.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 14 November 2013

‘மை லார்ட்’ சொல்வது தவறா?

நீதிமன்றங்களில் நீதிபதிகளை பார்த்து வக்கீல்கள், ‘மை லார்ட்’ என்று விளிப்பதும், ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று சொல்வதும் வெள்ளைக்காரன் காலத்து அடிமைத்தனம் என்று கூறி, அதற்கு தடை விதிக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 75 வயது மூத்த வக்கீல் ஷிவ் சாகர் திவாரி தொடர்ந்த இந்த பொது நலன் வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகய் விசாரித்தனர். அவர்கள் கேட்ட கேள்வி, ‘மை லார்ட் என்று அழைக்குமாறு எந்த வக்கீலையும், எந்த நீதிபதியும் கட்டாயப்படுத்துவதில்லையே, பின் எதற்காக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்பதுதான். அதற்கு திவாரி, ‘சில நீதிபதிகள் தங்களை அப்படி அழைக்காத வக்கீல்களின் வழக்குகளை டிஸ்மிஸ் செய்து விடுகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். இதன்பின், நீதிபதி கோகய் இந்த வழக்கு விசாரணையில் இருந்து ஒதுங்கி விட்டதால், வேறொரு பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளைக்காரர் ஆட்சியின் போது, நமது நீதிமன்றங்களில் வெள்ளைக்காரர் நீதிபதியாக இருந்ததால், அவர்களை இந்திய வக்கீல்கள், ‘மை லார்ட்’ என்று அழைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. 19ம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்து நாட்டில் நீதிபதிகளை எல்லோரும் அப்படி அழைப்பது பழக்கமாக இருந்துள்ளது. ஒரு வேளை, எல்லா மதத்திலும் இறைவன் நியாயவானாக உள்ளதால், நீதிபதிகளும் அப்படி நியாயவானாக இருக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டவே ‘லார்ட்’ என்று அழைத்திருக்கலாம்.

இங்கிலாந்து நாட்டில் நீதிமன்றங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தும் முன்பே, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா பயணிகளை கவுரவமாக மதித்து ‘மி லார்ட்’ என்று விளிப்பார்களாம். அதன்பின், பெருமைக்குரியவர்களை ‘மி லார்ட்’ என அழைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அது ஆங்கிலத்தில் நுழையும் போது ‘மை லார்ட்’ ஆனதாகவும் சொல்லப்படுவது உண்டு. இதையெல்லாம் பார்க்கும் போது ‘மை லார்ட்’ என்று அழைப்பது அடிமைத்தனத்தின் சின்னமாக தெரியாது. ஆனாலும், இந்த காலத்திற்கு ஏற்ப நீதிபதிகளையும், மற்றவர்களை போல் ‘மிஸ்டர் ஜஸ்டிஸ்’ என அழைக்கலாம்.

 நீதிபதிகளை ‘மை லார்ட்’ என அழைப்பது கட்டாயம் இல்லாத போது, அதற்கு வழக்கு அவசியமா என தலைமை நீதிபதி கேட்டது சரியானதுதான். இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே 2006ல் ஒரு தீர்மானம் போட்டுள்ளது. நீதிமன்றங்களில், ‘மை லார்ட், யுவர் லார்ட்ஷிப்’ என வக்கீல்கள் அழைக்கத் தேவையில்லை என்பதே அந்த தீர்மானம். வக்கீல்கள் இதை பின்பற்றினாலே போதும்.   

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top