கும்மிப்பாடல்களின் அமைப்பு:-
                ஆதிமனிதன்   என்று தோன்றி, அறிவுநிலையில் விளக்கம் பெற்றானோ அன்றே அவனுக்குள் கலை   ஆர்வம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். கருத்தை உடனே வெளிப்படுத்த உதவும்   ஆடலும் பாடலும் அவனுடைய தொடக்கக்காலக் கலைகளாக அமைந்திருக்க வேண்டும்.   பாடல் இசையை  அடிப்படையாகக் கொண்டது. பாடலுக்கேற்ப ஆடும் ஆட்டம் உணர்ச்சியை   அடிப்படையாகக் கொண்டது. மொழி வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னே தன்  உணர்ச்சிப்  பெருக்கை ஒலி வடிவங்களாக்கி ஓசையெழுப்பியிருப்பான். அதுவே  காலப்போக்கில்  வாய்மொழிப்பாடலான நாட்டுப் புறக்கலையாக உருவாகியுள்ளது  எனலாம். மொழிச்  சிந்தனை எதுவும் இன்றி உணர்ச்சிக் கோலமாக எழுந்த  ஒலியமைப்புடைய பாடல்களே  நாட்டுப்புறப் பாடல்களின் முதல்நிலை என்று  கூறலாம். இவ்வகையான  நாட்டுப்புறப் பாடல்களுக்கு மக்களின் மனதைக் கவரும்  நயமான தன்மைகள் இயல்பாக  அமைந்திருந்தன.   
                தொல்காப்பியர்   குறிப்பிடும் பண்ணத்தி, பிசி எனும் பாடல் வகைகள் நாட்டுப்புற மக்களின்   வாய்மொழிப் பாடல்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.....என்பர் ஆய்வாளர்.   பாணர்கள் போர்க்களத்திலும், காதற்களத்திலும் பாடியுள்ள குறிப்புகள்   ஏட்டிலக்கியத்தில் காணப்படுகின்றன. போர்ப் பாடல்கள் வீரவுணர்வு மிக்கப்   புறப்பாடல்களாகவும், காதற் பாடல்கள் இன்பவுணர்வு கொண்ட அகப் பாடல்களாகவும்   தான் இருக்கவேண்டும். இவை இரண்டும் மனிதனின் இயல்பான, உணர்வுகள். இவற்றையே   பானர்கள் தங்கள் வாய் மொழிப் பாடல்களில் பாடியிருப்பர். அவற்றைத்தானே   புலவர்களும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடியுள்ளனர். ஏட்டிலக்கியமான   சங்கப்பனுவலுக்கு வாய்மொழிப் பாட்டிலக்கியமான பாணர் பாடல்கள்   வழிவகுத்துள்ளன என்று கருதுவது பொருத்தமாகும் எழுத்திலக்கியத்தின்   நாற்றாங்காலாக வாய்மொழிப் பாடல்கள் அமைகின்றன   
சிலப்பில் வாய்மொழிப் பாடல் அமைப்புகள்:  
                சிலப்பதிகாரத்தில்   இடம் பெற்றுச்சிறந்துள்ள கானல்வரி, வேட்டுவரி, ஆய்ச்சியர் குரவை,   ஊர்சூழ்வரி, குன்றக் குரவை, வள்ளைப்பாட்டு, கந்துவரி, முதலியவை வாய்   மொழிப்பாடல் அமைப்பை உடையவை. திருவாசகத்தில் வரும் திருப்பொற்சுண்ணம்,   தெள்ளேணம்  கொட்டமோ, திருப்பூவல்லி, திருப்பொன்னூசல் யாவும்  வாய்மொழிப்பாடல்களாகப்  பாடப்பட்டவை. இடைக்காலத்தில் எழுந்த  சிற்றியக்கியங்களான பள்ளு, குறவஞ்சி  போன்றவையும் வாய்மொழிப் பாடல்  அமைப்புக்கொண்டவை. நாட்டுப்புறப்பாடல்கள்  உணர்ச்சிகளை அப்படியே வெளியிட்டு  விடுகின்றன. என்றும்,  நாட்டுப்புறப்பாடல்கள் காலங்கடந்தும் வாழ்வதற்குக்  காரணம் மக்கள்  நெஞ்சங்களில்  பசுமரத்தாணி போல் பதியும் தன்மை அவற்றிற்கு  இருப்பதனால் தான் என்றும்  குறிப்பிட்டுள்ளார். பழைய பண்பாட்டின்  கருவூலமாய் நாட்டுப் புறப்பாடல்கள்  துலங்கும் தன்மையுடையவை.  
கும்மிப்பாடல்கள்:  
                கும்மிப்பாடல்களும்   வாய்மொழியாக இருந்து இலக்கிய உருவங்களாக வளர்ந்தவை. தமிழில் அத்தகைய   இலக்கிய பண்புகள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. கும்மிப்பாடலைப்பு பாரதி   போன்ற பலருக்குப் பாடல்கள் புனைய உதவியுள்ளது. பெண்களுக்குரிய   இக்கும்மிப்பாட்டு வகையால் சமுதாயச் சீர் திருத்தக் கருத்துக்களை   வெளிப்படுத்த முடியும் என்பதைத் தெளிவாக உணர்த்தியவர் பாரதியார். பாமர   மக்களின் அறியாமையைப் போக்கவும், சமுதாய விழிப்புணர்வை (Social awareness)   அளிக்கவும் கும்மிவகைப் பாடல்கள் துணைநின்றன. இத்தகைய பயன்பாட்டு வகைகைச்   சார்ந்த மகளிர்கலையாக  வளர்ந்துவரும் கும்மிப்பாடல்களின் அமைப்பு முறையே  விளக்குவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.  
கும்மிப்பாட்டின் அமைப்புமுறை:  
                ஏதாவது   ஒரு இலக்கியப் படைப்பைக் குறிப்பிடத்தக்க ஒரு இலக்கிய இனமாகக் கருத   வேண்டுமானால், அதெற்கெனச் சில அமைப்பு முறைகளும் தனித்துவக் கூறுகளும்   இருக்கவேண்டும்  என்பர் ஆய்வாளர். கும்மிப்பாடல்கள் தனக்கென சில அமைப்பு  முறைகளையும்  கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன.  
"கும்மியடிப் பெண்கள் கும்மியடி - உங்கள்
கூந்தல் குலுங்கிடக் கும்மியடி
நம்மையாளும் விக்கி னேசுவரன் பாதத்தை
நாடிக் கும்மி யடியுங்கடி - நீங்கள்
கூடிக் கும்மி யடியுங்கடி"
கூந்தல் குலுங்கிடக் கும்மியடி
நம்மையாளும் விக்கி னேசுவரன் பாதத்தை
நாடிக் கும்மி யடியுங்கடி - நீங்கள்
கூடிக் கும்மி யடியுங்கடி"
இப்பாடலில்   பெண்களைப் பார்த்து கும்மியடி பெண்கள் என்று வேண்டுவதைக் காணலாம்.  அடுத்து  இப்பாட்டால் தெய்வ வணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதைத்   காணமுடிகின்றது. கும்மிப்பாட்டின் ஆசிரியர் பாடுவது கும்மிப்பாட்டு என்பதை   உறுதியாக வெளிப்படுத்திவிடுகின்றனர். இது கும்மிப்பாடல்கள்  கொண்ட  அமைப்பாகும்.  
சமுதாயச் சீர்திருத்தங்களைக் கும்மிப்பாடல் மூலம் எடுத்துரைத்தல்: 
                "கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி" (பாரதியார் பாடல்கள் ப.211)
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி" (பாரதியார் பாடல்கள் ப.211)
என்ற பாரதியாரின் கும்மிப்பாடல்கள் சமுதாயச் சீர்திருத்தத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு கும்மிப்பாடல்களாக அமைவதைக் காணலாம்.  
கதை சொல்லும் அமைப்பில் கும்மிப்பாடல்:  
                வரலாற்றுச்   செய்தியைக் கும்மிக்கேற்ற ஓசை நயத்துடன் கதையாகப் பாடிக்கொண்டே   கும்மியடிக்கும் பழக்கம் உண்டு என்பதைச் சிவகங்கைச் சரித்திரக் கும்மியால்   அறிய முடிகின்றது.  
"இப்படியாக மருதிருவரும் கும்பினைக் கேற்ற
பிள்ளையா யரசாண் டிருந்தார்
அப்படியாக இருக்கையிலே மன்னர்க்
கழிவ வந்தகைச் சொல்லுகிறேன்" (சிவகங்கைச் சரித்திரக்கும்மி, பதி.தி. சந்திரசேகரன் ப.48)
பிள்ளையா யரசாண் டிருந்தார்
அப்படியாக இருக்கையிலே மன்னர்க்
கழிவ வந்தகைச் சொல்லுகிறேன்" (சிவகங்கைச் சரித்திரக்கும்மி, பதி.தி. சந்திரசேகரன் ப.48)
மக்களுடைய பேச்சுமொழியில் எழுதப்பட்ட வாய்மொழி இலக்கியத் தன்மையுடன் அமைவதைக் காணலாம்.  
அறிவுரை கூறுவதாக அமையும் கும்மிப்பாடல்கள்:  
                மக்களை நோக்கி அறிவுரை கூறுவதாக அமையும் கும்மிப்பாடல்கள் சமுதாயத்தில் பண்பாட்டு முன்னேற்ற நோக்கம் கொண்டவை எனலாம்.  
"மாதர் நடக்கையைச் சொன்னது மல்லாமல்
வந்திடுந் தீங்கையும் நன்குரைத்தேன்
பாதகி யாசையை நீக்கிச் சிவஸ்துதி
பண்ணுவா யெப்போதும் மானிடனே... (விலைமாதர் கும்மி - பாடல் 44)
வந்திடுந் தீங்கையும் நன்குரைத்தேன்
பாதகி யாசையை நீக்கிச் சிவஸ்துதி
பண்ணுவா யெப்போதும் மானிடனே... (விலைமாதர் கும்மி - பாடல் 44)
விலைமாதர் ஒழிப்பு அவசியம் என்று உரைப்பதைக்காணலாம்  
"கற்புள்ள மாதர் குலம் வாழ்க - நிறை
கற்பை யறிந்தவரே வாழ்க
தற்பரனைப் போற்றிக் கும்மியடி - குரு
சிற்பரனைப் போற்றிக் கும்மியடி" (வாலைக் கும்மி - பாடல் 45)
கற்பை யறிந்தவரே வாழ்க
தற்பரனைப் போற்றிக் கும்மியடி - குரு
சிற்பரனைப் போற்றிக் கும்மியடி" (வாலைக் கும்மி - பாடல் 45)
என்ற கும்மிப்பாடல் கற்புள்ள மாதரைப் போற்றுவதாக அமைந்துள்ளது.  
சந்தவோசையுடைய கும்மிப்பாடல்:  
                சந்தவோசை மிக்க கும்மிப் பாடல்கள் மக்களை எளிதில் கவரும் ஆற்றல் உடையவை. வள்ளிவேடனைப் பார்த்துக் கூறுவதாக அமையும்.  
"எட்டாத தேனுக் கொரு நொண்டி பண்ணாந்து
கொட்டாவி விட்ட கதைபோல
ஏங்கிக் கணைதாங்கிப் பனைவாங்கி மிகவோங்கி
எதிரென் முன்னே நில்லாதே வேடுவனே" (முருகர் ஒயிற்கும்மி. பாடல் 136)
கொட்டாவி விட்ட கதைபோல
ஏங்கிக் கணைதாங்கிப் பனைவாங்கி மிகவோங்கி
எதிரென் முன்னே நில்லாதே வேடுவனே" (முருகர் ஒயிற்கும்மி. பாடல் 136)
இப்பாடல் கேட்போரை மகிழச் செய்வதாகும்.  
வருணனை மிக்க கும்மிப்பாடல்:  
                பாண்டவர்   வல்லியாற்றுக் கரையைக் கடந்து தெய்வ மலையைக் கண்ணாரக் கண்டார்கள் என்ற   செய்தியைச் சொல்ல வந்த ஆசிரியர் அம்மலையையும், மலைசூழ்ந்த சோலையையும் மிக்க   நயத்துடன் வருணனை செய்துள்ளார்.  
"மாங்கனி தேங்கனி காய்ந்திருக்கு மங்கே
மாதளை மல்லிகை பூத்திருக்கும்
தாங்காத வாழைக் குலைசாயு மங்கே
தாழைமலர் வாசமே பாயும்" (பஞ்சபாண்டவர் வைகுந்தக்கும்மி பாடல் 227)
மாதளை மல்லிகை பூத்திருக்கும்
தாங்காத வாழைக் குலைசாயு மங்கே
தாழைமலர் வாசமே பாயும்" (பஞ்சபாண்டவர் வைகுந்தக்கும்மி பாடல் 227)
இவ்வருணனைப் பகுதி கும்மிப்பாடலுக்கு இலக்கிய இன்பத்தைக் கொடுத்து நிற்பதைக் காணலாம்.  
முடிவுரை:  
                கும்மியைத்   தமிழருக்கே உரிய கலையாகக் கூற முடியவில்லை. ஆந்திராவிலுள்ள கொப்பியும்   கேரளாவிலுள்ள கை கொட்டிக்களி, பிராமணிப்பாட்டு ஆகியவை கும்மிப் பாடலுடன்   நெருக்கமான உறவு கொண்டுள்ளன. கன்னட நாட்டிலும் கும்மியைப் போன்று ஒரு ஆடல்   நடைபெறுகின்றது. ஆகையினால் கும்மிப்பாட்டை ஒரு திராவிடக் கலை என்று   கூறுவதே பொருத்தமாகும். குஜராத் நாட்டில் உள்ள கர்பா நடனமும் ராஜஸ்தானில்   நடக்கும் கும்மார ஆட்டமும் கும்மியுடன் தொடர்பு கொண்டதாகத் தோன்றுகின்றன.   
                பெண்கள்   கலையாக வளர்ந்து வரும் கும்மிப் பாடல்கள் தனக்கென்று சில கூறுகளை   அமைத்துக் கொண்டு வளர்ந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. கணினி உலகில்   வாழும் இக்காலக் கட்டத்திலும் கிராமங்களில் காணும் பொங்கலன்று பெண்கள்   அனைவரும்  குறிப்பிட்ட ஒரு பொது இடத்தில் கூடி பல்வகைபாடு பொருளுடன் கூடிய  கும்மிப்  பாடல்களைப் பாடி கும்மியடிப்பது கண்ணுக்கும், கருத்துக்கும்  இன்பம்  விளைவிப்பதாகும்.



07:42
ram
 Posted in: