நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார்.மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார்.தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார்.பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு, திருச்சி வேலுசாமி, தமிழருவி மணியன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன், கலைக்கோட்டுதயம் பால்வியூமன்,நடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, விவேக், ராஜேஷ், டைரக்டர் பாரதிராஜா மகன் மனோஜ், விக்னேஷ், டைரக்டர்கள் பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், பாலா, பாலாஜிசக்திவேல், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.
திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன.