.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 26 September 2013

குரங்கும்..முதலையும் (நீதிக்கதைகள் )




ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்.அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது.


ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து'நாவல் பழம் மிகவும் ருசியானதா?' எனக் கேட்டது.


குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.முதலையும் பழத்தை ருசித்து விட்டு..குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது.


முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம்..'இப்பழங்கள் இவ்வளவு இனிக்கிறதே..இதே பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த குரங்கின் குடல் எவ்வளவு இனிக்கும்! அது எனக்கு வேண்டும்." என்றது.


முதலையும் குரங்கிடம் வந்து நயவஞ்சகமாக..'குரங்கே!..நாவல் பழம் தந்த உனக்கு என் மனைவி விருந்திட விரும்புகிறாள்..வா.." என்றதும்.குரங்கும் மகிழ்ந்து..முதலையின் முதுகில் உட்கார்ந்து ஆற்றில்..முதலையின் இருப்பிடம் செல்லத் தொடங்கியது.
 

பாதி தூரம் வந்ததும்..இனி குரங்கால் நீரில் தனித்து ஓட முடியாது என முதலை..'மட குரங்கே!..உண்மையில் விருந்து உனக்கல்ல. என் மனைவிக்குத் தான்.அவள்தான் உன் குடலை சாப்பிட விரும்புகிறாள்" என்றது.


சற்று நேரம் யோசித்த குரங்கு..'முதலையே அதை முதலிலேயே சொல்லக் கூடாதா..நான் என் குடலை கழட்டி மரத்தில் அல்லவா வைத்திருக்கிறேன்..திரும்ப மரத்திற்கு என்னைக் கொண்டு போ. குடலை எடுத்து மாட்டிக்கொண்டு வருகிறேன்..' என்றது.


முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது


வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..'முட்டாள் முதலையே. குடலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.


முதலையும் ஏமாந்து திரும்பியது.


நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.


ஆபத்துக் காலத்தில் நம் மூளையை உபயோகித்து..ஆபத்திலிருந்து விடுபட வேண்டும்.
 

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top