உலகம் முழுதும் சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரே ஸ்பெஷல் தினம் நியூ இயர். எந்த ஒரு பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு புத்தாண்டுக்கு உண்டு. ஏதோ... புதிய வாழ்க்கை தொடங்குவது போல ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத குதூகலம் பிறக்கும்.
வருடத்தின் முதல் நாள் சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுதும் சந்தோஷமாக இருப்போம் என்ற சென்டிமெண்ட் தான் இதற்கு காரணம். அந்த மகிழ்ச்சிக்கு இதோ... இன்னும் மூன்றே நாள் தான் 2013 முடிந்து 2014 புத்தாண்டு பிறப்பதற்கு. இந்த புத்தாண்டில் இன்னுமொரு சிறப்பு 67 ஆண்டுகள் கழித்து, 1947க்குப் பிறகு 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும் கிழமைகளையும் கொண்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு பூஜை, சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை, மசூதிகளில் சிறப்பு தொழுகை என அனைத்து ஏற்பாடுகளும் களைகட்டி வருகிறது. சென்னையை பொறுத்த வரையில், புத்தாண்டு என்றாலே யூத்களுக்கு தனி குஷிதான்.
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு மெரினா, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் பீச்களிலும், கடற்கரை சாலைகளிலும் கூட்டம் அலைமோதும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வாண வேடிக்கைகள் வெடித்தல், பலூன்களை பறக்கவிடுதல், ஓட்டல்களில் கேக்வெட்டுதல் என புத்தாண்டு களைகட்டும். முகம் தெரியாத நபர்களையும் நண்பர்களாக பாவித்து கேக் கொடுத்து ‘ஹேப்பி நியூ இயர்‘ என கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். புத்தாண்டை பெரியவர்கள் கொண்டாடினால் போதுமா சிறுவர் சிறுமியருக்கான நியூஇயர் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. டின்னருடன் பாட்டு, டான்ஸ் மேஜிக் ஷோ என குழந்தைகளுக்கான தனிக்கொண்டாட்டமாக இப்போது துவங்கியிருக்கிறது.
விபத்தை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுசென்னையின் ஒட்டுமொத்த கூட்டமும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் நள்ளிரவிலும், புத்தாண்டு அன்றும் பீச், ஈசிஆர் மற்றும் முக்கிய சாலைகளிலும் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தாண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் கொண்டாட வேண்டுமென்பதில் போலீசார் அதிக அக்கறை எடுத்துள்ளனர். அதனால் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, யாரும் கடலில் குளிக்காதவாறு கண்காணிக்கப்படும்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், சென்ற ஆண்டைப்போல் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையின் பல்வேறு இடங்கலில் சுமார் 20 ஆயிரம் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மெரினாவில் மட்டும் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா கடற்கரை பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
மக்கள் கூம்பு வடிவ ரேடியோ பயன்படுத்தக்கூடாது என்றும், நீச்சல் குளம் அருகில் மது விருந்து நடத்தக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எச்சரித்துள்ளோம். விதிமுறைகளை மீறும் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலை விபத்துகளும் தவிர்க்க முடியாதவை. போதையில் வாகனம் ஓட்டுவதாலும், அதிவேகமாக செல்வதாலும் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. இம்முறை அதற்காக நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க, போதையில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நகர் முழுதும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்படும்.
புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட பீச்சுக்கோ, ஈசிஆருக்கோ, பொழுதுபோக்கு தளங்களுக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும், ஜாலியாக கொண்டாடுங்கள். ஆனால் அதே சமயம் போதையில் செல்வதோ, ரேஷ் டிரைவிங்கோ வேண்டாம். விதியை மீறினால் புத்தாண்டு தினம் மகிழ்ச்சிக்கு பதிலாக உங்களை சங்கடத்தில் கொண்டு சேர்த்து விடும். கவனமா இருங்க! புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் பிறருக்கு இடையூறு செய்யாதபடியும் கொண்டாடினால் எல்லா நாளும் புத்தாண்டுதான்.
விடிய விடிய சிறப்பு பஸ்கள்புத்தாண்டு தினத்தில் கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் நிறைய பேர் செல்வார்கள் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 31ந்தேதி பகல் 12 மணி முதல் 1ந்தேதி மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரினா, பெசன்ட் நகர், தாம்பரம், கோவளம், வண்டலூர், எம்.ஜி.எம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
குறிப்பாக இரவு நேரத்தில் தேவையான பகுதிகளுக்கு விடிய விடிய மாநகர பஸ்கள் இயக்கப்படும். அதிகாலையில் குன்றத்தூர், மாங்காடு, மயிலை கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், திருவேற்காடு, வடபழனி முருகன் கோவில், திருநீர்மலை மற்றும் சந்தோம், பெசனட் நகர் சர்ச் உள்ளிட்ட தலங்களுக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போல, அவசர காலங்களில் உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் தயாராக இருக்கும்.