.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 5 December 2013

இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்!

 

எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல் மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இணையத்தை வணிகத்துக்காக முதலில் பயன்படுத்திக்கொண்டவர்கள் போர்னோ படங்களை விற்றவர்கள்தான். எண்ணற்ற ஆபாச வலைத்தளங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில், அதிக ஹிட்கள் பெறும் முதல் இருபது தளங்கள் அனைத்துமே போர்னோ தளங்களாக இருந்தன. பின்னர், கிரெடிட் கார்டு மூலம் மாதாமாதம் சந்தா பெறும் தளங்களாக ஆனவையும் இவைதான். அதன் பின்னர்தான் நியாயமான வணிக நிறுவனங்கள் பலவும் தம் பொருள்களை விற்பதற்கும் சேவைகளைத் தருவதற்கும் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன.

அதேபோல, நைஜீரிய ஏமாற்று வித்தைகளையும் குறிப்பிடவேண்டும். ஏதோ ஓர் ஆப்ரிக்க நாட்டின் சர்வாதிகாரி பல நூறு மில்லியன் டாலர்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதைக் கைப்பற்ற உங்கள் உதவி தேவைப்படுகிறது என்றும், அந்த சர்வாதிகாரியின் துணைவி அன்புடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பார். ஒரே ஒரு சின்ன பிரச்சினை.. முதலில் நீங்கள் கொஞ்சம் பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கி எண்ணுக்கு அனுப்பவேண்டும். பல நூறு மில்லியன் டாலரில் நம் பங்கு கணிசமாக வரும்போது கொஞ்சம் பணத்தைப் பற்றி ஏன் கவலைப்படுவானேன் என்று சிலர் பணத்தை அனுப்பியும் விடுவார்கள். இப்படித் தொடங்கி இன்னும் பல நூறு ஏமாற்று வித்தைகள் இணையத்தில் உலா வருகின்றன.

மற்றொரு பக்கம், இணையத் தேடு பொறிகள் சர்வசக்தி வாய்ந்தவையாக ஆனபோது, ‘சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன்’ என்னும் கருத்து முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கூகுளில் நீங்கள் ஒரு விஷயத்தைத் தேடும்போது ஒரு லட்சம் சுட்டிகள் கிடைக்கும். ஆனால் முதலில் வரும் சில சுட்டிகளைத் தாண்டி நீங்கள் போகமாட்டீர்கள். எப்படி முதல் சில சுட்டிகளில் ஒன்றாக நாம் வருவது என்ற நோக்கில் பலரும் தத்தம் இணையப் பக்கங்களில் சிறுசிறு மாற்றங்களைச் செய்யத் தொடங்கினர். இதைத் தடுக்கும் நோக்கில் கூகுள் போன்றோர் தங்கள் தேடுதல் அல்காரிதத்தில் பல மாற்றங்களைச் செய்து, உண்மையிலேயே உபயோகமான தளங்கள் மட்டும் முதலில் வருமாறு பார்த்துக்கொண்டனர். ஆனாலும் இந்தத் திருடன் - போலீஸ் விளையாட்டு இன்னும் தொடர்ந்து நடக்கிறது.

இதுபோன்ற தகிடுதத்தங்கள் ஒருபுறம் இருக்க, இப்போது சமூக வலைத்தளங்கள் குறித்து வெளியே கசியும் சில செய்திகள், இணைய ஊடகவெளி மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும்வண்ணம் உள்ளன. ஓர் இந்திய இணையதளம் வெளியிட்டுள்ள ஸ்டிங் ஆபரேஷன் இதுகுறித்து பல குறிப்புகளை நமக்குத் தருகிறது.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களை சாதாரண மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லும் களமாகவும் நண்பர்களுடன் உரையாடும் இடமாகவும் வைத்திருக்கின்றனர். இது ஒருவிதத்தில் மக்களாட்சி முறைக்கு வலு சேர்க்கும் விதமாகவும் உள்ளது. ஆனால் பல அரசியல்வாதிகளும் தொழில் நிறுவனங்களும் இவற்றை வேறு கண்களுடன் பார்க்கின்றனர். அரசியல், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும் எதிரிகளை ஒழிக்கக் காய் நகர்த்தவும் இணையத்தைப் பயன்படுத்த இவர்கள் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களுக்கு உதவுவதற்கு என்றே பல இணைய மார்க்கெட்டிங் நிறுவனங்களும் முளைத்துள்ளன.

ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளில் பாஜகவின் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் காங்கிரஸின் மத்திய அமைச்சர் சசி தரூரையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இவர்களுடைய ட்விட்டர் கணக்கில் இவர்கள் சொல்வதையெல்லாம் முறையே 28.8 லட்சம் பேரும் 19.8 லட்சம் பேரும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இப்படிப் பின்பற்றுவர்கள் எல்லோருமே உண்மையானவர்கள்தானா? ட்விட்டர் ஆடிட் போன்ற சில தளங்கள், இம்மாதிரியான அரசியல்வாதிகளைப் பின்பற்றும் பல கணக்குகள் போலியானவை என்கின்றன. அதாவது அவை உண்மையான மனிதர்களாக இல்லாமல் வெறும் மாயக் கணக்குகளாக இருக்கலாம்.

ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவென்றே மாயக் கணக்குகளை விலைக்கு விற்க பல ஏஜென்சிகள் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. இந்த ஏஜென்சிகள் ஒளிந்து மறைந்தெல்லாம் இயங்குவதில்லை. வெளிப்படையாகவே இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஸ்டிங் ஆபரேஷன் சொல்லும் தகவலும் இதுதான்.

நிழல் உலக தாதா ஒருவரைச் சந்தித்து ‘என் தொழில்முறை எதிரியுடைய ஃபோட்டோவும் முகவரியும் இவைதான். இவரைப் போட்டுத்தள்ளிவிடு, இந்தா பணம்’ என்று ஒருவர் சொல்வதைப்போல, ஒரு தொழிலதிபர் ஓர் இணைய மார்க்கெட்டிங் ஏஜென்சியை அணுகி பிசினஸ் பேசலாம். பணம் கைமாறும். அந்த இணைய மார்க்கெட்டிங் ஏஜென்சி, அந்தக் குறிப்பிட்ட தொழிலதிபருடைய நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டை ஒரே நாளில் சில ஆயிரம் மாயக் கணக்குகள் பின்பற்றுமாறு செய்வார்கள். அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் தகவல்களுக்கெல்லாம் சில மாயக் கணக்குகள் பொய் லைக்குகள் போட்டுக்கொண்டே இருக்கும்.

அதோடு விடமாட்டார்கள். எதிரி நிறுவனம் பற்றிப் பொய் வதந்திகளைப் பரப்பும் ஓர் இணையதளம் இரவோடு இரவாகத் தோன்றும். ஊர் பேர் போடாமல் தெருவில் ஒட்டப்படும் கண்டன போஸ்டர்போல அல்லது அலுவலகத்துக்கு வரும் மொட்டைக் கடுதாசிபோல. பின்னர், மாயக் கணக்குகள் இந்தப் பொய்த் தகவல்களை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பரப்பும். எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை உண்டு.

இந்தத் தகவல்களை உண்மை என்று நம்பும் உண்மையான பலரும்கூட இவற்றை ஃபேஸ்புக்கில் லைக் செய்து, ட்விட்டரில் ரீட்வீட் செய்து மேலும் மேலும் பரப்புவார்கள். மின்னஞ்சல்மூலம் பல்லாயிரம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

இன்று, ஓர் அரசியல்வாதியின் பிம்பத்தைக் கட்டி எழுப்புவது முதல், ஒரு முழு அரசியல் பிரச்சாரத்தையுமே இணையத்தின் மெய்நிகர் உலகில் செய்துவிட முடியும். அந்த அரசியல்வாதிக்கென்று ஓர் இணையதளத்தையும் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளையும் தொடங்குவதிலிருந்து இந்தப் பிரச்சாரம் ஆரம்பிக்கும். பின்னிருந்து இயக்கும் மார்க்கெட்டிங் ஏஜென்சியின் உதவியால் அரசியல்வாதியின் இணைய பிம்பம் வலுவாகிக்கொண்டே போகும். அவர் அனைத்தைப் பற்றியும் கருத்து சொல்வார். அறிக்கைகள் விடுவார். அவரது எதிரிகள் குறித்து இணையத்தில் வம்பும் வதந்தியும் பெருகும். இதன் நீட்சியாக அவர் தேர்தலில் ஜெயித்தாலும் ஜெயிக்கலாம்.

இவற்றையெல்லாம் புலன்விசாரித்து, உண்மையைக் கண்டுபிடிப்பது சாத்தியமே. ஆனால் நேரம் ஆகும். அந்த நேரத்தில் தேர்தலே நடந்து முடிந்துவிடலாம்.

கெடுமதியாளர்கள் கையில் சிக்கிச் சின்னாபின்னமாகும் சமூக வலைத்தளங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட நேரிடும். ஒரு கட்டத்தில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும்.

நிஜ வாழ்க்கையில்கூட எதை நம்பலாம் என்ற தெளிவு நம்மிடம் ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் இணைய வாழ்க்கையில் எதை நம்புவது என்று தெரியாமல் தடுமாறும் நிலையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ள இணையம், சாதாரண மக்களைவிட கிரிமினல் எண்ணம் கொண்டவர்களுக்குச் சாதகமாக ஆகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top