.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 8 January 2014

ஜில்லா பஞ்ச்...!



இளைய தளபதி விஜய் படங்களில் பஞ்ச் வசனங்களுக்கு என்றுமே குறைவிருக்காது. அவரது படங்களில் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுபவை சண்டைக்காட்சிகள், நடனங்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளாகும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தமிழில் அதிக பஞ்ச் வசனங்கள் இளைய தளபதியின் படங்களில் இருக்கும். விஜய் ரசிகர்களும் இந்தப் பஞ்ச்
டயலாக்குகளைப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

“ ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சவே நானே கேட்க மாட்டேன்” என்ற பஞ்ச் வசனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதைப் போலவே ஜில்லா படத்திலும் ஒரு பஞ்ச் வசனம் வெளியாகவுள்ளது.

ஜில்லா படத்தில் “ ஒரு வாட்டி எங்கிட்ட வாங்கிட்டான்னா, இங்க இல்ல இந்த ஜில்லாவுலயே இருக்க மாட்டான்” என்ற பஞ்ச் வசனம் இப்படத்தில்
இடம்பெறுகிறது. இப்படத்தின் டீசரில் வெளியாகியிருக்கும் இந்தப் பஞ்ச் டயலாக் ஏற்கெனவே ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளாகியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவரையொருவர் கிண்டல் செய்து எழுத ஆரம்பித்துவிட்டனர் என்பது கூடுதல் செய்தி.

விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில், நேசன் இயக்கத்தில்,
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி
10ல் வெளியாகிறது.

லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது..?



இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள்.

காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.

மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால திட்டம். இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட திட்டம்

 நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.

பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும்,  மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது.

அது மிகவும் தவறானது ஏனென்றால் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.

நிறைய பேருக்கு நம்மிடம் தான் போதுமான பணம் உள்ளதே எதற்கு நமக்கு இன்ஷூரன்ஸ் என்ற கேள்வி உள்ளது.

அதற்கான பதில் இது தான்.

ஒரு வேளை நாம் இறந்தால், நம்முடைய குடும்பம் தற்போது உள்ள நிலையிலே இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நிதிச் சிக்கலில் இருந்து விடுபட நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

இன்று பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவையான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. மேலும் பலருக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.

சிலர் 10 பாலிசிகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் போதுமான தொகைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். இன்ஷூரன்ஸில் பல வகை உள்ளது.

மிகவும் பிரபலமானது என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணிபேக் பாலிசி. இது நீண்ட கால பிளான் 20 முதல் 25 வருடம் வரை. ஆனால் வட்டி குறைவு மேலும் சரண்டர் செய்தால் நாம் நிறைய பணம் இழக்க வேண்டி வரும்.

உதாரணமாக நம்முடைய காலில் சிறிய கட்டி வந்தவுடன் அதை அப்புறப்படுத்தாமல் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றால் காலையே எடுக்கவேண்டி வரும்.

முதலிலே இந்த மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசியை புரிந்து கொண்டால் சரண்டர் செய்வது நல்லது. தெரிந்தும் 20 வருடம் கட்டுவது காலை இழப்பதற்குச் சமமாகும்.

பணத்தை இழக்க விரும்பாமல் 20 வருடம் கட்டிய பின்பு வரும் தொகை மிகக் குறைவு. எனவே இந்த மாதிரி பாலிசியைத் (traditional) தவிர்ப்பது நல்லது.

அடுத்ததாக ULIP பாலிசி இது. இது பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப நம்முதலீடு இறங்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாலிசியில் ப்ரீமியம் அதிகம் ஆனால் லைப் இன்ஷுரன்ஸ் கவரேஜ் குறைவு. இதையும் தவிர்ப்பது நல்லது.

பின்பு எதுதான் நல்ல பாலிசி என்கிறீர்களா..?
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி தான்.

உதாரணமாக ஒருவருக்கு 30 வயது என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு 60 வயது வரை கவர் செய்யக்குடிய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்பட்சத்தில், பிரீமியமாக 18,000 ருபாய் செலுத்தினால் போதும்.

Tuesday, 7 January 2014

ஒரு ஊர்ல ஒரு ஊழல் கணக்கு ?






புள்ளி விவரங்கள் பொதுவாக போரடிக்கக்கூடியவை. சமயத்தில் அதுவே சுவாரசியம் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு. அக்கப்போர் விவரங்களாக இருக்கும் பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் கீழே கிடந்தால் எடுத்து அப்படியேவா கொடுத்துவிடுவோம்? அவசரமாகத் திறந்து ஒரு புரட்டு புரட்டமாட்டேன் என்றால் நீங்கள் மகாத்மா. நானெல்லாம் பாபாத்மா.

இங்கே கவனியுங்கள். இது ஒரு புள்ளி விவரம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் போன்ற ஒன்று. இந்தியாவின் பக்கத்து வீட்டுக்காரர் சம்பந்தப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் 36,907 அரசு அதிகாரிகள் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த முப்பத்தி ஆறாயிரத்தி சொச்சம் பிரகஸ்பதிகளும் ஈடுபட்ட ஊழல்களின் எண்ணிக்கை 27,236. அதாகப்பட்டது, சில ஊழல்களில் கூட்டணி செயல்பட்டிருக்கிறது.

ஆச்சா? மேற்படி 27,236 ஊழல்களில் 21,848 கேஸ்கள் மிகப் பெரியவை. அதாவது ஊழல் செய்த தொகை பெரிது என்று பொருள். சதவீதக் கணக்கில் சொல்வதென்றால் 80.2 சதவீத ஊழல்கள் பெரும் ஊழல்கள். இந்த எண்பது சதவீத ஊழலில் 16,510 ஊழல்கள் மிக நேரடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த வகையில் சேருபவை. இந்த ரக ஊழல்களில் மட்டும் 23,017 அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இத்தனை ஊழல்கள் நடந்திருந்தாலும் இதில் தேர்ந்தெடுத்த 12,824 ஊழல்களைக் குறித்துத்தான் அரசுக்குப் பெரும் கவலை. இந்தப் பன்னிரண்டாயிரத்தி சொச்ச ஊழல்களின் மொத்த மதிப்பு 910.57 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5670 கோடி) என்பது மட்டுமல்ல காரணம். சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளில் சிலபேரின் பெயர்கள் வெளியே வந்தால் மானம் மரியாதையெல்லாம் மொத்தமாகப் போய்விடும் என்கிற அச்சம்.

வருஷம் முழுக்க ஊழல் நடக்கும்போது பக்கத்தில் இருந்து கண்காணித்து, நடந்து முடிந்ததும் கர்ம சிரத்தையாக லிஸ்டு போட்டார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. உலகெங்கும் ஊழல் நடந்தபடிதான் இருக்கிறது. சீனாவில் மட்டும் ஒரு டிபார்ட்மெண்ட் இப்படி கர்ம சிரத்தையாகக் கணக்கெடுத்துப் புள்ளிவிவரம் கொடுக்கிறது. அதுதான் வித்தியாசம்.

இத்தனை ஊழலர்களையும் என்ன செய்யலாம் என்று இனி யோசிப்பார்கள். பொலிட் பீரோ தீர்ப்புக் கொடுக்குமா அல்லது காட்ரெஜ் பீரோவில் வைத்துப் பூட்டிவிடுவார்களா என்று இப்போது சொல்வதற்கில்லை. சீனாவின் மிகப்பெரிய பிரச்சினையாக ஊழல் உருவெடுத்து வருவது கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிற சங்கதி.

என்ன பிரச்சினை என்றால் ஊழல் நடக்கும் இடம் கண்டறியப்படுகிறது. இன்னார் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முடிகிறது. ஆதாரங்கள் திரட்ட முடிகிறது. வளைத்துப் பிடிக்கவும் முடிகிறது. ஆனால் நிரூபித்தல் என்று வரும்போது பல வழக்குகள் புஸ்ஸாகிவிடுகின்றன. எனவே சீர்திருத்தங்களை நீதித் துறையில் இருந்து தொடங்கவேண்டும் என்று பலமாகக் குரலெழும்பத் தொடங்கியிருக்கிறது.

இந்த வருஷம் ஊழலை மெயின் அஜண்டாவாக எடுத்துக்கொண்டு மிகக் கடுமையான தண்டனைகள் மூலம் அச்சம் பரப்பி ஊழலைக் குறைக்க சீன அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஊழலை ஒழிக்கட்டும். நாம் கொசு ஒழிக்க முயற்சி செய்வோம்.

ஏழு அணிகள், ஏழு வீரர்கள் கொண்ட ஏழு ஓவர் கிரிக்கெட்!



துபையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும்.

இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபையில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோனி, நட்சத்திர வீரர் ரெய்னா ஆகியோர் கலந்துகொண்டு போட்டி தொடர்பான அறிவுப்புகளை வெளியிடுகின்றனர். போட்டிகள் வரும் மார்ச் மாதம் துபையில் நடக்கிறது.

வீரம் படத்தைப் பற்றித் தனது அனுபவங்களைப் பகிர்கிறார் தமன்னா!



தல அஜித் மற்றும் தமன்னா நடிப்பில் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது வீரம் திரைப்படம். இப்படத்தை பற்றித் தமன்னா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது வீரம் திரைப்படம். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு
இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அஜித்திற்குச் ஜோடியாக நடித்துள்ள தமன்னா தனது வீரம் திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுடன் நேரடியாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். நாளை மாலை 4 மணியளவில் ரசிகர்கள் தங்களது கேள்விகளைத் தமன்னாவிடம் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்கலாம்.

தமன்னாவின் ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/Tamannaah

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீரம் படத்தின் மூலம் தமிழுக்குத் திரும்பியிருக்கும் தமன்னா மீண்டும் தமிழில் கலக்குவார் என்று அவரது
ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top