.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 1 January 2014

``இன்பமே துன்பம்`` - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!




   
இன்பமே துன்பம்:-

நாம் நினைப்பது நடக்கவில்லை. விரும்பியது கிடைக்கவில்லை; சொல்லியவைகளை மற்றவர்கள் செய்து முடிக்கவில்லை. அப்போது உண்டாகும் மனநிலை கோபம், ஏமாற்றம்தான். அதன் தொடர்ச்சியாய் துன்பம். விரும்பிய உணவைச் சாப்பிடுகிறோம். இன்பமாக உள்ளது. அளவு முறை தெரியாமல் சாப்பிட்டால் அஜீர்ணம். வயிற்றுவலி, மலச்சிக்கல் எனத் துன்பப்படுகிறோம். தட்ப வெப்ப நிலை மாறுகிறது! உடல் நலம் குறைகிறது; துன்பமடைகிறோம். மற்றவர்களது பேச்சும், செயலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத போது பெறும் மனநிலை துன்பம்.

மிக அரிதான ஒரு பொருளைத் தேடிப்பிடித்து, பெரும் விலை கொடுது வாங்கி உபயோகித்து வருவோம். அதுபோன்ற பொருள் திடீரென விலை குறைந்து விட்டால், அடடா நாம் அதிகம் கொடுத்து ஏமாந்து விட்டோமே அவசரப்பட்டு வாங்கிவிட்டோமே? எனப் பலவாறு எண்ணுவோம். வாங்கியபின் இதுவரை அதை உபயோகித்ததை மறந்துவிடுவோம். வைத்திருந்த பணம் அல்லது பொருள் நம்மிடம் வாங்கியவர்கள் அதைத் திருப்பித் தராவிட்டாலும் வருத்தப்பட்டு துன்பமடைகிறோம். பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்கிறோம். வெற்றி பெற்றால் இன்பம் அடைகிறோம். இல்லையென்றால் துன்பப்படுகிறோம்.

ஆராய்ந்து பார்த்தால் அளவுமுறை அதிகமானால் பெறும் உணர்வே துன்பம் என்று அறியலாம். அளவுக்குள் இருந்தால் இன்பம் சிறு உதாரணம் மூலம் பார்ப்போம். நியாயமான தேவைகளை நிறைவேற்றுமளவு பொருளாதார வசதியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இன்பம் அடைகிறோம். அளவுக்கு மீறிய சொத்து அல்லது பொருளாதார வசதி உள்ளது என்றால், அவைகளைப் பாதுகாத்தல் ஒருபுறம்; பராமரித்தல் மறுபுறம் என சிரமப்படும் நிலை உண்டாகும். நியாயமான வழிகளில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்களில் விமானநிலைய விரிவாக்கத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றனர். வங்கியில் டெபாசிட் செய்தால், வரி செலுத்த வேண்டும் என்பதால், வீடுகளிலேயே பல இடங்களில் வைத்து பாதுகாத்தனர். வருமான வரித்துறையினர் சோதனையிட்டு, கண்டுபிடித்து, வரி வசூலித்து, மீதித் தொகையை எப்படி பாதுகாப்பதென ஆலோசனை கூறிய செய்தி நாளிதழ்களில் வந்தது. பணத்தை வீட்டில் வைத்து பாதுகாத்து துன்பமடைந்தனர். பணமும் இருந்தது. பயமும் இருந்தது. நடந்தது நடந்தது தான். ஒரு செயல் செய்கிறோம். அதனால் ஒரு பலன் கிடைக்கிறது. அது நாம் விரும்பியவாறு இருந்தால் மகிழ்கிறோம். இல்லாவிட்டால் வருத்தப்படுகிறோம். இதை நினைவில் கொண்டால் இனிவரும் காலங்களில் செய்யும் இது போன்ற செயல்களில் உஷாராக இருந்து நமக்கு எந்தவிதமான முடிவு வேண்டுமோ அதற்கேற்ப செயல்படுவோம். முன்னர் செய்த செயலையோ அதனால் பெற்றபலனையோ மாற்ற முடியாது. அதை ஒரு படிப்பினையாக கொள்ளலாம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள், நடந்ததை நினைத்து வருத்தப்பட்டே துன்பம் அடைகிறோம். சுயபச்சாதாபம், கழிவிரக்கம் எனப்பலவாறு இதைக் கூறலாம். இந்த மனநிலை நம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குறைப்பதோடு, நம்மையும் பலவீனமாக்கிவிடும். நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள், நல்லவையாக நடக்கட்டும். எனப் பெரியவர்கள் கூறியதை நினைவில கொள்ள வேண்டும், இல்லாவிட்டால, புலம்பல் மன்னர்களாகி விடுவோம்.

நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால், நிகழ்காலத்திலும் வீட்டில் உள்ளோரிடம் சுமூகமான உறவு இருக்காது; ஏதாவது குறை கண்டு எரிந்து விழுவோம். நல்ல கண்ணாடி என்றால் உருவத்தை உள்ளவாறு பிரதிபலிக்கும். தரமில்லாத கண்ணாடி எனில், கோணல் மாணலாக உருவத்தை பிரதிபலிக்கும். ஆக, நாம் நடந்ததை நினைத்து நீண்ட காலம் வருந்தினால் தரமில்லாத மனிதர்களாகிவிடுவோம்.

தரமுள்ள மனிதன்

இதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? ஆடு, மாடு போன்றவைகளைச் சந்தைகளில் வாங்குபவர்கள் ஒரு சில சோதனைகளை செய்து திருப்தியடைந்த பின், அதற்கேற்றவாறு விலை கூறி வாங்குவர். அதுபோல, நம் மனித வாழ்வில் ஒவ்வொருவரையும் எப்படித் தரம் பிடிப்பது? திருவள்ளுவர் கை கொடுக்கிறார்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.


எச்சம் என்பது நமது வாரிசுகளல்ல. நமக்குப் பின், அதாவது நமது மறைவுக்குப் பின் என்றும் கூறலாம். நம்மிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டு நாம் ஓரிடத்திலிருந்து அகன்றபின் நம்மைப் பற்றிப் புகழ்ந்தோ, பழித்தோ கூறுவது ஒவ்வொருவரைப் பற்றியும் பலரும் பலவிதமாகக் கணித்து வைத்திருப்பர்.

இவர் கஞ்சன், பரோபகாரி, நியாயமான நபர், அடாவடித்தனத்துக்கு பெயர் பெற்றவர். சோம்பேறி, சிடுமூஞ்சி, சுறுசுறுப்பானவர், நேரம் தவறாதவர், சொன்னதைச் செய்பவர். கறார் மனிதர் எனப்பல பெயர்களை ஒருவரே கூடப் பலரிடம் பெறுமளவு நடவடிக்கைகளை இருக்கும். ஆனாலும் நாம் அதிகம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் யார்? நம் குடும்ப உறுப்பினர்களும உடன் வேலை பார்ப்பவர்களும்தானே! இவர்களிடம் நம் அணுகுமுறை, பழக்கம எப்படி உள்ளது என்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு பொருளுக்கும் தரத்தை சோதனை செய்து ISI முத்திரை இடுகின்றனர். மனிதனின் தரத்துக்கு சோதனை உண்டா? உண்டு. இதோ தரத்துக்கான சில சோதனைகள்.

திட்டமிட்ட செயல்பாடுகள்
அன்பான அணுகுமுறை
மற்றவர்கட்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது
அனுசரித்து விட்டுக் கொடுப்பது
பிறர் மனம் புண்படாமல் பேசுதல்
பிறர் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும்
என எண்ணுகிறாரோ, அதே போல்
மற்றவர்களிடம இருப்பது

இதுபோல் பல கூறலாம்.

தேவை மாற்றம்
மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், மிருக உணர்வுகளில் இருந்து மனித நேயத்தை உணரவே பெரியோர்கள் தோன்றி உபதேசிக்க வேண்டியிருந்தது என்பதை அறியலாம். அவர்கள் மனிதருள் மாணிக்கமாய் ஒளி வீசுகின்றனர். தம் சேவையில் என்றும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கைமுறைகளைப் படித்துப் பார்த்தால், அவர்கள் அடைந்த துன்பங்கள், அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகள் போன்றவைகள் தெரியவரும். இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என பிரமிப்போம். உடல் குறைபாடுகளுடன் சாதனை புரிந்த ஹெலன் கெல்லர், வறுமையிலும் சாதனை புரிந்த பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பலரைக் கூறலாம். நம் வாழ்நாளில் பலரையும் பார்த்திருப்போம்.

எளிமையாக வாழ்ந்து, பொது சொத்துக்கு ஆசைப்படாமல் நல்லாட்சி செய்த கர்மவீரர் காமராஜர், கடும் உழைப்பால் முன்னேறிய G.D. நாயுடு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பளித்து அகில உலக அளவில் தங்கள் உறபத்திப் பொருட்களை விநியோகிக்கும் சக்தி மசாலா துரைசாமி சாந்தி போன்ற பலரைக் கூறலாம்.

நமது ஒவ்வொரு எண்ணமும், பேச்சும் செயலும் நம்முள் உறைந்துள்ள இறைநிலையான உள்ளுணர் அறிவால் தரம் பிரித்து நமக்கு அறிவிக்கப்படுகின்றன. அதனை ஏற்று செயல்பட்டால் துன்பமே கிடையாது. ஆனால், குறுகிய நோக்கத்தில், தற்காலிக இன்பத்துக்காக, விரைவில் வசதிகளைப் பெருக்க வேண்டுமென இந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி செயல்படுகிறோம். அதனால், பலர் உடனே இன்பமும் அடைவர்; ஆனால், அவை நீடித்த இன்பமல்ல. கடுமையான குளிரில் சிறு நெருப்பு கதகதப்பைத் தரும்; நெருப்பு அதிகரித்தால் வெப்பம் தாங்கமுடியாது; ஒரு தொலைவுக்கு அப்புறம் இருப்பதே பாதுகாப்பு. ஆனால், பணம், புகழ், புலன் இன்பம் இவற்றுக்கு நாம் எவ்விதமான தூரத்தையும் நிர்ணயிக்க மறந்து விடுகிறோம்.

தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும்; அதேபோல், பிறருக்கு துன்பம தரும் செயல்களை மறந்துகூட நினைக்கக்கூடாது. அப்படி எண்ணினாலே, எண்ணியவை அந்தத் துன்பமானது பிடித்துக்கொள்ளும் என பொய்யாமொழி மொழிந்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

சில குறிப்புகள்

பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம்; முழுமையான தகவல் தெரியாமலேயே ஒரு செயலைச் செய்வது; அல்லது பிறருடன் பழகுவது. எனவே, எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும், அச்செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான தகவல்கள், இடையில் சந்தேகம் ஏற்பட்டால் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் போன்றவைகளை அறிந்தபின் செயல்பட்டால் நம் வாழ்க்கை துன்பமில்லாததாக அமையும்.

புதிய நபர்களுடன் பழகும்முன் நம் ஆழ் மனதில் அவர்களுடன் பழகலாமா, வேண்டாமா என ஒரு கேள்வியைப் போட்டு விடை பெற்றபின் பழக்கத்தை நட்பாக மாற்றுவது துன்பம் தராது. தேவையெனில் நம் நலனில் அக்கறையுள்ளவர்களுடன் கலந்து பேசி, கருத்தறிந்து முடிவு செய்யலாம்.

எல்லோரையும், எல்லா நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெறவேண்டும். எந்தப் பொது நிகழ்வும் நமக்காக மட்டுமே நடப்பதில்லை. (உ-ம்) மழை, வீட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் தடை, மின்தடை, பஸ் ஓடாத நிலை, விலைவாசி உயர்வு போன்றவை. ஆனால், நம் வீட்டில் மட்டும் தடையென்றால், உடனே செயல்பட்டு, புகார் செய்து சரிசெய்ய வேண்டும். நம் வீட்டுக் குழாய் பழுதானால் நமக்கு மட்டும் குடிநீர் வரவில்லையென்றால், உடனே சரிசெய்ய வேண்டும். பொதுவாக மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால், வாழ்க்கை முழுவதும் நம்முடன் இணைந்து பயணிப்போர்களை நமது மனமாற்றத்தால் நாம் விரும்பியவாறு மாற்றமுடியும். அதற்கு அடிப்படைத் தேவை நமது மாற்றமே. இவ்வாறு செயல்பட்டால் இனி, எஞ்சிய காலத்தில் வாழ்க்கையைத துன்பமில்லாமல் வாழ முடியும். இன்பம் பெற தேவையான வசதிகள், அதன் அளவு முறைகள் இயற்கை வழங்கிய வாய்ப்புகளை இனி காண்போம். வாழ்க வளமுடன்!

ஆஸ்திரேலியாவில் அருள்பாலிக்கும் ஐந்து கரத்தோன்...!




தலவரலாறு:

 ஆஸ்திரேலியாவின் அடிலைடு மாநிலத்தில், ஸ்ரீ கணேசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்துக்களுக்கான வழிபாட்டு தலம் அமைப்பதற்காக, 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஆஸ்திரேலிய இந்து சமூக கூட்டம் நடைபெற்றது. இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு எளிதில் அனுமதி பெறுவதற்கு ஏதுவாக இருப்பதற்காக, ஓக்லான்ட்ஸ் பார்க்கிலுள்ள உபயோகமற்ற கிறிஸ்தவ தேவாலயத்தை வாங்க வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், அக்கோயிலை, இந்துமத தத்துவங்களைப் போதிப்பதற்கும் கலாச்சாரம், இந்திய மொழிகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படாத, அதனுடன் தொடர்புடைய பிறவற்றையும் போதிக்கும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஸ்ரீ கணேசர் ஆலயத்தில், விநாயகர் சிலை மட்டுமே பிரதிஷ்டை செய்து, அவரையே முக்கிய தெய்வமாக வழிபடுவதாகவும் முதலில் முடிவெடுக்கப்பட்டு, 1986ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி கோயிலைச் சீரமைத்து, 1998ம் ஆண்டு ஜூன் மாதம், புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான திட்டவரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தவர், இந்தியாவின் முதன்மை கட்டிடக்கலை நிபுணரான நாகராஜன் ஆவார். இக்கோயிலில் உள்ள தெய்வங்களின் விரிவான வடிவத்தைச் சித்தரித்தவர், ராஜலிங்கம் என்பவர் ஆவார். சிட்னியிலுள்ள முருகன் கோயிலும் இவரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமூகத்தாரின் முழு ஒத்துழைப்பு மற்றும் பொருளுதவியால் வெகு விரைவில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. பெரும் சிரமங்களைக் கடந்து, கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் ஆஸ்திரேலியவாழ் இந்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட கோயிலின் மகா கும்பாபிஷேகம், 2000ம் ஆண்டு நவம்பர் 6லிருந்து 9ம் தேதி வரை வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முக்கிய தெய்வங்கள்: பாரம்பரியம் மிக்க, சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், கணேசர், முருகன், லட்சுமி நாராயணர், சிவலிங்கம், பைரவர், ஹனுமன் மற்றும் துர்க்கை அம்மன் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வெண்கலத்தால் ஆன மூலவர் சிலைகள், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்பிள் கற்களால் ஆன சிலைகள், வட இந்திய முறைப்படியும், கிரானைட்டால் ஆன சிலைகள், தென்னிந்திய முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. மார்பிள் மற்றும் கிரானைட் ஆகிய இரண்டாலும் உருவாக்கப்பட்ட சிலைகள் ஒரே கோயிலில் அமைந்திருப்பது அரிதான ஒன்றாகும்.

முக்கிய திருவிழாக்கள்: விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, தைப்பூசம், கந்தசஷ்டி, நவராத்திரி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலின் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

கோயில் நேரங்கள்: திங்கள் முதல் வியாழன் வரை - காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, இரவு7.00-8.00 மணி வரை; வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 8.00 வரையிலும், இரவு 7.00 - 9.00, சனிக்கிழமை-காலை 7.00 முதல் 8.00 வரை, இரவு 7.00 முதல் 8.00 வரை; ஞாயிறு காலை 10.30 முதல் 1.00 வரை, மாலை 6.30- இரவு 8.00 வரை.

2014-ம் ஆண்டு - நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதம்...!!



ஜனவரி முதல் தேதி புத்தாண்டு. இந்த புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு என்றாலும், அது உலகம் முழுக்க அனைவராலும் பொதுவாக கொண்டாடப்படும் ஒரு புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலர் தங்களது புத்தாண்டு லட்சியங்கள் என்னென்ன என்பதையும், 2013ம் ஆண்டில் அவர்கள் ரசித்த படங்கள், பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார் என்பதையும் மனம் திறந்து கூறியுள்ளனர். இதோ...

டாப்சி

இந்த வருஷம், என் குடும்பத்தினர் மற்றும் என் நெருங்கிய நண்பர்களை வெளியில் அழைத்து போய் நிறைய நேரம் அவர்களோடு நேரத்தை செலவிட ஆசைப்படுகிறேன். இந்த வருடத்தில் எனக்கு பிடித்த பெஸ்ட் ஹீரோ ரன்பீர், ஹீரோயின் தீபிகா படுகோனே. இவர்களுக்கு இந்த வருஷம் நிறைய ரசிகர்கள் கிடைச்சாங்கன்னு சொல்லலாம் என்கிறார்.

சிம்ரன்

இந்த வருஷம் சந்தோஷமும், அமைதியும் நிறைய எனக்கும், என்னை சுற்றி இருக்கும் எல்லோருக்கும் கிடைக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த வருஷம் நிறைய தமிழ் படங்கள் வெளிவந்தன. பெரும்பாலான புதுமுகங்கள் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க, அவங்க எல்லோர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்ல ஆசைப்படுறேன் என்றார்.

த்ரிஷா

எந்த வருஷமும், நான் எந்த புதுத்திட்டமும் போடுவதில்லை. ஏனென்றால் என்னால் எதையும் நிறைவேற்ற முடியாது. அதனால் எப்போதும் போல என் வேலையை பார்த்துட்டு போயிடுறேன். எப்போதும் போல, இந்த வருஷம் கல்யாணம் பண்ணுவிங்களான்னு கேட்குகிறீங்க, நடக்கலாம், நடக்காம போகலாம். எல்லாத்துக்கும் நேரம் நல்லா அமையனும், பார்க்கலாம் என்கிறார்.

ஹன்சிகா
2013 நாலு படங்கள் எனக்கு கிடைத்தது. 2014, தமிழ் 4, தெலுங்கு 4 என்று பயங்கர பிஸியா இருக்கேன். போனவருஷத்தை விட 2014 நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு ஆசைப்படுறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் நன்றி. இந்த வருஷம் வந்த படங்களில் நடித்த எல்லோருமே அழகா நடிச்சிருந்தாங்க. எல்லாருமே என் குடும்பம் மாதிரி. என்னால் ஒருத்தரை தேர்வு செய்ய முடியல. எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்.

காயத்திரி (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)


புது வருஷத்தில் எந்த பிளானும் பண்றதில்லை, எடுப்பதும் இல்லை. ஒருநாள் முடிவு பண்ணினா அதை செய்திடுவேன். மனசுக்குள் ஒரு சின்ன ஆசை என்னனா? நல்ல நல்ல படங்கள், தரமான படங்களா பண்ணனும், தரமான படங்கள் கொடுக்கும் ஹீரோ, இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும். எனக்கு பிடிச்ச பெஸ்ட் ஹீரோ, ஹீரோயின் விஜய், காஜல் தான். துப்பாக்கி படத்தில் அவங்க கெமிஸ்ட்ரி அவ்ளோ சூப்பர்.

நந்திதா (அட்டகத்தி)

கிட்டத்தட்ட 7 படங்களில் வித்யாசமான ரோலில் நடிச்சிட்டேன். ஆனா, இன்னும் பெர்பார்ம் பன்ற அளவு நல்ல கேரக்டர்களில், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும். முக்கியமா காலையில 6 மணிக்கு எழுந்திருக்க பழகனும். இந்த வருஷம் எனக்கு பிடித்த ஹீரோ கடல் கவுதம் தான். அப்புறம் நம்ம குமுதா என்று தன்னை கூறுகிறார்.

ஜனனி அய்யர்

புது வருஷங்களில் புது திட்டங்கள் போடுறதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறந்ததை செய்யனும், அவ்ளோ தான். 2013-ல் வந்த சிறந்த படம், ஹீரோ, ஹீரோயின்னா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா தான்.

பிரியா ஆனந்த்

புது வருஷங்களில் நிறைய பிளான் பண்ணுவேன். ஆனா, அதை கடைபிடிக்க முடியாது. ஆனா ஒன்னு மட்டும் மாத்திக்கனும். எனக்கு மறதி ரொம்ப அதிகம். பெரிய தப்பான பழக்கம் அது. இந்த வருஷம் அதை குறைக்கனும். இந்த வருஷத்தில் பெஸ்ட் ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் த்ரிஷா(பத்து வருஷம் ஆனாலும் இப்போ வரை தொடர்ந்து ஹிட் கொடுத்திட்டு இருக்காங்க)

சாட்டை மகிமா

2013 என் படங்களில் சின்ன சின்ன தவறுகள் செய்திருந்தேன். இதை வரும் வருடங்களில் சரி பண்ண விரும்புகிறேன். இயக்குநர்களின் பிடித்த நடிகையாக வரனும்னு ஆசை. இந்த வருஷம் எனக்கு பிடித்த நடிகர் - சூர்யா, நடிகை - அனுஷ்கா.

ஸ்ரீகாந்த்
2014 தரமான வெற்றிகரமான படங்கள் தரனும் என்பதே என் இலக்கு. நான் தொடங்கி இருக்கும் கோல்டன் பிரைடேஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நல்ல படியாக கொண்டு வர ஆசைப்படுறேன். இந்த வருடம் வந்த படங்களில் பெஸ்ட் ஹீரோ கமல் சார். ஹீரோயின் நயன்தாரா.

ஜெய்குகேனி - மெய்யழகி

2013 நான் பண்ண படங்கள் சில பரிட்சார்ந்த முயற்சியாவே இருந்தது. ஆனால் 2014 நிறைய கமர்ஷியல் படங்கள் பண்ணனும், வெயிட் குறைக்கனும், நல்ல கதைகள் அமைந்து என் பேர் நிலைக்க ஆசைப்படுகிறேன். இந்த வருஷம் வந்த படங்களில் பெஸ்ட் ஹீரோ - ஜெய், ஹீரோயின் நஸ்ரியா என் சாய்ஸ்.

லட்சுமி மேனன்

எந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாம சினிமாவுக்கு வந்தவள் நான். அதனால் எதுக்கும் பிளான் பண்ண மாட்டேன். எது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வேன். எது வந்தாலும் நல்லதுக்குனு எடுத்துப்பேன்.

எனக்கு பிடித்த பெஸ்ட் ஹீரோ - விஷால், ஹீரோயின் - மரியான் பார்வதி.

பிரசாந்த்

2013 நிறைய ரிலாக்ஸ் பண்ணிட்டேன். 2014-ல் விட்ட இடத்தை பிடிக்க போராடப் போகிறேன். நிறைய கடினமா உழைப்பை கொடுக்க தயாராகி கொண்டு இருக்கேன். இந்த வருஷம் வந்த படங்களில் கமல் சாரின் விஸ்வரூபம் படமும், அவரது நடிப்பும் என்னை கவர்ந்தது.

விஜய் வசந்த்

புதுத்திட்டங்கள் எடுக்கிற பழக்கம் எனக்கு எப்போதும் இல்லை. இப்போது 2 படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். 2014-ல் இன்னும் தரமான நல்ல படங்களா நடிக்க ஆசைப்படுகிறேன்.

இந்த வருஷம் வந்த படங்களில் அதிகமாக பேசப்பட்டதும், ஹிட் கொடுத்ததும் விஜய் சேதுபதி தான். ஹீரோயின் எனக்கு எந்த சாய்சும் இல்லை என்கிறார்.

இனியா

புது வருஷம் எனக்கு பெருசா எந்த திட்டமும், இல்லை. எப்பவும் பேசப்படுற நல்ல படங்களா பண்ணனும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கு. 2014-ல் பார்க்கலாம். எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா, நடிகர் விஜய்.

பூர்ணா

எனக்கு எப்பவும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. எந்த விஷயம் என்றாலும் நாளை பார்த்துக்கலாம், நாளை பார்த்துக்கலாம்னு தள்ளி போட்டுவிடுவேன், அதை கொஞ்சம் மாத்தனும், சமூக நல விஷயங்களில் கொஞ்சம் பங்கெடுக்க ஆசைப்படுகிறேன். இந்த வருடம் தமிழ் படங்கள் நிறைய பார்க்கல, அதனால என்னால் பெஸ்ட் யாருன்னு சொல்ல முடியல என்கிறார்.

விதார்த்

இந்த வருஷத்தில் நான் தெரிஞ்சிகிட்ட ஒரே விஷயம், நல்ல கதை, நல்லா நடித்தால் மட்டும் போதாது, அந்த படத்தை மக்கள் கிட்ட போய்சேர்க்கும் நல்ல தயாரிப்பு நிர்வாகம் வேண்டும், அந்த மாதிரி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் படங்களில் இன்னும் அதிகமாக நடிக்க ஆசை. 2013-ல் வந்த படங்களிலேயே இப்போ வரை என்னை பாதித்த ஒரே கேரக்டர், விடியும் முன் படத்தில் நடித்த அந்த குழந்தை தான்.

சிவகார்த்திகேயன்

2013 எனக்கு சூப்பர் வருஷம். 2014 இன்னும் சூப்பரா இருக்க வேண்டுகிறேன். இந்த இடத்தை தக்க வைக்க ரொம்ப போராட வேண்டியிருக்கு. காமெடி எல்லை தாண்டி, டான்ஸ், ஆக்ஷ்ன் இப்படி கொஞ்சம் கவனம் செலுத்த ஆசை இருக்கு.

இந்த வருஷம் வந்த படங்களில் பலரும் நல்லா நடிச்சிருந்தாங்க. கமல்சாரின் விஸ்வரூபம் பார்த்து மிரண்டு போனேன், அஜித் சாரின் ஸ்டைல், நடிப்பு, விஜய் சாரின் டான்ஸ், சூர்யா சாரின் ஆக்ஷ்ன் இப்படி பலரும் சிறப்பா நடிச்சிருந்தாங்க. நடிகைகள்ன்னா - ஹிஹிஹி....

சுரபி (இவன் வேற மாதிரி)


வரும் வருஷம், பெரிய பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும், என் பெயரை தமிழ் சினிமாவில் கொஞ்சம் பேச வைக்க ஆசைப்படுறேன். எனக்கு பிடிச்ச பெஸ்ட் ஹீரோ - அஜீத், ஹீரோயின் - சமந்தா.

பாவனா

எனக்கு ஒரு கெட்ட பழக்கம், நடந்து போனதை பற்றி யோசித்து ரொம்ப டிஸ்டர்ப் ஆவேன். அது முடிஞ்சிபோச்சுன்னு யோசிக்க மாட்டேன். மிஸ் ஆனது பற்றி அப்புறம் யோசிக்கறத 2014-ல் சுத்தமா நிறுத்த ஆசைப்படுகிறேன். நல்ல தமிழ் படங்களில் அடுத்த வருடம் என்னை பார்க்கலாம். எனக்கு பிடித்த ஹீரோ - ரன்பீர், ஹீரோயின் - தீபிகா.

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!

குழந்தைபேறு தரும் எலுமிச்சை....!!!




கொங்குநாட்டில் பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தவன் `கோணவராயன்' என்ற குறுநில மன்னன். அவனது ஆட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்த நம்பியூரில் பழமைமிக்க பல திருக்கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், பட்டத்து அரசி அம்மன் கோயில். இக்கோயில் தோன்றிய வரலாறு தெளிவாக இன்னும் அறியப்படவில்லை என்றபோதும் செவி வழிச் செய்தியாகப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.


ஒருசமயம், திப்புசுல்தானின் படை வீரர்களால் இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. போரில் நம்பியூரையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அப்போது ஆட்சி செய்து வந்த பட்டத்து அரசியான மருதம்மா உயிர் நீத்தாள். அந்த அரசியின் வீரத்தை நினைவுகூரும் விதமாக, அங்குள்ள கோயிலில் அருளாட்சி புரிந்து வந்த அம்மனுக்குப் `பட்டத்து அரசி அம்மன்' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.


போர் நடைபெற்றபோது படைகளைத் தலைமை தாங்கி நடத்திய அரசியையே `படைத்தலைச்சி அம்மன்' என்று பிற்காலத்தில் மக்கள் வணங்க ஆரம்பித்ததாகவும், அந்த அம்மனே இன்று பட்டத்தரசி அம்மன் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. கோயிலின் முன்னே விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது.


உள்ளே கன்னிமார் சிலைகள் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரதி வாரம் வெள்ளி, திங்கள் கிழமைகள் இங்கே விசேஷமானவை. மிகப் பழமை வாய்ந்த பட்டத்து அரசி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு, அன்னையின் சூலத்தில் குத்திய எலுமிச்சங் கனியை பூசாரி கொடுத்து, பிழிந்து உண்ணச் சொல்வார்.


பல தம்பதிகளுக்கு இதனால் குழந்தைப்பேறு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கோபி செட்டிபாளையத்திலிருந்து கோவை செல்லும் பேருந்துப் பாதையில் 18 கி.மீ. தொலைவில் நம்பியூர் பாரதிநகரில் உள்ளது பட்டத்து அரசி அம்மன் கோயில்.

7-ம் அறிவு படம் பாத்திருந்தா இது உங்களுக்கு புரியும்...?



நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே.நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம்  அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன். இதே போல் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்.


மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம், விஞ்ஞானம்தான் மெய்ஞ்ஞானம் என்பதைக் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதைக் கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அந்த திருஷ்டி கழிய, சுற்றிப் போடுதல் அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர் அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில் வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்த உப்பையும் காய்ந்த மிளகாயையும் எரிகின்ற நெருப்பில் இடுவார்கள்.


அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும்; காய்ந்த மிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத் தாக்கும். இந்த நிகழ்வில் உப்பும் காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த வேதிய மாற்றம், நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; விஞ்ஞானப் பிரகாரம் உப்பும் காய்ந்த மிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம், நம் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.


கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்தத் தண்ணீருக்கு அளிக்கும்; அந்தச் சிவப்புத் தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய மாற்றத்தால் விளையும் மணம், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து, நம் நாசியில் புகுந்து நமக்குக் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர்.


பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி, இந்தக் கிருமி நாசினி, பசுமாட்டின் சாணத்தைப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது.


அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடிநீரையும் அளிக்கிறது; பயிர் செழித்து வளரத் தேவையான இயற்கைச் சத்துகளைப் பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது, அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துகள் தாமாகவே கலந்து அந்தச் சத்துகளும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு, மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியியல் விந்தையால் நீராக, சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது.


ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞ்ஞானிகளாலும் ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்தப் பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்தப் பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவை எல்லாவற்றையும் அதாவது நம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்.


ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை, அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை. மெய்ஞ்ஞானம் எதைக் கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது.இயற்கையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து, விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவற்றில் உள்ள நன்மைகளை அடைவோம்.


ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top