினால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாவதில்லை. அதேசமயம் நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகளும், கற்பனை சக்தியைத் தூண்டும் பொம்மைகளும் மிகவும் தேவை.
வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் ஒருபக்கம் இருக்கட்டும். குழந்தையோடு உட்கார்ந்து கொண்டு விளையாடுங்கள். இரு கைகளையும் விரித்து அதற்குள் குழந்தையைக் குத்தவையுங்கள். பிடித்துவிட்டால் அது அவுட். பிடிக்காவிட்டால் நீங்கள் அவுட். அடிக்கடி நீங்களே அவுட்டாகி குழந்தைக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள். குழந்தையின் உள்ளங்கையில் தோசை வார்ப்பது போன்ற விளையாட்டெல்லாம்கூட உணர்வுபூர்வமான பாலத்தை ஏற்படுத்தும்.