பார்வையற்றோர் காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves) பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித மூளையில் உள்ள ஒளி உணரும் பகுதி, காட்சிகளை அப்படியே படம் பிடித்தாற்போல் உணர்ந்து கொள்கிறது.
இது குறித்து ஜெருசலேமிலுள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அமிர் அமேதி கூறுகையில்;
இந்த நவீனக் கருவியில் ஒருவித கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா, காட்சிகளின் ஒளி அலைகளை உள்வாங்கி பதிவு செய்துகொள்ளும். இதனுள் உள்ள, ‘விஷுவல் வேர்டு ஃபார்ம்’ (Visual Word Form) எனும் தொழில்நுட்பம் காட்சிப் பதிவுகளுக்கான ஒலி மற்றும் ஒளியியல் மொழிகளைக் கொண்டுள்ளது.
எனவே ஒளி அலைகளை (Light waves) ஒலி அலைகளாக (Sound waves) மாற்றி மூளைக்கு அனுப்பும். மனித மூளையிலுள்ள காட்சிகளை உணரும் பகுதியில் இவை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் பார்வையற்றவர்களுக்கு காட்சிகளை நேராகக் காண்பது போன்ற உணர்வு ஏற்படும். மேலும் இந்தக் கருவியில் உள்ள, சென்சரி சப்ஸ்டியூசன்கள் காட்சிப் பதிவுகளை, ‘விஷுவல் டூ ஆடியோ - ஆடியோ டூ விஷுவல்’எனும் முறையில் காட்சிகளாக மாற்றம் செய்கிறது. இதற்கு சவுண்ட் ஸ்கேப்" (Sound Scape) என்று பெயர்.
தற்போது முதல் கட்டமாக இந்தக் கருவியை பார்வையற்றவர்களிடம் சோதனை செய்ததில் அவர்களால் காட்சிகளைத் தெளிவாகக் காண முடிந்தது. முதல் கட்ட ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த கட்டமாக முழுப் பணிகளும் முடிந்தபின் கருவியை ஒளி வெளியிடுவோம். இதன் மூலம் பார்வையற்றவர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். அவர்களாலும் இந்த உலகத்தைக் காண முடியும்" என்கிறார் அமிர் அமேதி.