2050ஆம் ஆண்டில் இந்திய
அரசை கைப்பற்றுவது என்பதுதான்
மாவோயிஸ்டுகளின் நீண்டகால
திட்டம் என்று முன்னாள் உள்துறை
செயலர் ஜி.கே. பிள்ளை
தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பெருந்தாக்குதல் நாட்டை அதிர வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையை சத்தீஸ்கர் மாநிலத்தில் இறக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மாவோயிஸ்டுகள் இலக்கு வைத்து தொடங்கியிருக்கும் வேட்டை எங்கே போய் முடிகிறதோ தெரியவில்லை.
இது தொடர்பாக ஆங்கில நாளேட்டுக்கு முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை அளித்துள்ள பேட்டியில், இந்திய மத்திய அரசை உடனடியாக தூக்கி எறிந்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது மாவோயிஸ்டுகள் திட்டம் அல்ல.. அது அவர்களது கனவு. ஜனநாயகத்தை சீர்குலைப்பது என்பது அவர்களது நீண்டகால செயல்திட்டம்.
2050ஆம் ஆண்டு இந்திய அரசைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம். மாவோயிஸ்டுகளின் உள்வட்ட ஆவணங்களில் இத்திட்டம் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நிச்சயமாக முறியடிக்கும்.
தூக்கி எறியப்பட்ட மாவோயிஸ தத்துவம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறைவாக இருக்கிறது. மக்கள் நலக் கொள்கைகள் என்ற அடிப்படையில் அப்பாவி மக்களை தம்வசப்படுத்துகின்றனர் மாவோயிஸ்டுகள். ஆனால் அது போலியானது. சீனா உள்ளிட்ட கம்யூனிச நாடுகளிலேயே மாவோயிஸ தத்துவம் தூக்கி எறியப்பட்டுவிட்டது.
ஆண்டுக்கு ரூ1200 கோடி வசூல் மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு ரூ1200 கோடியை சுரங்க நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். தொலைதூர இடங்களுக்கான போக்குவரத்துகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்கினால் அவர்கள் நிச்சயம் பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவர்.
45 ஆயிரம் போலீசார் தான்..
டெல்லியைவிட 5 மடங்கு பெரிய பிரதேசம் பஸ்தார் பிரதேசம் மட்டும். டெல்லியிலோ 95ஆயிரம் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கே 45 ஆயிரம் போலீசார்தான்..