.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 7 October 2013

தகவல்களை கொட்டித்தரப்போகுது நவீன நிழற்குடைகள்!


சென்னையில் நிழற்குடை உள்ள பஸ் நிறுத்தங்கள் ரொம்பவே குறைவு. எங்கு அதிகமான பயணிகள் வருகிறார்களோ அங்கு நிழற்குடை இருக்காது. ஆளே இல்லாத நிறுத்தங்களில் அல்லது பஸ்சே நிற்காத நிறுத்தங்களில் பளபளவென நிழற்குடை அமைத்திருப்பார்கள். இதற்கு காரணம் வியாபார நோக்கத்துக்காக மட்டுமே நிழற்குடைகள் அமைக்கப்படுவதுதான்.


தற்போதுள்ள நவீன நிழற்குடைகளில் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே ஜொலிக்கிறது. ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் எந்த நிறுத்தத்தில் தனது விளம்பரத்தை பிரதிபலிக்க விரும்புகிறதோ அங்கு மட்டுமே பளபளவென்ற நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன. விலை போகாத நிறுத்தங்களில் மக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட்டபடிதான் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.



இந்த நிலைமை தலைகீழாக மாறப்போகிறது. முழுக்க முழுக்க மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, நவீன நிழற்குடைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் 108 நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிழற்குடைகள் வெறும் நிழல் தரும் குடைகளாக மட்டுமே இருக்காது. விளம்பரங்கள் இருக்காது. அதையும் தாண்டி, மக்களுக்கு தேவையான தகவல்களை கொட்டித்தரும் வகையில் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


நவீன நிழற்குடைகளில் பஸ்களின் நேரப்பட்டியல், அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு 2, 3 பஸ் மாறி எப்படி செல்வது, அருகில் என்ன ரயில் நிலையம் இருக்கிறது போன்ற தகவல்கள் இடம் பெற உள்ளன. மேலும், பஸ் நிறுத்தம் உள்ள ஏரியாவின் வரைபடமும் இடம் பெறப்போகிறது. இந்த வரைபடத்தில் எங்கெங்கு பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில், சர்ச், மசூதி, அரசு அலுவலங்கள் அமைத்திருக்கின்றன என்ற தகவல்கள் இருக்கும். பஸ் நிறுத்தம் உள்ள ஏரியாவின் வரலாற்று தகவல்களையும் இடம் பெறச் செய்ய உள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சமீபத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த நிழற்குடைகளை அகற்றியுள்ளோம்.



அதனால், பல இடங்களில் நிழற்குடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்த இடங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். அதே போல பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்குடைகளும் மாற்றப்படும். ஏரியா வரைபடம், பஸ் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் நவீன நிழற்குடைகள் விரைவில் அமைக்கப்பட்டு விடும். இதில், ஆட்டோ கட்டணங்களையும் சேர்க்கலாம் என ஆலோசித்து வருகிறோம். முதற்கட்டமாக எந்தெந்த இடத்தில் நவீன நிழற்குடை அமைக்கலாம் என்பது தொடர்பான சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்ததும், நவீன நிழற்குடைகள் அமைய உள்ள நிறுத்தங்கள் குறித்து அறிவிக்கப்படும்’ என்றனர்.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10.1 டேப்லட் 2014-ம் ஆண்டு அறிமுகம்!






சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10.1 என்னும் மேம்படுத்தப்பட்ட தனது புதிய டேப்லட்டினை 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாதனத்தில் வன்பொருள் தரம் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவை மிகவும் சிறப்பாக உள்ளது. திக்நெஸ்(thickness) 0.31 அங்குலங்களுடன் வருகின்றது. நல்ல தரமான புகைப்படங்களை எடுக்க 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. வீடியோ அழைப்பு வசதிக்காக 2 மெகா பிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.


S Pen ஏர் கட்டளை அம்சத்துடன் வருகின்றது. 1.9GHz வேகம் கொண்ட Quad Core Samsung Exynos 5420 Processor கொண்டுள்ளது. அதிவேக தரவு(data) மாற்றத்திற்காக ப்ளூடூத் 4.0 வழங்குகின்றது. 16 ஜிபி, Wi-Fi மாடல்கள் விலை ரூ.549,99 மற்றும் 32 ஜிபி variant விலை ரூ.599,99 ஆகும். மேலும் இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16GB மற்றும் 32GB கொண்டுள்ளது.


சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 அம்சங்கள்:


10.1 அங்குல LCD டிஸ்ப்ளே

2560 * 1600 பிக்சல் ரெசல்யூஸன் திரை கொண்டுள்ளது

8 மெகாபிக்சல் முன் கேமரா

2 மெகா பிக்சல் பின்புற கேமரா

USB 2.0 மைக்ரோ போர்ட்

சாம்சங் Exynos 1.9 GHz குவாட் செயலி

3 ஜிபி ரேம்

ப்ளூடூத் 4.0

8220 Mah பேட்டரி

ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குதளம்.

ரசிகர்களை ஏமாற்றக் கூடாது: அஜித் சிறப்புப் பேட்டி!

'ஆரம்பம்' படத்தில் நடிகர் அஜித்
 
 
'ஆரம்பம்' படத்தில் நடிகர் அஜித்


காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது என்று டூப் போடாமல் நடிப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் நடிகர் அஜித். |


அஜித், விஷ்ணுவர்தன் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறும். 'பில்லா'வில் இணைந்தபோதே, மீண்டும் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டார்கள். இப்போது 'ஆரம்பம்' மூலம் அது தொடர்ந்திருக்கிறது. தீபாவளி ரிலீஸுக்கு 'ஆரம்பம்' தயாராகிக் கொண்டிருக்க, 2014ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் 'வீரம்' ஷூட்டிங்கில் அஜித் பிஸி. படங்கள், உடல்நிலை, போட்டோகிராபி, பைக் ரேஸ் என அஜித்துடன் The Hindu நாளிதழுக்காக நிகில் ராகவன் பேசியதிலிருந்து... 


" 'ஆரம்பம்', 'வீரம்' படத்துல என்ன ரோல்ல நடிக்கிறீங்க?" 


"இரண்டு படங்கள்லயுமே என்னோட ரோல் வித்தியாசமானது. 'பில்லா', 'மங்காத்தா' படம் மாதிரி 'ஆரம்பம்' படத்துல ரொம்ப ஸ்டைலிஷான ரோல். முந்தைய ஏ.எம்.ரத்னம் படங்கள் மாதிரி, இந்த படத்துலயும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். உலகளாவிய பிரச்சினையை பத்தியும் இந்தப் படம் பேசும்.
'வீரம்' படத்துல அப்படியே 'ஆரம்பம்' படத்திற்கு எதிர்மறையான ரோல். ஆக்ரோஷமான கதாபாத்திரம். முக்கால்வாசி படத்துல என் காஸ்ட்யூம் வேஷ்டிதான். 'அட்டகாசம்' படத்துலதான் கடைசியா இந்த மாதிரி ரோல் பண்ணேன். 'ஆரம்பம்', 'வீரம்' இரண்டு படங்கள்லயுமே ஆக்‌ஷன் ரோல்தான்."


"ஒரு கதாபாத்திரத்துல நடிக்க ஒப்புக்க, என்னென்ன இருக்கணும்னு எதிர்பார்ப்பீங்க?" 


"நான் ஒரு தொழில்முறை நடிகன். சம்பளம் வாங்கிகிட்டு, இயக்குநர் உருவாக்கியிருக்க கதாபாத்திரத்துல நடிக்கறவன். அதிர்ஷ்டவசமா, இதுவரை நான் நடிச்ச படங்கள்ல எனக்கேத்த ரோல் கிடைச்சுது. ரொமான்டிக் ஹீரோவா ஆரம்பிச்சு, அப்பறம் ஆக்‌ஷன் ரோல்ல நடிச்சு, இப்ப கொஞ்சம் கனமான கதாபாத்திரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். கதைக்கான ஸ்கிரிப்ட்ட நான் நம்பறேன். ஆனா, பல நேரத்துல நாம நினைக்கறது நடக்கறதில்லை. சில நேரம் இயக்குநரோட திறமைய நம்பிதான் இறங்கணும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரெண்டு பேரோடயும் நான் ஒத்துப் போகற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். படம் பண்றதே நம்மளோட பெஸ்ட் என்னவோ அதை குடுக்கத்தான். என்னைப் பொருத்தவரை திருப்தியா படம் பண்ண மனநிறைவு இருக்கணும். எனக்கு அது தான் தேவை." 


"நீங்க இயக்குநரின் நடிகரா? படத்திற்கு உங்களின் பங்களிப்பு என்ன?" 


"படத்துல இயக்குநர்களோட நோக்கத்தைதான் நான் நிறைவேத்தறேன். ஒரு நடிகனா, நான் என் ஆலோசனைகளை சொல்லுவேன். இயக்குநரோட கிரியேட்டிவிட்டில தலையிடாம, நாம நடிக்கறதுல நம்ம திறமையை மேம்படுத்திக்கிட்டா, அது படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நினைக்கறேன். ஷூட்டிங் நடக்கற இடத்துல ஈகோ இல்லாம போனாலே போதும், அது வாழ்க்கைய அற்புதமானதாக்கிடும், இல்லையா!"
"ரொமான்டிக் ஹீரோ, ஆக்‌ஷன் ஹீரோ, வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரம்... எந்த ரோல் உங்களுக்கு மன திருப்தி தந்திருக்கு?"
"என்னோட இளமைல நிறைய ரொமான்டிக் ஹீரோ ரோல் பண்ணினேன். வயசு கூட கூட, எனக்கு ஏத்த ரோல்களை மட்டுமே ஒத்துக்கறேன்... நரைத்த முடி உள்பட. அதிர்ஷ்டவசமா, மங்காத்தா, பில்லா-2 ரெண்டும் அமைஞ்சது. இப்ப 'ஆரம்பம்', 'வீரம்' படங்கள்லயும் இது தொடருது. வில்லத்தனம் கொண்ட ரோல்ல நடிக்கறதால ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லாம போகாது. எனக்கு சௌகர்யமான ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். வேலை செய்யறேங்கறது தான் எனக்கு உற்சாகத்தை குடுக்குது, அது எந்த கதாபாத்திரமா இருந்தாலும் சரி." 


"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 


"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்களை நாங்க மதிக்கறோம். ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது." 


"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 


"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன். சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 


"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை... ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க?" 


"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை. என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை." 


"நடிப்பைத் தவிர ஏரோ மாடலிங், போட்டோகிராபின்னு பல தளங்கள்ல விரியுது உங்க விருப்பங்கள்..." 


"ஆமா.. பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். 'ஆரம்பம்', 'வீரம்' ரெண்டு படமும் முடிஞ்ச பிறகு, கால்ல ஒரு சின்ன ஆபரேஷன் பாக்கி இருக்கு, அதை பண்ணிக்கப் போறேன். அதுக்கப்பறம் ஆறு மாசத்துக்கு புது படம் ஒத்துக்கப் போறதில்லை. கால் சரியா குணமாகறதுக்காக மட்டும் இல்லை, அந்த ஆறு மாசத்துல ஏரோ மாடலிங்ல ஈடுபடப்போறேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.


கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்!


திருமங்கலம் தாலுகா அலுவலகம். உள்படம்: வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் (படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி)
திருமங்கலம் தாலுகா அலுவலகம். உள்படம்: வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன்
 
 

அக்டோபர் 16. பாளையத்துச் சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம். அவர் பயன்படுத்திய நாணயங்கள், அணிகலன்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், அவரை தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக் கயிறு காணாமல் போய்விட்டதாக சர்ச்சை கிளப்புகிறார்கள்!


வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாளையக்காரர்களை அணி திரட்டினார் வீரபாண்டிய கட்டபொம்மன். அதற்காக அவரை கைது செய்த ஆங்கிலேய அரசு, தூத்துக்குடி மாவட்டம் (பழைய திருநெல்வேலி ஜில்லா) கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி புளியமரத்தில் தூக்கிலிட்டது. ஆங்கிலேய தளபதி பானர்மேன் கட்டளைப்படி, தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம்தான் கயத்தாறு. இதற்கான தீர்ப்பை எழுதிய இடம் மதுரை மாவட்டம் திருமங்கலம்.


ஆங்கிலேயர்கள் காலத்தில் திருமங்கலம் முக்கிய கேந்திரமாக விளங்கியது. வைகை ஆற்றைக் கடந்து மதுரைக்கு வரவேண்டிய கஷ்டம் இருந்ததால், தங்களது முக்கிய அலுவலகங்களை திருமங்கலத்திலேயே வைத்திருந்தார்கள். துரைமார்களுக்கான பங்களா (இப்போது டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்கும் கொட்டடி, நீதிமன்றம் இத்தனையும் அப்போது திருமங்கலத்தில் இருந்தது. காவிரிக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் திருமங்கலம் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டதாக சொல்கிறார்கள்.



 கட்டபொம்மனுக்கும் இங்குதான் தீர்ப்பு எழுதப்பட்டது என்பது வரலாற்று ஆய்வர்களின் கூற்று.


கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது உயிரைக் குடித்த அந்தப் பாசக்கயிற்றை பிரிட்டிஷ் அரசாங்கம் பத்திரப்படுத்தி வைத்தது. தீர்ப்பு எழுதப்பட்ட திருமங்கலத்தில் உள்ள அரசு ஆவண காப்பகத்தில் அந்த கயிற்றை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். தற்போது அந்தக் கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. டார்க் ரூம் என்று சொல்லப்படும் இந்த ஆவணக் காப்பகத்தில் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள் கேட்பாரின்றி கிடக்கின்றன. இவற்றோடுதான் கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்ததாக சொல்லப்படுகிறது.



இந்த ஆவணக் காப்பகத்தை பராமரித்து(!) வந்த அலுவலக உதவியாளர் ஒருவர் கட்டபொம்மன் கயிறு காணாமல்போன விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியில் சொல்லி இருக்கிறார். “தபால் பையில் கட்டி பத்திரமா வைச்சிருந்த கயிறு காணாமப் போச்சு” என்று அவர் சொன்னபோது, ‘குடிச்சுட்டு உளறுகிறான்’ என்று சொல்லி அந்த விஷயத்தை அமுக்கிவிட்டார்கள். அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில், கயிறு காணாமல் போன சர்ச்சை இப்போது மீண்டும் கச்சை கட்டுகிறது.


வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான சாகித்ய அகாதமி சு.வெங்கடேசன் திருமங்கலம் பகுதியில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை தொகுத்து தன் படைப்புகளில் தகவல்களாக தந்திருக்கிறார். கட்டபொம்மன் கயிறு குறித்து அவரிடம் பேசினோம். “கட்டபொம்மனை தூக்கில் போடுவதற்கு தீர்ப்பு எழுதப்பட்ட இடம் திருமங்கலம்தான். அதில் சந்தேகம் இல்லை. 


தண்டனையை நிறைவேற்ற திருமங்கலம் நீதிமன்றத்தின் நடமாடும் பிரிவு ஒன்று கயத்தாறில் செயல்பட்டது. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட கயிறு திருமங்கலம் ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டது என்பது புதிய செய்தியாக இருக்கிறது.


பெருங்காமநல்லூர் கலவரம் தொடர்பான தகவல்களை திரட்ட அந்த ஆவணக் காப்பகத்துக்குப் போயிருந்தேன். 200 வருடங்களுக்கு முந்தைய ஆவணங்கள் அங்கே கவனிப்பாரற்றுக் கிடந்ததையும் பார்த்தேன். முக்கிய வழக்குகள் சம்பந்தப்பட்ட அந்த ஆவணங்களை எல்லாம் இன்னமும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல் வைத்திருக்கிறார்கள். அப்படி ஒருவேளை, கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்திய கயிற்றையும் கவனிக்காமல் வைத்திருந்து காணாமல் போய்விட்டதோ என்னவோ!’’ என்றார்.


திருமங்கலம் தாசில்தார் பாஸ்கரன் சமீபத்தில்தான் மாற்றலாகி வந்தவர் என்பதால், துணை தாசில்தார் சரவணனை சந்தித்தோம். பொறுமையாக தகவலை கேட்டுக் கொண்டவர், ஆவணங்கள் பராமரிக்கும் பெண் ஊழியரை அழைத்து, “கட்டபொம்மனை தூக்குல போட்ட கயிறு நம்ம கஸ்டடியிலயாம்மா இருக்கு?” என்றார். “அது எதுக்காம் இப்ப..?” என்று எதிர்க் கேள்வி கேட்டாரே தவிர, அந்த பெண்ணுக்கு விவரம் எதுவும் தெரியவில்லை. 


பின்னர், ரெக்கார்டு செக்‌ஷன்ல வேலை பார்த்து ரிட்டையரான பெரியவர் முருகேசனை சிறிது நேரத்தில் கையோடு அழைத்து வந்தார். “போன வருஷம் டி.டி கேட்டாங்க.. அதுக்கு முந்துன வருஷமும் கேட்டாங்க.. அப்படி ஏதும் நம்மகிட்ட இருக்கறதா தெரியலையே சார்.. 2000 வரைக்கும், காந்திராமன்கிறவரு தான் ரெக்கார்டு செக்‌ஷன்ல இருந்தாரு. அவருக்கு தெரிஞ்சிருக்கலாம். 


ஆனா, ரெண்டு வருஷம் முந்தி அவரு இறந்துட்டாரு” என்றார். இத்தனை விசாரணைகளையும் போட்டு விட்டு, மீண்டும் நம்மிடம் திரும்பிய சரவணன், ‘’இங்க ஏதும் இருக்க மாதிரி தெரியல சார். அப்படியே எங்க பொறுப்புல குடுத்துருந்தாலும், இதுமாதிரியான பொருட்களை முப்பது வருஷத்துக்கு மேல நாங்க வைச்சிருக்க மாட்டோம். தொல்லியல் துறையில ஒப்படைச்சிருவோம். எதுக்கும், தொல்லியல் துறையில விசாரிச்சுப் பாருங்க’’ என்று விடை கொடுத்தார்.



மதுரை தொல்லியல் துறை இணை இயக்குநர் கணேசனை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னபோது, “தவறான தகவல் சொல்லி இருக்காங்க. கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்திய கயிற்றை எங்களிடம் யாரும் இதுவரை ஒப்படைக்கவில்லை’’ என்றார்.


ஆங்கிலேயரால் கட்டபொம்மனை, அவரது வீரத்தை இழந்தோம். அவரது வீரத்தின் நினைவாக மதிக்க வேண்டிய கயிற்றை அலட்சியத்தால் இழந்திருக்கிறோம்!

ஆயுள்காப்பீட்டில் சிறந்த பாலிசி எது?


 
 
 
ஆயுள் காப்பீடு என்பது சில துரதிர்ஷ்டசாலிகளை அதிர்ஷ்டசாலிகள் பலர் பாதுகாப்பதாகும். இதன் மூலம் நாம் முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்கிறோம். இதுவும் ஒரு வகையான சேவை போன்றதுதான்.


இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள். காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.


இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.
மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால கமிட்மெண்ட். நாம் இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட பிளான். நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.


பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும், மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. அது மிகவும் தவறானது ஏனென்றால் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.


நிறைய பேருக்கு நம்மிடம் தான் போதுமான பணம் உள்ளதே எதற்கு நமக்கு இன்சூரன்ஸ் என்ற கேள்வி உள்ளது. அதற்கான பதில் இது தான்.
ஒரு வேளை நாம் இறந்தால், நம்முடைய குடும்பம் தற்போழுது உள்ள நிலையிலே இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நிதிச் சிக்கலில் இருந்து விடுபட நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.


இன்று பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவையான இன்சூரன்ஸ் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. மேலும் பலருக்கு எவ்வளவு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. சிலர் 5 பாலிசிகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் போதுமான தொகைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். இன்ஷூரன்ஸில் பல வகை உள்ளது. மிகவும் பிரபலமானது என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணிபேக் பாலிசி. இது நீண்ட கால பிளான் 20 முதல் 25 வருடம் வரை. ஆனால் வட்டி குறைவு மேலும் சரண்டர் செய்தால் நாம் நிறைய பணம் இழக்க வேண்டி வரும்.


உதாரணமாக நம்முடைய காலில் சிறிய கட்டி வந்தவுடன் அதை அப்புறப்படுத்தாமல் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றால் காலையே எடுக்கவேண்டி வரும். முதலிலே இந்த மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசியை புரிந்து கொண்டால் சரண்டர் செய்வது நல்லது. தெரிந்தும் 20 வருடம் கட்டுவது காலை இழப்பதற்குச் சமமாகும்.


பணத்தை இழக்க விரும்பாமல் 20 வருடம் கட்டிய பின்பு வரும் தொகை மிகக் குறைவு. எனவே இந்த மாதிரி பாலிசியைத் (traditional) தவிர்ப்பது நல்லது.
அடுத்ததாக ULIP பாலிசி இது. இது பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப நம்முதலீடு இறங்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாலிசியில் ப்ரீமியம் அதிகம் ஆனால் லைப் இன்ஷுரன்ஸ் கவரேஜ் குறைவு. இதையும் தவிர்ப்பது நல்லது.


பின்பு எதுதான் நல்ல பாலிசி என்கிறீர்களா? டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி தான்.
உதாரணமாக ஒருவருக்கு 30 வயது என்று எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு 60 வயது வரை கவர் செய்யக்குடிய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்பட்சத்தில், பிரீமியமாக 18,000 ருபாய் செலுத்தினால் போதும்.


தற்போழுது ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் வந்து விட்டது. இதற்கு முகவர்கள் உதவ மாட்டார்கள். நாமே எல்லாவிதமான கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல வேண்டும். இது பெரும்பாலும் விஷயம் தெரிந்தவர்களுக்கு பயன்படும். பொதுவாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 12 முதல் 15 மடங்கு அளவுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவர் வருடம் 5 லட்சம் சம்பாதித்தால் அவர் 60 முதல் 75 லட்சம் வரை டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.


பிரீமியம் குறைவு என்றவுடன் எல்லோரும் ஒ.கே. என்று சொல்லுவீர்கள், பின்பு நீங்கள் உயிரோடு இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று சொன்னால் எனக்கு இந்த பாலிசி வேண்டாம் என உடனே சொல்லிவிடுவார்கள். இது தவறு. சரியான பாலிசியை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்வது நல்லது. 


 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top