90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.
தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.
இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,
நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.
அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.
இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.
இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.
தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.
கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.
அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.
இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.
இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.
உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.
எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!