.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 18 December 2013

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" - பழமொழி விளக்கம்!




"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"


நேர் விளக்கம்

நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

அறிந்த விளக்கம் :

உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.

அறியாத விளக்கம் :

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

இதன் விளக்கம்,
நாயகன் = கடவுள்
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும் போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.

திருமூலர் சொன்னதைப் பாருங்கள்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
---------------
தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக நேர்த்தியாக யானை உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப் பார்க்கிறார்கள்

ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?' என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.
யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை. மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை. 

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை....




பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை


வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்
வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்
வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்
வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.
வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

- பகவான் கிருஷ்ணர்

ஒரு அழகான நாளில்... ?




 கடை தெரு ஒன்றில் கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அவர் அருகில் ஒரு பலகையில்,

"எனக்கு கண் தெரியாது, உதவி செய்யுங்கள் " என்று எழுதி வைத்திருந்தார். இதை பார்த்து அவ்வழியில் செல்வோர் அவருக்கு உதவி செய்தனர்.

அவ்வழியில் சென்ற ஒரு நபர் அந்த பலகையில் இருந்த வாசகத்தை அழித்து விட்டு , வேறொரு வாக்கியத்தை அதில் எழுதி விட்டு சென்று விட்டார்.

அடுத்த‌ நாள் பிச்சைக்காரருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர்.

பிச்சைக்காரருக்கு மிக்க மகிழ்ச்சி. எனவே அதில் என்ன வாக்கியம் இருக்கிறது என தெரிந்து கொள்ள அவ்வழி சென்ற ஒருவரிடம் ,

"இந்த பலகையில் இருக்கும் வாக்கியத்தை எனக்கு வாசித்து காட்ட முடியுமா?" என கேட்டார்.

அந்த நபர் வாசித்தார்,

"இந்த நாள் மிகவும் அழகான நாள், ஆனால் என்னால் பார்க்க முடிய வில்லை!!!"

நம்முடைய கருத்தை வெளிபடுத்தும் விதம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

புதுமை படைத்தல்?


                                                                                                                                

புதுமை என்றாலே புது விஷயங்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு! புதுமை என்றால் முதலில் ஓர் அவா, தாகம். அடுத்தது மனிதர்கள். மூன்றாவது புதிய சிந்தனை. உலகத்தின் மிகச் சிறந்த புதிய சிந்தனைகள் தோற்றுப் போயிருக்கின்றன. ஏனென்றால் மனிதர்கள் அவற்றை முழுமனதாக ஏற்கவில்லை; அவர்கள் மனதில் ஆவல் பொங்கவில்லை.


புதுமைகள் புரட்சிகளாக மாறுவதற்கு, நம்மை முற்றிலும் புதிய தளத்துக்கு அழைத்துச் செல்வதற்கு, பேரவா கொண்ட மனிதர்கள் அவசியம் தேவை. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதிய சிந்தனையை வைத்துக் கொண்டு மக்கின்டாஷ் கணிப்பொறியை உருவாக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டு, ஒரு ‘வெறித்தனமான, மகத்தான கணிப்பொறியை’ உருவாக்கச் சொன்னார். கணிப்பொறி உலகத்தையே கவிழ்க்கப் போகிற ஒரு கணிப்பொறியை உருவாக்குவது அவர் நோக்கம்.


டேவிட் ஆகில்வி, வரலாறு படைத்த விளம்பரங்களைத் தயாரித்தவர்.  அவரும் புதிய சிந்தனையை பிடித்துக் கொண்டு வந்து யார் கையிலும் கொடுக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டார். ‘அழிவில்லாத சிரஞ்சீவியான படைப்புகள் எவற்றையாவது உருவாக்குங்கள்’ என்று மட்டுமே சொன்னார்.


புதுமை படைப்பதற்கான வழிகள்:


·         மனிதர்களை ஊக்கப்டுத்துவது, சக்தியை வெளியே கொண்டுவருவது, அதிகாரம் கொடுப்பது என்றெல்லாம் பேசுகிறோம். இதற்கு நிறைய நேரமும் சக்தியும் செலவிடுகிறோம். ஆனால் ‘ஊக்கம் கொடுப்பது’ என்பதை வெளியிலிருந்து செய்ய முடியாது. மனிதர்களுக்குள் ஏற்கனவே உறைந்து கிடக்கும் ஆர்வத்தில் நெருப்பு பற்ற வைப்பதே ஒரே வழி.

·         அதிகார அமைப்புகள், ஒரு நிறுவனம் நிலைபெற உதவும். ஆனால் அதே அமைப்புகள் நாம் போகும் பாதையையே கூடக்கட்டுப்டுத்தலாம். இந்த அமைப்புகளை மாற்றுவது என்றால் நிறுவனம் ஏன் அந்தத் தொழில்துறையே – இயங்கும் விதத்தை மாற்றவேண்டியிருக்கும்.

·         மனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து கனவு காணும்போது தொழில்துறைகளே மாற்றம் அடைகின்றன. நீங்கள் உங்கள் அணியுடன் சேர்ந்து கனவு காண்கிறீர்களா, அல்லது உங்கள் தனிப்பட்ட கனவுகளை கீழே இருப்பவர்களிடம் தெரிவித்து அவற்றை நிறைவேற்றச் சொல்கிறீர்களா?


புதுமையாளர்கள் கனவுக் கூட்டங்களை நடத்தி, அணியில் உள்ளவர்களையும் பயணத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். செய்யமுடியாத சாதனைகளைச் செய்யத் தூண்டுதல் தருகிறார்கள்.

 புதுமையாளர்கள் புதுமைகளைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே புதுமையாக்குகிறார்கள்.

வெற்றி ....?



“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.

இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரைமணி நேரம் மாறி  மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.

அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top