தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை கிராண்ட்மாஸ்டர் சர்வதேச ஓபன் சதுரங்க (செஸ்) போட்டித் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. 26 கிராண்ட்மாஸ்டர்கள், 33 சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 118 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று கடைசி சுற்றான 11-வது சுற்று நடந்தது.
இதன் முடிவில் இந்திய வீரர் வி.ஆர். அரவிந்த் சிதம்பரம் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி சுற்றில் சக நாட்டவர் விஷ்ணு பிரசன்னாவுடன் டிரா செய்த 14 வயதான அரவிந்த் சிதம்பரம் மதுரையை சேர்ந்தவர்.
தற்போது சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இந்த போட்டியில் 6 கிராண்ட் மாஸ்டர்களுடன் மோதிய இவர் கஜகஸ்தான், ஆர்மேனியா உள்பட 4 கிராண்ட் மாஸ்டர்களை வீழ்த்தியது சிறப்பு அம்சமாகும்.
இது போன்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் 14 வயது மாணவர் பட்டம் வெல்வது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அரவிந்த் சிதம்பரம் ஏற்கனவே 11, 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தேசிய அளவில் பட்டம் வென்றிருக்கிறார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசாக கிடைத்தது.
உக்ரைன் வீரர் நேவ்ரோவ் வாலோரி, இந்தியாவின் எஸ்.பி.சேதுராமன் தலா 8.5 புள்ளிகளுடன் 2&வது இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வருவாய் நிர்வாகத்துறையின் கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் பரிசுகளை வழங்கினார். விழாவில் சர்வதேச நடுவர்கள் அனந்த ராமன், திருக்காளத்தி, தமிழ்நாடு சதுரங்க சங்க செயலாளர் ஹரிஹரன், போட்டி ஒருங்கிணைப்பாளர் பால் ஆரோக்கியராஜ், போட்டியின் முதன்மை நடுவர் எப்ரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.