பெங்களூர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண் அதிகாரியை வெட்டி பணத்தை பறித்து சென்ற கொடூர சம்பவம் கடந்த செவ்வாய் அரங்கேறியது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, ஏடிஎம்களின் பாதுகாப்பு பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், சம்பவம் நடந்த 10 நாட்களில் அந்த விஷயம் கிணற்றில் விழுந்த கல்லாக மாறிவிடுகிறது. ஏடிஎம்களுக்கு செக்யூரிட்டிகளை நியமிப்பது, கேமராக்களை பொருத்துவது ஆகிய நடவடிக்கைகளால் பெருமளவில் செலவு ஏற்படுகிறது; அதனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு மாற்று நடவடிக்கையாக, ஏடிஎம்களை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அமைக்கலாம் என்று கடந்த ஆண்டில் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இந்த கருத்து ஏற்கத்தக்கதாக உள்ளது. பாதுகாப்புக்கு தனியாக செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டியதில்லை; பொதுமக்கள் எந்த நேரத்திலும் பணம் எடுக்க செல்லலாம்; வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஏடிஎம்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படாது.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு கைமாறாக குறிப்பிட்ட தொகையை போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வங்கிகள் செலுத்தினால் போதும். இரு தரப்புக்கும் லாபமாக அமையும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு யூனியன் பிரதேசங்களில் மத்திய உள்துறையும், மாநிலங்களில் அரசும் அனுமதி அளிக்க வேண்டும். சிறந்த திட்டமாக தெரிந்த போதும், இது என்ன ஆனது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. இப்போது மீண்டும் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்ட நிலையில், நாடு முழுவதும் ஏடிஎம்களில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எல்லா மாநிலங்களில் இருந்தும் போலீஸ் அதிகாரிகளால் அறிக்கை, பேட்டி வெளியாகிறது.
இதுவும் 10 நாட்களுக்கு பின்னர் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மற்ற மாநில பிரச்னைகளை விட்டு தமிழக ஏடிஎம்களை மட்டும் ஆராய்ந்தால், இங்குள்ள 60 சதவீதம் மையங்களில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றே இணையதளங்கள் கூறுகின்றன.
கேமராக்களையே இன்னமும் வங்கிகளால் அமைக்க முடியாத நிலையில், 3 ஷிப்ட்களுக்கு செக்யூரிட்டிகளை போட்டு, அவர்கள் எப்படி ஏடிஎம்களுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க போகிறார்கள் என்பதை எண்ணி பார்க்கவே முடியவில்லை. வங்கிகளில் பணம் எடுத்து வரும் நிலை இருந்த போது, பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவு. ஏடிஎம்களில் பணம் எடுத்து செல்லும் நிலையில், குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காரணம், பாதுகாப்பு. வங்கிகள், அரசுகள் கவனிக்க வேண்டிய விஷயம்.